Reply – Re: திரௌபதி ஸ்வயம்வர போட்டியில் கர்ணன் நிஜமாகவே வென்றானா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: திரௌபதி ஸ்வயம்வர போட்டியில் கர்ணன் நிஜமாகவே வென்றானா?
— by தாமரை தாமரை
நாணேற்றுவது என்ற போட்டி இராமாயணத்தில் மட்டுமே வந்தது. காரணம், அது சிவதனுசு... அதை தூக்கவே இயலாது.

'சிலை இது; சிலீமுகங்கள் இவை; கடுந் திரிகை வேகத்து
இலை முகத்து உழலுகின்ற எந்திரத் திகிரி நாப்பண்
நிலை இலா இலக்கும் அஃதே; நெஞ்சுற யாவன் எய்தான்,
கலை வலீர்! அவற்கே அந்தக் கன்னியும் உரியள்' என்றான்.

இப்படித்தான் த்ருஷ்டத்துய்மன் போட்டியை அறிவித்தான்.


ஒரு பெரிய தூணை நிறுவினார்கள். அதன் உச்சியில் ஒரு சுழலும் அமைப்பு. அதில் மீன் உருவம் அமைக்கப்பட்டது. இந்த மீன் உருவம் சுழன்று கொண்டே இருக்கும்.

அதற்குச் சற்று கீழே தட்டு போன்ற ஒரு அமைப்பு மீன் சுற்றும் திசைக்கு எதிர்திசையில் சுழலும். கீழிருந்து நோக்கினால் தட்டு முழுமையாக மீனை மறைத்திருக்கும். அந்தத் தட்டில் ஒரே ஒரு துளை இருக்கும். அம்பானது அந்த துளையின் வழி சென்ற் மீனின் கண்ணைத் தாக்க வேண்டும்.அதாவது நாணேற்றி, அம்பைப் பொருத்தி, சுழலும் தட்டின் ஓட்டை வழியே தெரியும் மீனின் கண்ணை அது ஓட்டைக்கு நேராக வரும்பொழுது அடிக்க வேண்டும். மிகக் கடினமான போட்டிதான்.

"பெரும் வீரம் கொண்ட இவர்கள் அந்தக் குறியை அடிப்பார்கள். இவர்களில் யாரெல்லாம் அக்குறியை அடிக்கிறார்களோ, அவர்களில் ஒருவரை நீ உனது கணவராகத் தேர்ந்தெடுக்கலாம்."

அதாவது போட்டியில் வென்றாலும் திரௌபதி விரும்புபவனையே அவள் மணப்பாள் என்றும் த்ருஷ்டத்துய்மன் சொல்கிறான்.

அந்த வில்லில் நாணேற்றியவர்கள் இருவரே. கர்ணன் மற்றும் அர்ச்சுனன். கர்ணனின் குறி திரௌபதியின் வசனத்தால் மனம் தடுமாறியதால் நூலளவு தவறியது. அதனால் துளையில் செல்லாமல் அம்பு தெறித்தது. இப்படிச்  நடுவு நிலைப் பதிப்புகளில் இருக்கும். கர்ணனை தூக்கி வைக்கும் பதிப்புகளில் கர்ணன் வில்லை எறிந்ததாக எழுதப்பட்டிருக்கும். பாண்டவர் புகழ் பாடும் பதிப்புகளில் கர்ணன் நாணேற்றும் போது வில் நிமிர்ந்து கர்ணனை தூக்கி அடித்ததாக இருக்கும்.

வில்லிப்புத்தூரார் எழுதியதில் வில் தெறித்து கர்ணன் வீழ்ந்தான் என எழுதி இருக்கிறார்.

//கலை வருத்தம் அறக் கற்ற கன்னன் என்னும் கழற் காளை,
                      அரன் இருந்த கயிலை என்னும்
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன, மன் அவையில்
                      வலியுடனே வந்து தோன்றி,
நிலை வருத்தம் அற நின்று, பரிய கோல நீள் வரி நாண்
                      மயிர்க்கிடைக்கீழ் நின்றது என்ன,
சிலை வருத்தம் அற வளைத்து, வளைந்த வண்ணச் சிலைக் கால்
                      தன் முடித் தலையைச் சிந்த, வீழ்ந்தான்.//

அதைக் கற்கவில்லை இதைக் கற்கவில்லை என எண்ணி வருத்தப்படாத அளவிற்கு அனைத்து கலைகளையும் முழுமையாகக் கற்ற கர்ணன் என்னும் கழல் அணிந்த காளை, சிவன் வீற்றிருக்கும் கயிலை மலையை இராவணன் அனாவசியமாக தூக்கிய அசுரன் இராவணன் போன்று, அரச சபையில் மிக்க வலிமையுடையவனாய் வந்து நின்றான். தனது நிலையில் சற்றும் சிரமமின்று நின்று, வில்லை நன்கு வளைத்து மொத்தமான அழகிய நீண்ட வரிகளையுடைய நாண் மேல் முனையை எட்ட ஒரு மயிரிழை அளவு இருக்கும் பொழுது வளைந்த வில் நிமிர்ந்து அவன் முடியணிந்த தலையைத் தாக்க வீழ்ந்தான் என்று சொல்லி விட்டார் வில்லிப்புத்தூரார். காரணம் வில்லி பாரதத்தில் வில்லனே கர்ணன்.

ஆனால் எந்த பாரதத்தின் படியும் கர்ணன் போட்டியில் இலக்கை அடிக்கவில்லை. எனவே வெல்லவில்லை.

இப்பொழுது மக்களுக்கு கொறிக்க ஒரு சுவையான தகவல்.

பாண்டவர்கள் திரௌபதியை போட்டியில் வென்றார்கள். அதே பாண்டவர்கள் சூதாட்டப் போட்டியில் திரௌபதியை தோற்றார்கள். பந்தயப் பொருளாய் வெல்லப்பட்டவள் பந்தயப் பொருளாய் தோற்கப்பட்டாள். எதன் வழியே வந்ததோ, அதே வழியே சென்றது. கீதை... கீதை...

அப்பன் போட்டிப் பொருளாய் அறிவித்தபோது ஆவேசம் யாருக்குமில்லை. ஆனால் கணவன் வைத்தபோதுதான் எத்தனைக் கொந்தளிப்புகள்? துருபதன் மீது யாருக்குமே கோபமில்லை. தர்மனை மட்டும் திட்டிக் கொண்டிருக்கிறோம்.

கணவன்மார்கள் ரொம்பவும் பாவம்தானே!