Reply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
வஞ்சனை என்பதற்கு ஆங்கிலத்தில் http://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88 deceit என்று பொருள். deceit என்றால் எமாற்றுத் தனம்.

1. துரோணர் வில்வித்தைக் கற்றுக் கொடுக்கவில்லையென்றால் அர்ஜுனன் மேல் பொறாமை கொள்வதுதான் நல்லவனுக்கு அழகா? அது காரணமற்ற பொறாமை இல்லையா? இங்கு கர்ணன் நம்மை ஏமாற்றுகிறான்.

2. 12வருட கானகவாசத்தைப் பாண்டவர்கள் அமைதியாகக் கழிப்பதை அவனோ, சகுனியோ விரும்பவில்லை. அதற்கு கோஷ யாத்திரை செல்லும் முடிவை அவனே துரியோதனனுக்கு ஊட்டுகிறான். உனது செழிப்பைக் காட்டி, அவர்களது வறுமையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை அசூயை கொள்ள வை என்று கர்ணனே சொல்கிறான். அங்கு செல்வதற்கான அனுமதியை திருதராஷ்டிரனிடம் எப்படிப் பெறுவது என்பது வரை அவனே காய் நகர்த்துகிறான். இவையெல்லாம் ஒரு நல்லவன் செய்ய மாட்டானே என்று நம்பும் நம்மை அவன் ஏமாற்றவே செய்கிறான். காண்க http://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section236.html

3. //அவனுக்கு அவன் ஒரு சத்ரியன் என்று தெரியாதே. பரசுராமர் ஷத்ரியர்களுக்குத் தானே கற்றுத் தரமாட்டார்.//
நண்பரே அவன் சத்ரியன் என்று தெரியாது என்கிறீர்கள். ஆனால் நிச்சயம் அவன் பிராமணன் இல்லை என்பது அவனுக்குத் தெரியும். கல்வி கற்கத்தானே பொய் சொன்னான் என்று நீங்கள் லேசாக நினைக்கலாம். ஆனால் பரசுராமரின் கதையை நன்கு தியானியுங்கள். அவர் குடும்பமே க்ஷத்திரியர்களால் அழிந்தது. தன் தாய், தந்தை, பாட்டன் என அவரது உறவினர்கள் அனைவரும் க்ஷத்திரியர்களின் அநீதியால் அழிந்தனர். இதைக் கண்டு கொதித்தெழுந்து, ஆறாத வடுவுடன், க்ஷத்திரியர்களைத் தன் வாழ்நாள் எதிரியாகக் கருதி, இருபத்தோரு தலைமுறை க்ஷத்திரியர்களைக் கொன்றொழித்தவரிடம் சென்று தான் ஒரு பிராமணன் என்று பொய் சொல்வதோ, அல்லது தான் பிராமணன் அல்ல என்பதை மறைத்து அவரிடம் கல்வி பெறுவதோ பெரும் ஏமாற்று வேலையே ஆகும். இங்கும் கர்ணன் நம்மை ஏமாற்றவே செய்கிறான்.

4. //அவனின் கோபமும் வெறியும் அவனை திரௌபதியை அவமதிக்கத் தூண்டியது. அது தீய செயல்தான். ஆனால் வஞ்சனை இல்லை.// ஒரு நல்லவன் வேசியின் துணியைக் கூட சபையின் நடுவே உருவச் சொல்லமாட்டான். அங்கும் கர்ணன் நம்மை ஏமாற்றவே செய்கிறான்.

கோஷயாத்திரையின் போது துரியோதனன், துரியோதனன் வீட்டுப் பெண்டிர் மற்றும் துரியோதனனின் தம்பிகளை அனைவரையும் கைவிட்டு, தனது உயிரைக் காத்துக் கொள்ள ஓடிய கர்ணன் செய்தது ஏமாற்று இல்லையா? வீரமாக நின்று நண்பனுக்காக உயிரைக் கொடுக்க வேண்டும் என்று கர்ணன் அங்கு சிந்திக்கவில்லையே! இங்கும் கர்ணன் நம்மை ஏமாற்றுகிறானே நண்பரே. அதன் பிறகு அவன் உலகையே வென்று கொடுத்தால் என்ன? துரியோதனன் பட்ட அவமானம் அவனுக்கல்லவா தெரியும்? அதுதானே உணவைத் துறந்து மரிக்கிறேன் என்று ஆவேசமாக அமர்ந்தான். காண்க: http://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section239.html & http://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section245.html.

இப்படிப்பட்ட செயல்கள் அனைத்திலும் நம்மை ஏமாற்றியே இருக்கிறான் கர்ணன்.

ஏமாற்று என்பது வஞ்சனையே.

இதனால் கர்ணனிடம் நல்ல குணங்களே இல்லை என்று நான் சொல்வதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தலைப்புக்காக விவாதிக்கவே இவற்றைச் சொல்கிறேன். பல இடங்களில் கர்ணன் நல்லவன்தான்.

மிகவும் குறிப்பாக, தாய் {குந்தி} வந்து கேட்ட போதும், நண்பனைத் துறக்கமாட்டேன் என்று தனக்கு மரணம் நேரிடும் என்பதை அறிந்தும் கர்ணன் சொன்னதை நினைக்கும்போதெல்லாம் மெய்சிலிர்க்கவே செய்யும்.

ஏன், அனைவராலும் தீயவன் என்று சொல்லப்படும் துச்சாசனன் கூட நல்லவன்தான். அனைத்தையும் தன் அண்ணனுக்காகவே செய்தான். ராமனுக்கு லட்சுமணன் போல, துரியோதனுக்கும் ஒரு லட்சுமணன் துச்சாசனன் என்ற பெயரில் இருந்திருக்கிறான் என்றே கருதுகிறேன். காண்க : http://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section247.html