Reply – Re: தமிழ்ப் பற்று - தமிழ் வள்ளுவர்
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: தமிழ்ப் பற்று - தமிழ் வள்ளுவர்
— by R. Santhanakrishnan R. Santhanakrishnan
இந்த கட்டுரையின் விளக்கங்கள் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியார்
தெய்வத்திரு. அ.ச.பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் பொருளுரையை அடிப்படையாகக் கொண்டது.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

தமிழ் பற்றாளர்கள் இந்த குறளை எப்படி ஏர்க்கப்போகிரீர்கள், திருவள்ளுவரை உண்மையாக பின்பற்றவிரும்பினால் அவர் கூரும் 1330 குறளையும் ஏற்று பின்பற்றவேண்டும், அதை விடுத்து தமிழ் பற்று என்று சொல்லி வள்ளுவத்தை ஏர்பவர்கள். ஒருவேளை. நாத்திக தமிழனாக இருந்தால் கடவுளின் இருப்பை காட்டும் குறளிற்கு தனது கடவுள்மறுப்பு கொள்கையின் மீதுள்ள பற்றினால் அவரின் சில குறளை ஏற்க்க மறுப்பதும், ஒருவேளை. ஆஸ்திக தமிழனாக இருந்தால் வள்ளுவர் தமிழ் பற்றை கூராததர்க்கு வருந்துவதும் வள்ளுவரை வருந்தவே செய்யும், குறளை உள்ளது உள்ளபடி ஏற்கும் பக்குவம் ஒவ்வொரு தமிழனுக்கும் வருமானால் அதுவே வள்ளுவருக்கு நாம் செய்யும் பிரதி உபகாரமாய் இருக்கும்,

திருக்குறளின் நோக்கம் மனிதர்களை நன்னெறியில் செலுத்தி இறையருள் பெற வைக்க வேண்டும் என்பது தான், உயிர்கள் கட்டறுத்து வீடு பெறும் நெறியை உணர்த்துவனவே உண்மை நூல்களாகும் எனத் தமிழறிஞர் கூறுவர். இந்த வகையில் திருக்குறள் உயர்ந்த இலக்கியம்.
திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்னும் முதல் அதிகாரத்தில் மூன்று குறள்களிலே (1,5,6) இறைவனின் சிறப்பான நிலையையும் அவனை நாடும் சிறப்பையும் சொல்லி, மீதி ஏழு குறள்களிலே சரணாகதி தத்துவத்தைக் கூறுகிறார் வள்ளுவர். வைணவ இலக்கியங்களான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும், பகவத்கீதையும், ஸ்ரீமத் பாகவதமும் இந்த தத்துவத்தையே வலியுறுத்துகின்றன. பகவான் ஸ்ரீசைதன்யர் ஸ்ரீமத் பாகவத தர்மமாகிய சரணாகதியையும், மேற்கொண்டு இறைத் தொண்டையும் இந்தியா முழுவதும் பரப்பினார். ஒரு நூலின் குறிக்கோள் அறியும் பொருட்டு, முதலிலிருந்து கடைசி வரை ஆராய்ந்து பார்த்துப் பொருள் கொள்ளல் வேண்டும்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் உபதேசித்த பகவத்கீதையின் உண்மைகளை தெய்வப்புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளுக்குள்ள பல பெருமைகளுள் தலையாய பெருமை ஆகும்.
உண்மையை மறைக்காமல் உள்ளது உள்ளபடி தெளிவாக உரைக்கும் ஸ்ரீமத் பகவத்கீதையின் அதே நடையில் திருக்குறளில் திருவள்ளுவர் கூறியிருக்கின்ற காரணத்தால் அது உலகப் பொதுமறையாக என்றும் போற்றப்படுகிறது.

வாழும் வகையினையும், அறநெறி ஒழுக்கத்தின் உயர்வு, தன் உணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையில், இறைத்தொண்டையும், பக்தியையும் விளக்கி உரைக்கும் நூல் திருக்குறள் என்பதை சில ஒப்புநோக்கல்கள் மூலம் இங்கு கானலாம்.

நான் யார்?
நான் என்பது இந்த உடம்பு அன்று, ஆத்மா என்பதை பகவத்கீதை இரண்டாம் அத்தியாயம் விளக்குகின்றது. ஆத்மா அழியாதது, உடல் விட்டு உடல் மாறக்கூடியது.
வாஸாம்ஸி ஜர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோ (அ) பராணி
ததா ஷரீராணி விஹாய ஜீர்னான் யன்யானி ஸம்யாதி நவானி தேஹி  -  (பகவத்கீதை 2.22)
பழைய ஆடைகளைப் புறக்கணித்து, புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப்போன்றே, பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.
உடம்பு வேறு, உயிர் (ஆத்மா) வேறு. உடம்போடு உயிருக்குள்ள உறவு, தான் இருந்த முட்டையெனும் கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது. இதை வள்ளுவர் தெளிவாக நிலையாமை அதிகாரத்தில்,

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிமை நட்பு  -  (திருக்குறள் 338)

இந்த உயிரானது பல உடம்பினுள் மீண்டும் மீண்டும் புகும் என்பதைக்காட்டி, துச்சமான, அறியாமையாகிய மயக்கத்தைக் கொடுக்கின்ற இந்த உடம்பினுள் இருக்கும் உயிருக்கு நிலையான வீடு அமையவில்லையா என்று கேட்கின்றார்.

புக்கில் அமைந்தின்று கொல்லே உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு  -  (திருக்குறள் 340)

நான் ஒரு ஆத்மா என்றுணர்ந்து, நிலையான இடம் தேடுதல் முக்கியம். நிலையற்ற உடம்பு அழிவதைக் கண்டு வருந்தக்கூடாது. மேலும் வள்ளுவர்
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்  -  (திருக்குறள் 627)

உடம்பு என்பது துன்பத்திற்கு இலக்காகக் கூடியது என்பதை உணர்ந்த அறிவிற் சிறந்த மேலோர் தன் உடலுக்கு ஏற்படும் துன்பத்தை ஒருபோதும் துன்பமாகக் கருதமாட்டார்கள் என்று கூறுகின்றார்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்தக்கருத்தை

தேஹினோ (அ)ஸ்மின்யதா தேஹே கெளமாரம் யெளவனம் ஜரா
ததா தேஹான்தரப் பிராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி -  (பகவத்கீதை 2.13)

‘‘உடல் பெற்ற ஆத்மா சிறுவயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவது போலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா (தீரன்) இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.

உடல் முழுவதும் உணர்வு பரவியிருப்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும். உடலின் ஒரு பகுதியிலோ உடல் முழுவதுமோ ஏற்படும் இன்ப துன்பங்களை அனைவரும் உணர்கின்றனர். இவ்வாறு பரவியுள்ள உணர்வு, ஒருவரின் சொந்த சரீரம் என்ற வரம்பிற்கு உட்பட்டது. ஓர் உடலின் இன்ப துன்பங்கள் மற்றவர்களுக்கு தெரியாது. எனவே ஒவ்வொரு உடலும் தனி ஆத்மாவை உடையதாகும். ஆத்மா உடலுள் உள்ளதால் தனிப்பட்ட உணர்வு உள்ளது. மேலும் உடலே எடுக்காவிட்டாலும் ஆத்மா உணர்வுள்ளது என்பதை வேத இலக்கியங்கள் மூலம் உணர்கின்றோம்.
ஆத்மாவின் அளவு, ஒரு ரோம நுனியின் பத்தாயிரத்தில் ஒரு பங்கு என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. ஷ்வேதாஷ்வதர உபநிஷத் (5.9) இதனை உறுதிபடுத்தியுள்ளது.

பாலக்ர ஷ பாகஸ்ய ஷத்தா கல்பிதஸ்யச
பாகோ ஜீவ: ஸ விக்ஞேய: ஸ சானந்த்யாய கல்பதே

ஆன்மீக அணுக்கள் எண்ணற்றவை. இந்த மிகச்சிறிய ஆன்மீகத்துகள் உணர்வுள்ளதால், உடல் முழுவதும் உணர்வு பரவியுள்ளது. சக்தி வாய்ந்த மருந்தின் ஆதிக்கம் உடல் முழுவதும் பரவுவதைப் போல ஆன்மீக ஆத்மாவின் ஆத்மாவின் ஆதிக்கம் உடல் முழுவதும் பரவியுள்ளது. உடலில் பரவியுள்ள உணர்வே ஆத்மா இருப்பதற்கு ஆதாரம். உணர்வற்ற ஜடவுடல் பிணம் என்பதைப் பாமரனும் அறிவான். எந்தவித பெளதிக, வேதியியல் முறையினாலும் பிணத்தினுள் உணர்வை மீண்டும் புதுப்பிக்க முடியாது எனவே உணர்வென்பது ஜடப்பொருள்களின் கலவையினால் தோன்றுவதல்ல, ஆன்மீக ஆத்மாவினால் ஏற்படுகிறது. ஆன்மீக ஆத்மாவின் நிலை என்ன என்பதை எல்லா வேதங்களும் தெரிவிக்கின்றன. மேலும் அறிவுள்ள எந்த மனிதனாலும் இதனை அனுபவப்பூர்வமாக அறிய முடியும்.

அறிவிழந்த இருவகையினருள், ஒரு வகையினர் ஆத்மா இல்லை என்று வாதாடுவர். மற்றவர் இந்த ஆத்மாவை எங்கும் நிறைந்த விஷ்ணு தத்துவமாக எண்ணுவர். உடலின் இயக்க சக்திகள் யாவும் இதயத்திலிருந்து உருவாகின்றன என்று விஞ்ஞானிகள் அறிவர். ஆனால் சக்தியின் உற்பத்தி மூலம், ஆத்மா என்பதை இவ்விஞ்ஞானம் காண இயலாமல் இருக்கின்றது. ஆத்மாவுக்கு இயல்பான இடம் உடம்பினுள் இதயம் என்றும், அதனுடன் பரமாத்மாவாக இறைவன் இருக்கிறான் என்றும், பகவத்கீதை, பாகவதம் போன்ற வேத நூல்கள் கூறுகின்றன.
எப்படி சூரியக் கதிரில் நுண்ணிய ஒளி பொருந்திய மூலக்கூறுகள் உள்ளனவோ (’போடான்) அது போல், எண்ணற்ற உணர்வுள்ள ஆத்மாக்கள் இறைவனுடைய பகுதிகளாக உள்ளன.
எனவே வேத அறிவைப் பின்பற்றினும் சரி, நவீன அறிவைப் பின்பற்றினும் சரி, உடலில் ஆன்மீக ஆத்மா இருப்பதை யாராலும் மறுக்க இயலாது. பகவத்கீதையில் முழுமுதற்கடவுளான கிருஷ்ணர் ஆத்ம விஞ்ஞானத்தைத் தெளிவாகக் கூறுகிறார்.

பரமாத்மா
நம்முடன் சேர்ந்து, நமது இதயத்தில் இறைவன் பரமாத்மாவாக இருக்கிறார் என்பதை பகவத்கீதையின் பதின்மூன்று, பதினைந்தாவது அத்யாயங்கள் உறுதி செய்கின்றன.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்  -  (திருக்குறள் 3)

‘‘இதயமாகிய தாமரை மலரில் இருப்பவனின் மாட்சிமை பொருந்திய அடிகளைச் சேர்ந்தவர் எல்லா உலகிற்கும் மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்.

எல்லா உலகங்கட்கும் அவைகளில் உள்ள உயிர்கட்கும் காரணமாக முழுமுதற்கடவுளாகிய ஆதிபகவன் இதயத்திலிருக்கிறான் என்பதை வள்ளுவர் மூன்றாவது குறளில் உறுதி செய்கின்றார். அந்தர்யாமியாக இருக்கும் இறைவனைப் பரமாத்மா என்ற வேத இலக்கியங்கள் கூறுகின்றன. இங்கே வீடு என்பது நிலையான அழிவற்ற உலகமாகிய வைகுந்தத்தைக் குறிக்கிறது.

உபத்ரஷ்டானு மந்தா ச பர்தா போக்தாமஹேஷ்வர:
பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹே ஸ்மின் புருஷ: பர: -  (பகவத்கீதை 13:23)

‘‘இருப்பினும், இவ்வுடலில் மற்றொருவரும் இருக்கின்றார், அவர் தெய்வீக அனுபவிப்பாளர். அவரே இறைவன், பரம உரிமையாளர். மேற்பார்வையிட்டு அனுமதி வழங்குபவரும், பரமாத்மா என்று அறியப்படுபவரும் அவரே.

ஜடத்தளையில் இருக்கும் ஜீவாத்மா, இவ்வுலக நம்பிக்கைகள், இன்பங்களை விடுத்து, பரமாத்மாவிடம் திரும்புவானாகில் அவன் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க அவர் வழிவகுக்கிறார். இந்த உண்மையை வள்ளுவர் மேலே சொன்ன குறளில் விளக்கியுள்ளார். தனிப்பட்ட அணு அல்லது ஜீவாத்மா மற்றொரு உடலுக்கு மாற்றமடைவது, தனது எண்ணம், விருப்பம் மற்றும் செயல்களாலும், பரமாத்மாவின் கருணையாலும் சாத்தியமாகிறது. கீழ்க்கண்ட பதம் இதை உறுதி செய்கின்றது.

கர்மணா தெய்வ நேத்ரேண ஜந்தூதேஹோ பத்யதே
ஸ்திரிய: ப்ரவிஷ்ட உதரம் பும்ஸோ - ரேத: கணாஷ்ரயக -  (ஸ்ரீமத் பாகவதம் 3.31.1)

ஒருவனுடைய செயல்களின் விளைவினாலும், முழுமுதற்கடவுளின் பார்வையாலும், ஜீவனானவன் ஒரு தாயின் கருப்பையில் அடைக்கப்பட்டு உடம்பெடுக்கிறான். ஓர் ஆணின் விந்துவின் வாயிலாக ஜீவன் கருப்பையை அடைகிறான்.

ஒரு நண்பன் மற்றொரு நண்பனின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதைப் போல பரமாத்மா அணு ஆத்மாவின் விருப்பங்களை பூர்த்தி செய்கிறார். முண்டக உபநிஷத், ஷ்வேதாஷ்வதர உபநிஷத் போன்ற வேதநூல்கள், ஆத்மாவையும், பரமாத்மாவையும்,, ஒரே நேரத்தில் அமர்ந்திருக்கும் இரு தோழமைப் பறவைகளுக்கு ஒப்பிடுகின்றன. அப்பறவைகளில் ஒன்று (தனி அணு ஆத்மா) மரத்தின் கனிகளை உண்கிறது. மற்றதோ பரமாத்மா (பரமாத்மாவான கிருஷ்ணர்) தனது தோழனை வெறுமனே நோக்கிக் கொண்டிருக்கிறது. குணத்தில் ஓரே மாதிரியான இவ்விரண்டு பறவைகளில், ஒரு பறவை ஜடவுடல் எனும் மரத்தின் பழங்களால் கவரப்பட்டுள்ளது. மற்ற பறவையோ தனது நண்பனின் செயல்களை வெறுமே நோக்கிக்கொண்டுள்ளது. கிருஷ்ணர் சாட்சிப்பறவை, அர்ஜனன் உண்ணும் பறவை. இருவரும் நண்பர்களே என்ற போதிலும் ஒருவர் எஜமானர், மற்றவர் சேவகன். இந்த உறவை அணு ஆத்மா மறந்து விடுவதே, மரம் விட்டு மரம் அல்லது உடல் விட்டு உடல் என்று அவன் தனது நிலையை மாற்றிக்கொள்வதற்கே காரணமாகிறது. ஜீவ பறவை, ஜடவுடலென்னும் மரத்தில் கடினமாகப் போராடிக் கொண்டுள்ளான். எனினும், அறிவுரைகளைப் பெறும் நோக்கத்துடன் தானே முன்வந்து கிருஷ்ணரிடம் சரணடைந்த அர்ஜனனைப் போல, தொண்டனான ஜீவ பறவை தனக்கு அருகிலுள்ள பறவையை உன்னத ஆன்மீக குருவாக ஏற்கும் போது, உடனடியாக எல்லாக்கவலைகளிலிருந்தும் விடுபடுகிறான். முண்டக உபநிஷத் (3.1.2.) ஷ்வேதாஷ்வதர உபநிஷத் (4.7) இரண்டுமே இதை உறுதிப்படுத்துகின்றன.

இரு பறவைகளும் ஒரே மரத்தில் இருப்பினும், உண்ணும் பறவை, மரத்தின் பழங்களை அனுபவிப்பவன் என்பதால், கவலையாலும், ஏக்கத்தாலும், பீடிக்கப்பட்டுள்ளான்.
தனது நித்ய நண்பனான கிருஷ்ணரை நோக்கி முகம் திருப்பிய அர்ஜனன் அவரிடமிருந்து பகவத்கீதையை புரிந்து கொண்டு ஆன்மீக பலம் பெற்று தர்மயுத்தம் செய்ததால் போரில் வெற்றி மட்டும் அல்லாது உயர்ந்த ஆன்மீக நிலையும் பெற்றான். அது போல எந்த ஜீவாத்மாவும் கிருஷ்ணரின் பகவத்கீதையை அறிந்து, உன்னத நிலையை அடைந்து கவலைகளிலிருந்து விடுபட முடியும்.

ஆதிபகவன் அல்லது முழுமுதற்கடவுள்
ஜன்மாதி யஸ்ய யத: என்ற வேதாந்த சூத்திரத்தில் ஸ்ரீல வியாச தேவர் கூறுகின்றார்.
எவரிடமிருந்து எல்லாம் தோன்றுகின்றனவோ, அவரே முழுமுதற் கடவுள், மேலும் விளக்கமாக ஸ்ரீமத் பாகவதம் முதல் பாடலில் (1.1.1.) மேற்சொன்ன வரியை பாடலின் முதல் வரியாகக் கொண்டு, வசுதேவரின் மைந்தனான கிருஷ்ணரே முழுமுதற்கடவுள் என்றும், அவர் தனது நிலையான உலகத்தில் இருக்கிறார் என்றும், எல்லாவற்றிற்கும் மேலானவர் என்றும் அவரை நான் தியானிக்கிறேன் என்றும் கூறுகின்றார்.
திருவள்ளுவர் முதற் குறளில்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு      - (திருக்குறள்.1)
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அது போல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

செம்மொழி இலக்கியமாகிய திருக்குறளை இயற்றிய வள்ளுவர் முழுமுதற்கடவுளையே ஆதிபகவன் என்று குறிப்பிடுகிறார். குறைந்த கண்ணோட்டம் உடைய சிலர் ஆதியை நூல் ஆசிரியரின் தாயென்றும், பகவனைத் தந்தையென்றும் கூறுவர். இங்கு உலகு என்பது எல்லா உலகங்களையும், உயிர்களையும் குறிக்கும். பகவான் என்றால் எல்லாச் செல்வங்களையும் முழுமையாகக் கொண்டுள்ளவன் என்று பொருள்.

எல்லாச் செல்வங்களையும் முழுமையாகக் கொண்ட முதல்வனே ஆதிபகவன். இந்த ஆதிபகவன் எப்படிப்பட்டவன் என்பதை வள்ளுவர் ஏழாவது குறளில்,

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது - (திருக்குறள் 7)

‘‘தனக்குநிகரில்லாதவனுடைய தாளைச் சேர்ந்தவருக்கு அல்லாது மற்ற எவருக்கும் மனத்தின் கண் உருவாகும் துன்பங்களை நீக்குதல் அரிது. தனக்குவமை இல்லாதான் என்று வள்ளுவர் குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது. அவருக்கு மேல் யாரும் கிடையாது. இதையே கிருஷ்ணர்,

மத்த: பரதரம் நான்யத்   கின்சித் அஸ்த்தி தனஞ்ஜய
மயி ஸர்வம் இதம் ப்ரோக்தம்   ஸத்ரே மணி-கணாஇவ (பகவத்கீதை7.7)

‘‘செல்வத்தை வெல்வோனே, என்னை விட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளது போல, அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன என்று கூறுகிறார். இந்தப்பதத்தையும் வள்ளுவர் கூற்றையும் ஆராய்ந்து பார்த்தால், வள்ளுவர் குறிப்பிடும் ஆதிபகவன் கிருஷ்ணரே.

மேலும் வள்ளுவர் புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில்,
தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக்கண்ணான் உலகு  (திருக்குறள் 1103)

‘‘தாமரைக்கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியின் தோள்களில் துயிலும் துயிலை விட இனிமையானதோ? என்கிறார். வேறு எந்த தேவதையையும், தேவதையின் உலகத்தையும் வள்ளுவர் திருக்குறளில் குறிப்பிடவில்லை. எல்லாருக்கும்  உயர்ந்த தாமரைக்கண்களுடைய கண்ணனை, ஆதிபகவனை மனதில் வைத்துக் கொண்டே வள்ளுவர் இந்தக்குறளைப் படைத்திருக்கின்றார். முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் ஒருவருக்கே சரணடைய வேண்டும் என்பது பகவான் ஸ்ரீசைதன்யர் மகாபிரபுவின் கொள்கை. அந்தக் கொள்கையையே வள்ளுவர் முதல் அதிகாரத்தின் ஏழு குறள்களில் கூறுகின்றார். கிருஷ்ணரே முழுமுதற்கடவுள், மற்றெல்லோரும் அவருடைய தொண்டர்கள் என்பது பகவான் ஸ்ரீசைத்தன்ய மகாபிரபுவின் வாக்கு.
பெளதிக உலகம் - நிலையற்றது
ஜட உலகம் மற்றும் அனுபவங்கள் யாவும் தற்காலிகமானவை, நிலையற்றவை என்று வேத இலக்கியங்களும் திருக்குறளும் கூறுகின்றன. நிலையாமை அதிகாரத்தில் வள்ளுவர்,
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு  -  (திருக்குறள் 336)
‘‘நேற்று இருந்தவன் ஒருவன், இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமையே பெருமையாக உடையது இவ்வுலகம். என்கிறார். எனில் உயிர் வாழியான மனிதனுக்கு என்ன பெருமை?
மின்னின் நிலையில - மன்னுயிராக்கைகள்,
என்னுமிடத்து, இறை - உண்ணுமின் நீரே
(திருவாய்மொழி-1.2.2.)
‘‘உயிருடம்புகள், மின்னலைக்காட்டிலும் நிலையுடையன அல்ல என்று சொல்லும் பொழுது, நீங்கள் சற்று நினைத்துப் பாருங்கள் என்று நம்மாழ்வார் நிலையாமையைத் துல்லியமாக, மிகச்சுருக்கமாகக் கூறிவிட்டார்.
பகவத்கீதை 8.15ல் ஸ்ரீகிருஷ்ணர்
மாம் உபேத்ய புனர்ஜன்ம  து’காலயம் அஷாஷ்வதம்
நாப்னுவந்தி மஹாத்மான ஸம்ஸித்திம் பரமாம் கதா
பெளதிக உலகத்தை து’காலயம் அதாவது துன்பங்கள் நிறைந்த இடம் என்றும் அஷாஷ்வதம் அதாவது தற்காலிகமானது என்றும் குறிப்பிடுகிறார்.
இவ்வுலகம், ஒவ்வொரு அடியிலும் அபாயங்கள் நிறைந்த துன்பகரமான இடம் என்பதை அறியாமையினால் ஒருவன் அறிவதில்லை. அதன் காரணத்தினாலேயே, சிற்றறிவுடையோர், செயல்களின்
தங்களை மகிழ்விக்கும் எனக்கருதி பலன் நோக்குச்செயல்களின் மூலம் சூழ்நிலையை சரி செய்ய முயற்சி செய்கின்றனர். முழு பிரபஞ்சத்திலும் உள்ள எவ்வித பெளதிக உடலும் துயரற்ற வாழ்வைத் தர இயலாது என்பதை அவர்கள் அறிவதில்லை.
பெளதீக உலகத்தில் யாராலும் தீர்வு காண முடியாத நான்கு வகையான நிரந்தர பிரச்சனைகளும் மூன்று விதமான துன்பங்களும் உள்ளன.
பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவை நான்கு பிரச்சனைகளாகும். மூன்று விதமான துன்பங்கள் என்னவென்றால்,
1. அதியாத்மிக க்லேஷா - மனம் மற்றும் உடலால் விளையும் துன்பம் (எ.கா) மன உளைச்சல்
2. அதி தெய்விக க்லேஷா - இயற்கையால் விளையும் துன்பங்கள் (எ.கா) சுனாமி
3. அதி பெளதிக க்லேஷா - பிற உயிரினங்கள், உயிர்வாழிகளால் விளையும் துன்பங்கள் (எ.கா) பன்றிக்காய்ச்சல்
விமானத்தில் பறந்து கொண்டுள்ள போது மனிதன் பல திட்டக் கற்பனைகளில் மிதக்கிறான். ஏதாவது சிறு இடையூறால் விமானம் நொறுங்கி விழுந்தால் எல்லாத்திட்டங்களும் பாழ். தன்மனத்தாலும், பிற உயிர்களாலும், இயற்கையின் சீற்றத்தாலும் உயிர்வாழிகளுக்குத் துன்பம் கொடுப்பது தான் இவ்வுலகு.
கர்மா - ஊழ்
வேத நூல்களில் கண்டுள்ளபடி, ஒருவன் தனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்காக இயற்றப்படும் செயல்கள் கர்மா (நல்ல செயல்கள்) எனப்படும். தனக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதால் கீழான நிலைக்கு ஒருவனை இட்டுச்செல்லும் செயல் விகர்மா (தீயசெயல்கள்) எனப்படும்.
சாதாரண மனிதர்கள் கடவுளின் பாராட்டைப்பெற்று இவ்வுலகில் அல்லது சொர்க்கத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காக நற்செயல்களைப்புரிய விரும்புகிறார்கள். நல்லவை, தீயவை ஆகிய இருவகையான செயல்களுமே பெளதிக இன்னல்களில் மனிதனை சிக்கவைக்கும் தன்மை உடையவை என்பதை அறிவாளிகள் நன்கறிவார்கள். வள்ளுவர் ஊழ் எனப்படும் அதிகாரத்தில்
பரியினும் ஆகாவாம் பால் அல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம  - (திருக்குறள் 376)
‘‘ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருள்கள் வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போகும். தமக்கு உரியவை கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகா.
ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்  - (திருக்குறள் 380)
‘‘ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன்வந்து நிற்கும்.
ஸ்ரீலபிரபுபாதர் ஸ்ரீமத் பாகவதத்தின் பொருளுரைகளில் (7.2.40) கூறியுள்ளபடி, பகவான் பாதுகாப்பு அளிக்காவிடில் வீட்டில் பத்திரமாக வைத்திருக்கும் பணம் கூடக் காணாமல் போய்விடுகிறது. மறுபுறம், ஒருவன் பொதுவீதியில் பணத்தைத் தொலைத்தாலும் விதியினால் பாதுகாக்கப்படுகிறது.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்  - (திருக்குறள் 466)
‘‘ஒருவன் செய்ய வேண்டாதவற்றை செய்வதும் கேடாகும், செய்ய வேண்டியவற்றை செய்யாமல் விடுவதும் கேடாகும்.
ந கர்மணாமனாரம்பான் நைஷ்கர்ம்யம் புருஷோஸ்னுதே
ந ச ஸந்யாஸனாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி  - (பகவத்கீதை 3.6)
‘‘செயலிலிருந்து தப்பிப்பதால், மட்டுமே விளைவுகளிலிருந்து விடுதலை பெற முடியாது. துறவால் மட்டுமே பக்குவம் பெறவும் முடியாது.
அதனால், அறிவில் முதிர்ந்தவர்கள் செயல்களின் விளைவுகளினின்று முற்றுலும் விடுபட்டு நிற்க விரும்புகின்றார்கள். பிறப்பு இறப்பு எனும் சுழலிலிருந்து ஒருவனை விடுவிக்கும் செயல்கள் அகர்மா எனப்படும். இந்த 3 வகையான செயல்களில் கர்மாவின் பிணைப்பிலிருந்து தன்னை விடுவிக்கும் செயலை அறிவாளிகள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
பகவத்கீதை 3.9 கூறப்பட்டுள்ளபடி, ‘‘விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படும் செயல்கள் (அகர்மா-உன்னதமான செயல்) நிறைவேற்றப் படலாம். மற்ற செயல்கள் (கர்மா - நல்ல செயல்) இந்த பெளதிக உலகத்தோடு பந்தப்படுத்துபவை. எனவே, குந்தியின் மகனே, உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை அவரது திருப்திக்காகச் செய். இவ்விதமாக நீ எப்பொழுதும் பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வாய்.

ஸ்ரீபிரம்மசம்ஹிதை (ஸ்லோகம் 54)
கர்மாணி நிர்தஹதி கிந்து ச பக்தி - பாஜாம

கோவிந்தன், தனது பக்தர்களின் கர்ம வினைகளைச் சுட்டெரித்து அழிக்கிறார். ஒவ்வொருவரும் தங்கள் வினைகளுக்கேற்ற பலனை அனுபவிக்குமாறு அவர் செய்கிறார். அற்ப பூச்சியானாலும் இந்திரனேயானாலும் அவரின் இந்த கட்டளையை மீற முடியாது.

வாழ்வின் குறிக்கோள் யாது?
வாழ்வின் குறிக்கோள் யாது என்று வினவினால் ஒன்று புலன்களால் இந்த உலகில் உள்ள பொருட்களை அனுபவிப்பது மற்றொன்று இந்த ஜடஉலகில் உயர்ந்த நிலைக்கு வருவது அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்காக உதவுவது என்று பதில் வரும், இவையெல்லாம், தான் இந்த உடம்பு என்றும் தனக்குச் சம்பந்தமானவற்றைத் தனது என எண்ணுவதால் (அகங்காரம்) ஏற்படுபவை. வாழ்வின் நோக்கமின்றி வாழ்வதைச்சாடும் வள்ளுவர், நிலையாமை அதிகாரத்தில்,
ஒரு பொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியும் அல்ல பல  -  (திருக்குறள் 337)
அறிவில்லாதவர் ஒரு வேளையாவது எதற்காக வாழ்கிறோம் என்ற தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை. ஆனால் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல.
பகவத்கீதையில்
வ்யவஸாயாத்மிகா புத்தி ஏகேஹ குரு - நந்தன
பஹ ஷாகா ஹ்யனந்தாஷ் ச புத்தயோ (அ) வ்யவஸாயினாம்.
இவ்வழியிலுள்ளோர் தங்களது குறிக்கோளில் திடமான உறுதியுடன் இருப்பர். இவர்களது இலட்சியம் ஒன்றே குருவம்சத்தின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளைக்கொண்டது இவ்வழி என்று குறிப்பிடப்படுவது கிருஷ்ண உணர்வு பாதை அல்லது புத்தியோகம் என்று ஸ்ரீலபிரபுபாதர் தன் பொருளுரையில் விளக்குகின்றார்கள்.
கிருஷ்ண உணர்வின் உள்ளடக்கங்களாகிய இறைவனை அறிதல், அவரிடம் அன்பு செலுத்தப்பழகிக் கொள்ளுதல், அன்பைப் பெறுதல் எல்லாம் ஒருவரின் வாழ்வின் குறிக்கோள் என்பது உறுதியாகிறது.
இந்த ஜட உலகின் படைப்புக்கள் யாவும் நிலையற்றவை, அழியக்கூடியவை. தன் உடம்பே அழியக்கூடியது என்பதை மறந்து மனிதர்கள் அறிவியல் முன்னேற்றம் என்ற அடிப்படையில் கோடிக்கணக்கான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துகின்றனர். பெரும்பாலனவை மனித குலத்திற்கே இடையூறு விளைவிப்பனவாக உள்ளன. இவை அசுர வேலை என்று பகவத்கீதையில் 14வது அத்தியாயத்தில் கிருஷ்ணர் கூறுகின்றார்.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு  -  (திருக்குறள் 340)
‘‘துச்சமான அறியாமையாகிய மயக்கத்தைக் கொடுக்கின்ற இந்த உடம்பினுள் இருக்கும் உயிருக்கு நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இது வரையில் அமையவில்லையா என்று மிகுந்த வருத்தத்தை திருவள்ளுவர் தெரிவிக்கின்றார். பகவத்கீதை 15.7-ல் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் இது போலவே வருத்தப்படுகின்றார்.
மமைவாம்சோ ஜீவ - லோகே ஜீவ - பூத ஸனாதன:
மன: - ஷஷ்டா னீந்திரியானி ப்ரக்ருதி - ஸ்தானி கர்ஷதி
‘‘இந்தக்கட்டுண்ட உலகில் இருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாரும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் - மிகவும் கடினமாகச் சிரமப்படுகின்றனர் என்கிறார்.
நம்மைக் கடைத்தேற்றுவதற்காக அவர் கலியுகத்தில் ஸ்ரீகிருஷ்ண சைதன்யராக அவதாரம் செய்து போதனைகளைத் தொடர்ந்தார். பகவான் கிருஷ்ணர் இந்த மனித குலத்தின் மீது வைத்திருக்கும் கருணையை என்னென்று கூறுவது? எல்லாவற்றிற்கும் உயர்ந்த இடமான முழு முதற்கடவுளின் இடத்தை அடைதல் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் வரையறுத்துக் காட்டியுள்ளார். மேலும்,
வீடுமின் முற்றவும், -வீடு செய்து, உம்முயிர்
வீடுடை யானிடை, - வீடு செய்ம்மினே  -  (திருவாய்மொழி 1.2.1)
எல்லாவற்றையும் விட்டு விடுங்கள், விட்டு விட்டு உங்கள் உயிரை வீடு தரும் தலைவனிடம் அளித்து விடுங்கள் இறைவனிடம் சரணாகதி செய்து, அன்புத் தொண்டாற்றுவதே எல்லா ஆழ்வார்களுடைய விருப்பமும் தவமும். எல்லா ஆழ்வார்களும் முழுமுதற்கடவுள் கண்ணனையும் அவனது திரு அவதாரங்களையும் கொண்டாடுவதை நாலாயிர திவ்வியப்பிரபந்தம் முழுவதும் காணலாம்.
தூய வைணவர்களின் விருப்பம் எங்கிருந்தாலும் முழுமுதற்கடவுளான கிருஷ்ணருக்கு அன்புத்தொண்டாற்றுவதே. அவர்கள் எந்த வகையான முக்தியையும் எதிர்பார்ப்பதில்லை. இதை ஆஞ்சநேயரின் வாழ்விலிருந்து காணலாம். ஸ்ரீமத்பாகவதமும் இத்தகைய தூயபக்தியே சிறந்ததென்று குறிப்பிடுகிறது.
பகவான் ஸ்ரீசைதன்யர் தனது சிக்ஷாஷ்டகம் 4வது பாடலில் ‘‘எனது ஜன்ம ஜன்மங்களில் கிருஷ்ணா, உனது அன்புத்தொண்டே எனக்குத் தேவை என்று கூறுகிறார்.
ஜீவரே ஸ்வரூப ஹய கிருஷ்ணேர நித்ய தாஸ
‘‘ஜீவனுடைய சுய ரூபமானது கிருஷ்ணருடைய, நித்திய அன்புத்தொண்டனாக இருப்பதே என்பதே பகவான் ஸ்ரீசைதன்யரின் வாக்கியம், இதை மகாவாக்கியம் என்று சொன்னால் மிகையாகாது. எல்லா மொழிகளிலும் உள்ள இலக்கியங்களை ஒருவன் கற்றுத் தேர்ந்தாலும், முழுமுதற்கடவுளான ஆதிபகவனுக்கு அன்புத்தொண்டாற்றவில்லை எனில் எல்லாம் வீண் என்பதை இரண்டாவது குறளில் வள்ளுவர் காட்டுகின்றார்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்  -  (திருக்குறள் 2)
எல்லாம் அறிந்தவனான முழுமுதற்கடவுளின் நல்ல தாள்களைத் தொழுதல் ஒன்பது வகையான பக்தித்தொண்டில் ஒன்றாகும். தன்னை உணர்வதும், இறைவனை உணர்வதும், அந்த உணர்வில் இறைவனுக்கு அன்புத்தொண்டாற்றுவதும் முக்கியபோதனையாகும். இதை வாழ்வின் குறிக்கோளாக ஒவ்வொரு ஜீவாத்மாவும் ஏற்றுக்கொண்டால் கவலை என்பது இல்லை.
இறையன்பு
இறையருள் அல்லது இறையன்பு என்பது தான் மனித வாழ்வின் உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும்.
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.  -  (திருக்குறள் 241)
‘‘செல்வங்களுள் சிறந்த செல்வம் அருளாகிய செல்வமே. பொருளாகிய செல்வங்கள் இழிந்தவர்களிடத்திலும் உள்ளன.
அறம் அல்லது தர்மத்தின் வழி நின்றால் தான் இறையருள் அல்லது இறையன்பு பெறமுடியும், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நிறுவன ஆச்சாரியார் தெய்வத்திரு. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீலபிரபுபாதா அவர்கள் பகவான் ஸ்ரீசைத்தன்ய மகாபிரபுவின் போதனைகளின் அடிப்படையில், வாழ்வின் நோக்கம் கிருஷ்ணராகிய முழுமுதற்கடவுளிடம் அன்புசெலுத்துதல் மற்றும் அன்பைப்பெறுதல் என்று விளக்கியுள்ளார்.
முழுமுதற்கடவுளிடம் அன்பு செலுத்தும் போது, அவரின் படைப்பான பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல் தானாக அமையும். வேருக்கு நீருற்றினால் மரத்தின் எல்லாப்பகுதிகளும் நலம் பெறும் என்பது போல.
அருளுடைமையின் முக்கியத்துவத்தை வள்ளுவர்,
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல்.  -  (திருக்குறள் 243)
‘‘அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
மேலும் துன்பமான இருள் பொருந்திய உலகம் என்று வள்ளுவர் குறிப்பிடுவதைக் காண்க. ஒளிபொருந்திய இன்பமான உலகம் இருப்பதை இங்கு காட்டுகின்றார். பகவான் சைதன்ய மகாப்பிரபுவின் நோக்கமும் நம்மை ஒளி மிகுந்த இனிய உலகமாக கிருஷ்ண உலகிற்கு அல்லது கோலாக விருந்தாவனத்திற்கு எடுத்துச்செல்வது தான்.
பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு  -  (திருக்குறள் 358)
‘‘பிறவித்துன்பத்திற்குக் காரணமான அறியாமை நீங்குமாறு சிறப்பாகக் கருதப்படுகின்ற செம்பொருளாகிய உண்மைப் பொருளைக் (இறைவனை) காண்பதே அறிவு ஆகும்.
என்பது வள்ளுவர் கூற்று. பகவத்கீதை 4.9 கூற்றுப்படி
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத:
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைதி மாமேதிஸோர்ஜன
‘‘எனது தோற்றமும் செயல்களும் திவ்வியமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட பின் மீண்டும் இப்பெளதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அர்ஜனா, அவன் எனது நித்திய உலகை அடைகிறான். என்று முழுமுதற்கடவுள் கிருஷ்ணர் கூறுகிறார்.
மேலும் ‘‘அறிவு என்பது, இயற்கையையும், அதை அறிபவர்களான உயிரையும் இறைவனையும் அறிவதே என்று பகவத்கீதையில் (பகவத்கீதை 13.3) கிருஷ்ணர் கூறுகின்றார். இதுவே உண்மையான பகுத்தறிவாகும்.
கிருஷ்ண உணர்வு
கற்றறிந்த முனிவர்கள், தத்துவவாதிகள், ஆன்மீக வாதிகள் என்று பலரும் புலன்களை வெற்றி கொள்ள முயற்சி செய்கின்றனர். ஆனால் தங்களது முயற்சிகளுக்கு மத்தியிலும், மனக்கிளர்ச்சியின் காரணமாக, இவர்களில் மிகச்சிறந்தவர்களும் பெளதிகப்புலனின்பத்திற்கு இரையாகி விடுகின்றனர்.
நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்  -  (திருக்குறள் 276)
மனத்தில் ஆசைகளை நீக்காமல், ஆனால் ஆசைகளே இல்லாத துறவிகளைப் போல வஞ்சித்து வாழ்கின்றவர்களைப் போல் கொடியவர்கள் வேறு யாரும் இல்லை.
கர்மேந்திரியாணி ஸம்யம்ய ஆஸ்தே மனஸா ஸ்மரன்
இந்த்ரியார்த்தான் விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே
-  (பகவத்கீதை 3.6)
புலன்களையும், புலனுறுப்புக்களையும் கட்டுப்படுத்தி அதே சமயம் புலன் நுகர்ச்சிப் பொருட்களில் மனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பவன் போலி மனிதன் என்று அழைக்கப்டுகிறான்.
கடுமையான தவத்தையும், யோகப்பயிற்சியையும் மேற்கொண்டு புலன்களை அடக்க முயற்சி செய்த, பக்குவமான யோகியும் சிறந்த முனிவருமான விஸ்வாமித்தரர் மேனகையினால் பாலுறவு வாழ்விற்கு அழைத்துச் செல்லப்பட்டார். உலக சரித்திரத்தில் இது போன்ற சம்பவங்கள் இருப்பது உண்மையே. எனவே பூரண கிருஷ்ண உணர்வின்றி புலன்களையும் மனத்தையும் கட்டுப்படுத்துதல் மிக மிகக்கடினமாகும்.
ஸ்ரீல ரூப கோஸ்வாமி பின்வருமாறு நமக்கு வழிகாட்டியுள்ளார். (பக்திரஸாம்ருத சிந்து 1.2.258)
கிருஷ்ண உணர்வை விருத்தி செய்தவன், அனைத்துப் பொருள்களையும் இறைவனின் சேவையில் உபயோகப்படுத்த முடியும் என்பதை அறிவான். கிருஷ்ண உணர்வைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள், ஜடப்பொருள்களை தவிர்ப்பதற்கு செயற்கையாக முயற்சி செய்கின்றனர். உதாரணமாக, அருவவாதியைப் பொறுத்தவரை, இறைவன் (பூரண உண்மை) அருவமானவராக இருப்பதால், அவரால் உண்ணமுடியாது. எனவே, நல்ல உணவுக் பொருள்களைத் தவிர்க்க விரும்புகிறான் அருவவாதி. ஆனால், கிருஷ்ணரே எல்லாவற்றையும் அனுபவிக்கக்கூடிய பரம ஆளுநர் என்பதையும், பக்தியுடன் அர்ப்பணம் செய்தால் அளிக்கப்படும் எல்லா உணவுப்பொருள்களையும் அவர் மகிழ்வுடன் உட்கொள்கிறார் என்பதையும் பக்தன் அறிவான். எனவே பகவானுக்கு நல்ல உணவுப்பொருள்களைப் படைத்த பின், அவரது மீதியை பிரசாதமாக பக்தன் ஏற்றுக்கொள்கிறான். இவ்விதமாக அனைத்தும் ஆன்மீகப்டுத்தப்படுவதால் வீழ்ச்சிக்கான அபாயம் இல்லை.
ஒருவன் தன் மனத்தில் மாசு இல்லாதவனாக இருக்க வேண்டும். அதுவே அறம், மனம், தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத்தன்மை உடையவை என்று பொருள்பட வள்ளுவர்,
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.  -  (திருக்குறள் 34)
என்று கூறுகிறார். மனமாசை அகற்றச் சிறந்த வழி தகுந்த பயிற்சியால் கிருஷ்ண உணர்வு பெறுவதே கிருஷ்ண உணர்வு பெற்றவர்களுக்குப் புலனின்பம் துச்சம், இதற்கான நடைமுறை உதாரணம், மிகச்சிறந்த சாதுவும் கிருஷ்ண பக்தருமான ஸ்ரீயமுனாச்சாரியார் ஆவார். அவர் கூறுகிறார்.
யத் அவதி மமசேத: கிருஷ்ண - பாதாரவிந்தே
நவ நவ ரஸ தாமன் யுத்யதம் ரந்தும் ஆஸீத்
தத் அவதி பத நாரீ ஸங்கமே ஸ்மர்யமானே
பவதி முக-விகார: ஸஷ்டு நிஷ்டீவனம் ச
‘‘பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பாதக்கமலங்களின் தொண்டில் என்மனம் ஈடுபட்டிருப்பதால், என்றும் புதுமையாகத் திகழும் தெய்வீக இன்பத்தை நான் அனுபவித்துக் கொண்டுள்ளேன். பெண்களுடனான பாலுறவு வாழ்வினை நான் எப்போதாவது எண்ணினால், உடனே என் முகத்தை அதிலிருந்து திருப்பி அவ்வெண்ணத்தின் மீதுகாறி உமிழ்கிறேன்! என்று தானாகவே பெளதீக இன்பம் சுவையற்றப் போகுமளவிற்கு கிருஷ்ண உணர்வு (பக்தி) உன்னதமான சுவையுடையதாகும்.
மேலும் கிருஷ்ண உணர்வின் மகிமையை அம்பரீஷர், பிரகலாதர் இவர்களின் வாழ்விலிருந்து அறியலாம். கிருஷ்ண உணர்வினால் அம்பரீஷர், பெரும்யோகியான துர்வாஸ முனிவரையும் வென்றார். பிரகாலதர் தந்தையால் கொடுக்கப்பட்ட இன்னல்களையெல்லாம் தாங்கினார். இறுதியில் பகவான் நரசிம்மராகத் தோன்றி ஹிரண்யகசிபுவை வதம் செய்து, பிரகலாதருக்கு அன்பைச் சொறிந்தார்.
கிருஷ்ண உணர்வு எத்தகைய சுவையுடையது என்பதை,
பச்சைமாமலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
என்கின்ற தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலைத் தொகுப்பில் உள்ள இந்தப்பாடலில் காணலாம். திருமங்கையாழ்வாரும், பெரும் உணர்வை நல்கும் நாராயணா என்னும் நாமம் வேண்டும், இந்திரலோகமும் வேண்டாம், இரம்பை, ஊர்வசி இவர்களின் உறவும் வேண்டாம் என்கிறார்.
அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.  -  (திருக்குறள் 39)
என்றபடி கிருஷ்ண உணர்வானது எல்லையில்லாப் பெருமகிழ்ச்சியை நல்கும் என்பது சாத்திரங்களின் கூற்றும், நடைமுறையில் அனுபவிப்பதும் ஆகும். இதற்காகவன்றோ பகவான் ஸ்ரீசைதன்யரும் பின்வந்த ஆச்சார்யர்களும், குறிப்பாக ஸ்ரீலபிரபுபாதா அவர்களும் அரும்பாடுபட்டு கிருஷ்ண உணர்வைப் (பக்தியைப்) பரப்பினார்கள்.
ஆன்மீக உலகம் - அறிவு நிறைந்த, அழிவற்ற, நித்திய ஆனந்தமயமானது
பிரம்ம ஸம்ஹிதையில் (ஸ்லோகம் 55-56) அந்த தெய்வீக இடத்தில் ஒவ்வொரு மரமும் கெட்டது தரும் அதிசய மரம், இதன் மண்ணோ சிந்தாமணி. இங்கே தண்ணீர் எல்லாம் அமுதம். ஒவ்வொரு அசைவும் அபிநயம். இங்கு உயர்ந்த ஆன்மீக இருப்புகள் எல்லாம் அனுபவிக்கத்தகுந்தது. வள்ளல் பெரும் பசுக்கள் பாற்கடலாக பால் செரிந்து தள்ளுகின்றன. இங்கு காலம் அசையாமல் ஸ்தம்பித்து நிற்கின்றது. ஆகையால் எதிர்காலம் இல்லை. அரை நொடி கூட இங்கு கழிவதில்லை அந்த லோகம் கோலோகம். என்று ஆன்மீக லோகத்தை பற்றி விவரிக்கிறது.
பாகவதம் (10.14.58) கூறுகின்றது.
ஸமாஷ்ரிதா யே பத பல்லவ ப்லவம் மஹத் பதம் புண்ய யஷோ முராரே:
பவாம்பு திர் வத்ஸ பதம் பரம் பதம் பதம் பதம் யம் விபதாம் ந தேஷாம்
முக்தியை அளிப்பவரும், முகுந்தன் என்னும் பெயர் பெற்றவரும், பிரபஞ்சத் தோற்றத்தின் அடைக்கலமுமான பகவானின் பாதகமலங்கள் என்னும் படகை ஏற்றுக்கொண்டவனுக்கு பெளதிக உலகம் என்னும் பெருங்கடல், கன்றின் குளம்பில் தேங்கிய நீரைப்போன்றதாகும். அவனது நோக்கம் பெளதிக துன்பங்களற்ற வைகுண்டமே (பரமபதமே) - ஒவ்வொரு அடியிலும் அபாயம் இருக்கக்கூடிய இடமல்ல.
அங்கு எவ்வாறு செல்வது என்பது பற்றி பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறியிருக்கிறார். திருவள்ளுவர் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.  -  (திருக்குறள் 10)
‘‘இறைவனுடைய திருவடிகளைப் பொருந்த நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும், மற்றவர் கடக்க முடியாது. பகவத்கீதை இது பற்றி குறிப்பிடும் போது. (12.7)
ஸ்ரீகிருஷ்ணர், பகவத்கீதையில் (12.7)
தேஷாம் அஹம் ஸமுத்தாத்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்
பவாமி ந சிராத் பார்த்த மய்யா வேஷித சேதஸாம்.
உங்களது மனங்களை என்னில் நிறுத்தி எவரெல்லாம் என்னை வழிபடுகிறார்களோ, பிருத்தாவின் மகனே, அவர்களை பிறப்பு, இறப்பு, என்னும் கடலிலிருந்து உடனடியாக காப்பாற்றுபவனாக நான் இருக்கிறேன்.
ஆப்ரஹ்ம புவனால் லோகா: புனர் ஆவர்த்தினோ (அ)ர்ஜனா
மாம் உபேத்ய து கெளந்தேய புனர் ஜன்ம ந வித்ய தே
-  (பகவத்கீதை 8.16)
‘‘ஜடவுலகின் மிகவுயர்ந்த ப்ரஹ்ம லோகத்திலிருந்து தாழ்ந்த லோகம் வரை, அனைத்தும் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நடைபெறும் துன்பம் நிறைந்த இடங்களே, ஆனால் குந்தியின் மகனே, என்னுடைய இடத்தையடைந்தவர் என்றும் மறுபிறவி எடுப்பதில்லை என்று கிருஷ்ணர் கூறுகின்றார்.
நியமமும் தவமும்
வாழ்வின் உயர்ந்த இலக்கான கிருஷ்ணரின் அன்புத்தொண்டைப் பெறுவதற்கு, வரையறுக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றுவதும் (நியமம்) பற்று நீங்கிய வழிபாடும் வேண்டும். நியமங்களைப் புலனடக்கத்தால் தான் கடைப்பிடிக்கமுடியும்.
சுட்டும் நியமங்கள் சூதுபுலால் வேளாமை
நட்டுப்பிறன்மனையை நாடாமை - சொட்டும்கள்
உண்ணாமை நான் கொடும் உச்சாடனம் செய்தல்
கண்ணான் பெயரைக் கனிந்து - (பிரபுபாதர் நூற்றந்தாதி - 100)
ஸ்ரீலபிரபுபாதர் சுட்டிக்காட்டும் நியமங்கள், சூதாடாமை, மாமிசம் உண்ணாமை, நட்புக்கொண்டு பிறன் மனைவிடம் தகாத உறவு கொள்ளாமை மற்றும் மது அருந்தாமை. அவர் கூறும் தவம் கண்ணனுடைய பெயரைக் கனிவுடன் திரும்பத் திரும்பச் சொல்லுதல் ஆகும்.
ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீமத்பாகவதத்தின் பொருளுரையில் தர்மத்தின் நான்கு தூண்கள் குறித்தும், கலிபுருஷன் ஆதிக்கத்தால் அவை இழிவடைந்தது பற்றியும் விளக்குகிறார்.
மதக்கொள்கைகளின் சொரூபமாக தர்மம் எருதின் வடிவில், பசுவின் வடிவிலிருந்த பூமித்தாயிடம்  உரையாடிக்கொண்டிருந்தது. தர்மம், தவம், தூய்மை, தயை மற்றும் உண்மை என்னும் நான்கு கொள்கைகளால் நிலைநாட்டப்படுகிறது. அப்போது பரீட்சித் மகாராஜன் உலகை வென்று வருவதற்காக புறப்பட்டுச்செல்லும் வழியில், ஒரு அரசனைப்போல் மாறுவேடத்தில் இருந்தவனும், மிகத்தாழ்ந்தவனுமான கலிபுருஷன், ஒரு பசு மற்றும் எருதின் கால்களைக் காயப்படுத்துவதைக் கண்டார். அவனைத் தண்டிப்பதற்காக உடனே அவனைக் கைப்பற்றினார்.
கலிபுருஷன் தனக்கு தஞ்சம் அளிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டதால் பரீட்சித்து மகாராஜன் சூது, குடி, விபச்சாரம் மற்றும் மிருகவதை ஆகியவை நடைபெறும் இடங்களில் மட்டும் வாழ அனுமதித்தார்.
1. மது அருந்தினால் ஒருவன் தவ வலிமையை இழந்துவிடுகிறான்.
2. சிற்றின்ப வெறியின் காரணத்தால் தகாத உடலுறவில் ஒருவன் ஈடுபடும்போது மனத்தூய்மை இழந்து விடுகிறான்.
3. தன்னுடைய வயிற்றை நிரப்புவதற்காக ஒன்றுமே அறியாத மற்றும் பகவானின் குழந்தைகளான அப்பாவி மிருகங்களைக் கொன்று உண்பதால் ஒருவன் தயை (கருணை) இழந்துவிடுகிறான்.
4. ஒருவன் சூதாட்டத்தில் ஈடுபடும்போது அவன் உண்மை போன்ற உயர்ந்தக் குணங்களை கைவிடுகிறான்.
மேற்சொன்ன நான்கு நியமங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அதிகாரமே திருவள்ளுவர் படைத்துள்ளார். குறிப்பிடத்தக்க நான்கு குறள்களை இங்கு வைக்கிறோம்.
பிறனில் விழையாமை :
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு  -  (திருக்குறள் 148)
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்களுக்கு அறம் மட்டும் அன்று, நிறைந்த ஒழுக்கமும் ஆகும்.
புலால் மறுத்தல் :
துறவறவியலில், அருளுடைமையின் பின் இந்த அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது,
தன்னுள் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்  -  (திருக்குறள் 251)
‘‘தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?
சூது :
பொருள்கெடுத்து பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது  -  (திருக்குறள் 938)
‘‘சூது உள்ள பொருளை அழித்துப்பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.
கள்ளுண்ணாமை :
உண்ணற்க கள்ளை உண்க சான்றோரான்
எண்ணப் பட வேண்டாதார்  -  (திருக்குறள் 922)
‘‘கள்ளை (மதுவை) உண்ணக்கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.
சான்றோரென்பவர் அன்பு, நாணம், கண்ணோட்டம் (அருள்) ஒப்புரவு (உலக ஒழுக்கம்), வாய்மை ஆகிய ஐந்தையும் தாங்கியவர் என்று சான்றாண்மை அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார். சான்றாண்மைமிக்கவரே ஆன்மீக ஆசானாக ஆக முடியும். அத்தகைய ஆன்மீக ஆசானிடம் சென்று பணிவாகத் தொண்டு செய்து, பக்குவமாகக் கேட்டறிந்தால் தான் உண்மையை உணரமுடியும், ஏனேனில் அவர் உண்மையை உணர்ந்தவர்.
வாக்கு, மனம், உடல் தவம் :
ஓர் ஆசிரியர் தன் மாணவர்களல்லாத பிறரிடம் பேசும்போது அவர்களுடைய மனத்தைத் துன்புறுத்தும்படி பேசக்கூடாது. இதுவே பேசுவதைப் பொறுத்த தவமாகும்.
நயன் ஈன்று நன்றிபயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்  -  (திருக்குறள் 97)
பிறர்க்கு நன்மையான பயனைத்தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள் வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
அனுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரிஹிதம் ச யத்
ஸ்வாத்யாயப் யஸனம் சைவ வாங்மயம் தப உச்யதே
-  (பகவத்கீதை 17.15)
திருப்தி, எளிமை, மெளனம், சுயக்கட்டுப்பாடு, தனது இருப்பின் தூய்மை ஆகியவை மனதின் தவங்களாகும். (ப.கீ.17.16)
நியாயங்களைக் கடைபிடிக்கும் ஒருவனே தவத்தில் நிலை பெற்றிருக்க முடியும். துறவறவியலில் புலால் மறுத்தல் அதிகாரத்திற்கு அடுத்ததாக தவம் என்ற அதிகாரத்தை வள்ளுவர் வைத்தார்.
தவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வள்ளுவர்
தவம் செய்வார் தம்கருமம் செய்வார்மற்றல்லார்
அவம் செய்வார் ஆசையுட் பட்டு  -  (திருக்குறள் 266)
‘‘தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவார். அவர் அல்லாத மற்றவர் பொருள் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே!!
மேலும் பகவத்கீதையில், முழுமுதற்கடவுள், பிராமணர்கள், ஆன்மீகக்குரு, பெரியோர்களான தாய்தந்தையர் ஆகியோரை வழிபடுதல், மற்றும் தூய்மை, எளிமை, பிரம்மச்சரியம், அகிம்சை ஆகியவை உடலின் தவங்களாகக் கூறப்படுகின்றன (பகவத்கீதை 17.14)
இறைவனுடைய நாமத்தைச் சொல்வதே தவம் என்று இரண்டாம் திருவந்தாதியில் பூதத்தாழ்வார் கூறுகின்றார்.
உறுங்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன் நற்பாதம்
உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால் - உறுங்கண்டாய்
ஏத்திப்பணிந்தவன் பேர் ஈரரைஞ்றெப்போழுதும்
சாற்றி யுரைத்தல் தவம் (77)
‘‘என் நல்ல நெஞ்சே! நமக்கு உரியது உத்தமனின் திருவடிகளைப் பற்றுவது, அழகிய தாமரை மலர்களால் வழிபடுவதும் நமக்கு உரியது, அவன் புகழ்பாடிப்பணிந்து, திருப்பெயர்கள் ஆயிரமும் எப்பொழுதும் உரைத்தல் நமக்குரிய தவம்.
இறைவனின் நாமத்தைச் சொல்லுதலாகிய தவத்தினை மேற்கொள்கின்றவருக்கு யமனை (கூற்றத்தை) வெல்லுதல் எளிதாகக் கைகூடும்.
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு  -  (திருக்குறள் 269)
மேலும் கிருஷ்ணரின் நாமம் சொல்வதை மேற்கொண்டால் தன் உணர்வு பெறுவது எளிது என்று ஸ்ரீலபிரபுபாதர் காட்டியுள்ளார். தன் உணர்வென்பது தான் இந்த உடம்பல்ல, உணர்வுள்ள ஆத்மா என்பதை உணர்வது, வள்ளுவர் இதை அழகாக,
தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிரெல்லாம் தொழும்  -  (திருக்குறள் 268)
தவவலிமையால் தன்னுடைய உயிர்தான் (உடம்பு) என்னும் பற்று நீங்கப்பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் அவருடைய பெருமையை உணர்ந்து தொழும், அத்தகையவர் வாக்கு, மனம், கோபம், நாக்கு, வயிறு, பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் வேகத்தைத் தம் தவத்தால் கட்டுப்படுத்திவிடுவதால் உலகம் முழுவதும் சீடர்களை ஏற்கலாம் என்று பகவான் ஸ்ரீசைதன்யரின் நேரடிச் சீடரான ஸ்ரீல ரூபகோஸ்வாமி மகராஜ் அவர்கள் கூறுகின்றார்கள்.
மனம் பொறிவழி போகாது தடுத்து நிறுத்தி, உயர்ந்த இலக்கை நோக்குச் செல்வது தவம். உயர்ந்த இலக்கு என்பது கிருஷ்ணரை அடைவது தவிர வேறு ஏதும் கிடையாது. சிற்றறிவுடையோர், செயல்களின் பலன்கள் தங்களை மகிழ்விக்கும் (மனமும், புலன்களும்) என்று கருதி பலன்நோக்குச் செயல்களின் மூலம் சூழ்நிலையைச் சரிசெய்ய முயற்சி செய்கின்றனர். முழுபிரபஞ்சத்திலும் உள்ள எவ்வித பெளதிக உடலும் (84 லட்சம் வகைகள்) துயரற்ற வாழ்வைத் தராது என்பதை அவர்கள் அறிவதில்லை.
ஆனால் தனது நிலை இறைவனுக்குத் தொண்டு புரிவது என்பதை உணர்பவன் வைகுண்ட லோகத்திற்குச் செல்லத் தகுதி பெறுகிறான். இறைவனுக்காகத் தொண்டாற்றுவதே புத்தியோகம் அல்லது எளிமையாகச் சொன்னால் பக்தித்தொண்டு என்று அழைக்கப்படுகிறது.
ஆன்மீக முன்னேற்றத்திற்கு மனத்தின் பங்கு முக்கியமானது என்பதை வள்ளுவர், சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்.
மனநலத்தினாகும் மறுமை மற்றதும்
இன நலத்தினேமாய் புடைத்து  -  (திருக்குறள்)
‘‘மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து  -  (திருக்குறள் 126)
ஒரு பிறப்பில் ஆமையைப்போல ஐந்து பொறிகளையும் அடக்கி வாழ்ந்தால் அது அவனுக்கு ஏழு பிறவிக்கும் சிறந்த பாதுகாப்பாய் அமையும்.
பகவத்கீதை 2.58-ல் ‘‘புலன்களை அவற்றின் நோக்கப் பொருள்களிலிருந்தும் ஆமை தன் உறுப்புகளைக் கூட்டிற்குள் இழுத்துக் கொள்வதைப் போல் விலக்கிக்கொள்பவனே உண்மையாக அறிவில் நிலைபெற்றவன் என்று அறியப்படுகிறான்.
ஸ்ரீலபிரபுபாதர் அமைத்த அகில உலகக் கிருஷ்ண உணர்வு இயக்கம் அல்லது சமுதாயம், நிலையான மறுவாழ்வின் பொருட்டு மனதைப்பக்குவப்படுத்துவதற்காகத்தான். தானாக முயல்வதைவிட ஒத்த மனமுடைய சமுதாயத்தின் துணையுடன் முயல்வது சிறப்பான பலனை நல்கும் என்பதில் ஐயமில்லை, உலகத்தார் இதனை உணர்ந்து ஈடுபட்டுப்பயன்பெற வேண்டும்.
கலியுகமும் ஹரிநாமமும் சொல்லுதலும்
கலியுகத்தின் போக்கை ஸ்ரீமத்பாகவதம் 12 ஆம் காண்டம் விளக்குகிறது. மனத்தூய்மையும் இல்லை, புறத்தூய்மையும் இல்லை.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு  -  (திருக்குறள் 5)
‘‘இறைவனுடைய மெய்மை சேர்ந்த புகழைச் சொல்லிக் கொண்டிருப்பவனிடத்து, அறியாமையாகிற இருளைச் சேர்க்கின்ற இருவகை வினையும் சேரா, என்கிறார் வள்ளுவர், நல்வினை, தீவினை இரண்டும் அறியாமையாகிய ஜடபெளதிக வாழ்வைக் கொடுப்பது.
பகவத்கீதை 2.50 கூறுகின்றது. ‘‘பக்தி தொண்டில் ஈடுபட்டுள்ளவன் இந்த வாழ்விலேயே, நல்ல, தீய செயல்களின் விளைவுகளிலிருந்தும் தப்புகின்றான். எனவே எல்லாச் செயல்களின் செயற்கலையான யோகத்திற்காக பாடுபடுவாயாக அர்ஜனா!
ஆனால் கிருஷ்ணருடைய பெயரையும், புகழையும் சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கு, கிருஷ்ண உணர்வில் கச்சிதம் உருவாகின்ற காரணத்தால், அல்லது யோகத்தில் பூரணத்துவம் அடைவதால், பிறப்பு இறப்பென்னும் துன்பம் அகன்றுவிடுகிறது.
ப்ருகன்-நாரதீய புராணத்தில்; ‘‘கலியுகத்தில் மக்கள் குறைந்த ஆயுளை உடையவர்கள், ஆன்மீகத்தில் மந்தம் இருக்கும், எப்பொழுதும் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டு துன்பற்றவர்களாக இருப்பார்கள், ஆதலின் இவற்றிற்கு நிவாரணம், ஹரியின் நாமத்தைச் சொல்வதுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹரேர் நாம, ஹரேர் நாம, ஹரேர் நாமைவ கேவலம்
கலெள, நாஸ்த்தி ஏவ நாஸ்த்தி ஏவ நாஸ்த்தி ஏவ கதிர் அன்யதா
சண்டைகளும், பொய்யும் நிறைந்த கலியுகத்தில் விடுதலை பெற ஒரேவழி இறைவனின் நாமத்தை ஜபிப்பதுதான். இதைத் தவிர வேறு வழியில்லை, வேறுவழியில்லை, வேறு வழியில்லை.
கலியுக தர்மமே ஹரி நாமம் சொல்வதுதான், இது தன்னையும் இறைவனையும் உணர வழிசெய்யும். கிருஷ்ணருக்கும் அவருடைய நாமத்திற்கு வேறுபாடு கிடையாது. நாமத்தைச் சொல்லும் பொழுது கிருஷ்ணர் நம்முடன் இருப்பதால் கலியின் தாக்கம் மறைந்து விடுகிறது. ஆத்மா மகிழ்ச்சியடைவதுடன் கிருஷ்ணருடைய இடத்திற்குச் செல்லும் வகையாகிறது.
கலியுகத்தில் கெடுதல்கள் நிறைந்த வண்ணம்தான் இருக்கின்றன. இருந்தாலும் கலிக்கு ஒரு நல்ல குணம் உண்டு. கிருஷ்ண சங்கீர்த்தனத்தால் மட்டும் மூன்று குணங்களின் சங்கத்திலிருந்து விடுபட்டு, உயர்ந்த இடமான கிருஷ்ண உலகத்தை அடைய முடியும் என்று ஸ்ரீமத்பாகவதம் கூறுகின்றது.
கலேர் தோஷ நிதே ராஜன் அஸ்தீஹி ஏகோ மகான் குண:
கீர்த்தனாத் ஏவ கிருஷ்ணஸ்ய முக்த சங்க: பரம் வரஜேத்
ஹரிநாம சங்கீர்த்தனம் செய்ய எளிய மந்திரம்,
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
இந்த ஹரே கிருஷ்ண மகாமந்திரத்தை ஜபிக்கவும், சங்கீர்த்தனமாகப்பாடவும், மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், செய்து காட்டவும், 524 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீகிருஷ்ண பகவானே ஸ்ரீசைத்தன்ய மகாப்பிரபுவாகத் தோன்றினார். ஜீவன்கள் மேல் உள்ள அவரின் கருணை தகுந்த குருசீடப் பரம்பரையில் வந்த தெய்வத்திரு. பக்திவேதாந்த சுவாமி அவர்கள், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஆரம்பித்து (1966), உலகமெங்கும் ஹரி நாம சங்கீர்த்தனத்தையும், பகவத்கீதை, ஸ்ரீமத்பாகவதச் செய்திகளையும் பரப்பினார்.
இவ்வாறு கலியுக தர்மத்தைப் பரப்புவதன் முக்கியத்துவத்தைக் கீழ்க்கண்ட குறளின் மூலம் அறியலாம்.
ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும் வாயெல்லாஞ் செயல்  -  (திருக்குறள் 33)
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல், செல்லுமிடமெல்லாம், அறச்செயலைப்போற்றிச் செய்ய வேண்டும்.
யாரே தேக, தாரே கஹ கிருஷ்ண உபதேச என்பது மகாப்பிரபுவின் கூற்று, யாரைக்கண்டாலும் அவரிடம் கிருஷ்ணரின் உபதேசத்தைக் கூறுங்கள்
திருவள்ளுவரின் வாக்கு ஸ்ரீசைத்தன்ய மகாப்பிரபுவின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை இச்சிறு கட்டுரையில் காட்டியுள்ளோம். படிப்போருக்கும் பயனளிக்கும் முயற்சி என நம்புகிறோம்.
ஸ்ரீலபிரபுபாதர் என்பவர் யார்?
தெய்வத்திரு. அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் 1896ம் வருடம் கொல்கத்தாவில் முறையான வைஷ்ணவ குடும்பத்தில் தோன்றினார். பக்தித்தொண்டின் நெறிகளை சிறுவயதிலிருந்தே கற்று வந்த அவர், தனது ஆன்மீக குருவான ஸ்ரீலபக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமியினை 1922-ம் வருடம் கொல்கத்தாவில் முதன்முறையாக சந்தித்தார். பின்னர் 1933ல் ஸ்ரீலபிரபுபாதர் முறையாக அவரிடம் தீட்சை பெற்று சீடரானார்.
1959ல் சந்நியாஸம் ஏற்றுக்கொண்டு, அவர் தனது வாழ்வின் முக்கியமான பணியினைத் தொடங்கினார் - 18,000 பதங்களைக்கொண்ட ஸ்ரீமத் பாகவதத்தினை மொழிபெயர்த்து விளக்கமளிக்கத் தொடங்கினார்.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை 1966-ம் வருடம் ஜலை மாதம் ஸ்தாபனம் செய்தார். 1977, நவம்பர் 14ம் நாள் இவ்வுலக விட்டுச்செல்வதற்குமுன் நூற்றுக்கணக்கான கோயில்கள், ஆஸ்ரமங்கள், பண்ணைகள் போன்றவற்றை நிறுவி, இவ்வியக்கத்தினை உலகெங்கிலும் பரவச் செய்தார். மேற்கத்திய நாடுகளில் முதன் முதலில் குருகுலப் பள்ளியை திறந்த பெருமையும் அவரையே சாரும்.
1972ல் ஸ்ரீல பிரபுபாதரால் தொடங்கப்பட்ட பக்தி வேதாந்த அறக்கட்டளை, உலகின் தலைசிறந்த ஆன்மீகப் புத்தக நிறுவனமாக இன்று விளங்குகிறது.
இதன் மூலம் வெளியிடப்பட்ட புத்தகங்கள் ஆழமான தத்துவம், அதிகாரத்தன்மை, தெளிவு ஆகியவற்றின் காரணத்தால் பல்வேறு அறிஞர்களால் போற்றப்பட்டு உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகமாக உபயோகிக்கப்பட்டு வருகின்றன. பன்னிரண்டு வருடங்களில் உலகினை பதினான்கு முறை வலம் வந்து மிகவும் வயதான சூழ்நிலையிலும், உலகின் ஆறு கண்டங்களிலும் கிருஷ்ணரைப் பற்றி உரையாற்றி மக்களிடம் ஆன்மீக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார் ஸ்ரீலபிரபுபாதர்.
ஸ்ரீலபிரபுபாதரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம், இஸ்கான் கோயில்களில் கிடைக்கும்.

ஸ்ரீசைதன்ய மஹாப்பிரபு என்பவர் யார்?
பகவான் ஸ்ரீசைதன்ய மஹாப்பிரபு என்பவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரே ஆவார். இவர் 500 வருடங்களுக்கு முன்னால், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் தோன்றியவர். இவர் கலியுகத்தின் விசேஷமான அவதாரமாவார். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் புனித நாமங்களை ஜெபம் செய்வதன் மூலமே ஒருவர் கிருஷ்ண பக்தியில் மிகவுயர்ந்த நிலையாகிய கிருஷ்ண பிரேமையை அடை முடியும் என்பதை பிரச்சாரம் செய்வதற்காக தோன்றியவர்.
பகவான் ஸ்ரீசைதன்ய மஹாப்பிரபு முழு முதற்கடவுளாகிய ஸ்ரீகிருஷ்ணரே ஆவார் என்பதை கீழ்க்கண்ட வேத சாஸ்திரங்கள் ஆதாரம் செய்கின்றன.
க்ருஷ்ண-வர்ணம் த்விஷா கிருஷ்ணம் ஸாங்கோபாங்பாஸ்த்ர பார்ஷதம்
யக்ஞை ஸங்கீர்த்தன-ப்ராயைர் யஸஜந்தி ஹி ஸ-மேதாஸா
‘‘கலியுகத்தில் சிறந்த புத்திமான்கள், சதா ஸ்ரீகிருஷ்ணருடைய நாமங்களைப் பாடிக்கொண்டிருக்கும் பகவானின் அவதாரத்தைக் கீர்த்தனை என்ற யாகத்தாலேயே பூஜிக்கின்றனர். அவரது வர்ணம் கருமையில்லை என்றாலும் அவர் ஸ்ரீகிருஷ்ணரேயாவார். அவர் தமது சகாக்களாலும், சேவகர்களாலும், ஆயுதங்களாலும், அந்தரங்கத் தோழர்களாலும் சூழப்பட்டிருக்கிறார். - ஸ்ரீமத்பாகவதம் 11.5.32
கலே ப்ரதம சந்த்யாயாம் கெளரங்கோ ஹம் மஹி-தலே
பாகீரதி-ததே ரம்யே, பவிஷ்யாமி சசி - சுதஹ
கலியுகத்தின் முதல் சந்தியில் நான் கெளரங்கா என்ற பெயரில் தோன்றுவேன். அப்பொழுது, இந்த பூமியில் கங்கை கரையின் அழகான இடத்தில் தோன்றுவேன். சசிதேவியின் மகனாக பிறப்பேன். அப்பொழுது நான் தங்கநிற மேனியை உடையவனாவேன். - பத்மபுராணம்
கோலோகம் ச பரித்யாஜ்ய, லோகானம் த்ராண-காரணாத்
கலெள கெளரங்க-ரூபணே, லீலா-லாவண்ய-விக்ரஹ
‘‘கலியுகத்தில், நான் என்னுடைய நிரந்தர இருப்பிடமாகிய கோலோக விருந்தாவனத்தில் இருப்பதில்லை. அப்போழுது நான், இப்பூவுலகின் எல்லா ஜீவராசிகளையும் விடுவிப்பதற்காக, மிக அழகான மற்றும் வசீகரமான ரூபத்துடன் பகவான் கெளரங்கராகத் தோன்றுவேன். - மார்கண்டேய புராணம்
இப்படிப்பட்ட பகவானாகிய ஸ்ரீசைதன்ய மஹாப்பிரபு, கலியுக தர்மமாகிய ஹரேகிருஷ்ண மஹாமந்திரத்தைப் பரப்புவதற்காகவே அவதரித்தார்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
கலியுகத்தின் தர்மம் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் புனித நாமங்களை ஜெபம் செய்வதே என்று கீழ்க்கண்ட வேத சாஸ்திரங்கள் நமக்கு ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
இதி சோசகம் நாம் நாம் கலி கல்மஷ நாசனம்
நடஹ பரதரோபாயஹ சர்வ வேதேஷ த்ருஷ்யதே
இந்த 16 நாமங்கள் அடங்கிய 32 ஒலி அட்சரங்கள் கொண்ட ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் கலியுகத்தின் கெடுதல்களை எதிர்ப்பதற்கான ஒரே உபாயம். வேத இலக்கியம் எல்லாவற்றையும் தேடிப்பார்த்த பிறகு ஒருவரால் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பது போன்ற உன்னதமாக வழிபாடு ஏதும் இல்லை.  -  கலிசந்தரண உபநிஷதம்
ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம்
கலெள நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ கதிர் அன்யதா
‘‘கலியுகத்தில் ஆன்மீக நிறைவிற்கு பகவானின் புனிதநாமம், புனித நாமம், புனித நாமம் ஒன்றைத் தவிர வேறு வழி இல்லை, வேறு வழி இல்லை, வேறு வழி இல்லை.
கலி காலே நாம ரூபே க்ருஷ்ண அவதார
நாம ஹைதே ஹய சர்வ-ஜகத்-நிஸ்தார
‘இந்த கலியுகத்தில், பகவானின் புனித நாமமாகிய ஹரே கிருஷ்ண மஹாமந்திரம், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரமாகும். புனித நாமத்தை ஜெபம் செய்வதாலேயே, ஒருவன் பகவானுடன் நேரடித்தொடர்பு கொள்ள முடியும். யார் ஒருவர் இதை செய்கின்றாரோ அவர் நிச்சயம் விடுதலை அடைவார்.  -  ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம்.
மஹா மந்திரம் என்றால் என்ன?
மந்திரம் என்றால் மனதை விடுவிப்பது என்று பொருள். அதாவது மன் என்றால் மனம், திரா என்றால் விடுவிப்பது. மனதை அதன் துன்பங்களிலிருந்து விடுவிப்பது மந்திரம் ஆகும். ஒரு மந்திரம் ஒரு குறிப்பிட்ட துன்பத்தை மட்டும் நீக்க உதவலாம். ஆனால் மஹா மந்திரம் எனப்படுவது எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் மனதை விடுவிக்கும் சக்திவாய்ந்ததாய் இருக்க வேண்டும்.
மனச்சஞ்சலங்கள், மனச்சோர்வு, மன அழுத்தம், மனக்குழப்பம், பாவவிளைவுகள் தீய சிந்தனைகள் சண்டை சச்சரவுகள், காம க்ரோத மோஹ மத மாச்சார்யம் மற்றும் அனைத்து விதமான மனதின் துன்பங்களில் இருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி ஹரே கிருஷ்ண மந்திரத்திற்கு இருப்பதால் மஹா மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இம் மஹா மந்திரத்தைச் சொல்லக்கட்டுப்பாடுகள் ஏதுவும் இல்லை.
உச்சரிக்கும் முறை நம் காதுகளுக்கு கேட்கும் வகையில் தினமும் குறைந்த பட்சம் 108 முறை ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்து வந்தால் மன அமைதியையும் சந்தோஷத்தையும் பெறலாம்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே