Reply – Re: ஐவருக்கு ஒருத்தியா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: ஐவருக்கு ஒருத்தியா?
— by தாமரை தாமரை
பாஞ்சாலியின் கதையில் வருபவற்றை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற நெறி அந்தக் காலத்தில் இருந்ததா என்று ஆராய்வோம்.

குருவம்சத்தின் புகழ்பெற்ற இராஜமாதா சத்தியவதி. அவளுக்கு பராசரர் மூலம் பிறந்தார் வியாசர். பின்னரே அவர் சந்தனுவை மணந்தார்,.

அவருக்கு பிறந்த இரு பிள்ளைகளுக்கோ மகவுகள் இல்லை. வியாசர் அம்பிகா, அம்பாலிகா ஆகியோருடன் சேர்ந்து பிள்ளை பெறுகிறார்கள்.

பாண்டுவுக்குப் பிறந்தவர்கள் அல்ல பாண்டவர்கள். எமதர்மன், வாயு, இந்திரன், அஸ்வினி தேவர்கள் எனும் ஐந்து தேவர்களுக்குப் பிறந்தவர்கள். சூரியன் மூலம் கர்ணனும் உண்டு.

அப்படி இருக்க பாஞ்சாலி ஐவருக்குப் பத்தினி, அது தவறு எனச் சொல்லுதல் எப்படிச் சரியாகும். அவள் அனைவருக்கும் உண்மையாக வெளிப்படையாக வாழ்ந்தாள். அப்படியானால் அவள் செய்தது எப்படித் தவறாகும்?

அர்ச்சுனனை மணக்கவே பிறந்தவள் எனச் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவள் திரௌபதி, அப்படி இருக்க அவள் அர்ச்சுனன் மேல் அதிக அன்பு காட்டியதில் வியப்பில்லை. அர்ச்சுனனே அவளை சுயம்வரத்தில் வென்றான். உரிமை அவனுக்கு அதிகம்.

ஐவரை அவளா விரும்பி மணந்தாள். ஒருவனுக்குத் தெரியாமல் இன்னொருவரை மணந்தாளா? குந்தி சொன்ன பின் மணம் முடியும் வரை எத்தனைப் போராட்டம். செய்வது தருமமே என வியாசர் முதல் கிருஷ்ணன் வரை எடுத்துச் சொல்லி அல்லவா மணம் நடந்தது.

ஒரு பெண் ஒருவனைத்தான் மணக்க வேண்டும் என்பதைச் சொன்னது யார்? கடவுளா? தேவர்களா? வேதமா? தர்மமா? எது?

வேதம் படைத்த வியாசர் தானே இதுசரி என எடுத்துரைக்கிறார். அப்படி இருக்க பாஞ்சாலி மேல் எதைச் சொல்லிக் குற்றம் சாட்டுவது? அவள் தன் கணவர்களுக்கு துரோகம் செய்யவில்லை. அவள் தன் கணவர்களை விட்டுத்தரவில்லை. அவள் தன் கணவர்களை விட்டு விட்டு பிறந்தவீடு ஓடிவிடவில்லை. இப்படித் தவறான எதையும் செய்யாத அவளை எதைக் கொண்டு குற்றம் சொல்வீர்கள்?

அப்படி அவள் வாழ்ந்ததினால்தான் அவள் கற்புக்கரசி. கீசகனோடோ, துரியோதனனோடோ அல்லது ஜெயத்ரதனோடோ அவள் ஓடவில்லை. கொண்டகடமையைச் சரியாகச் செய்தாள். அதனால் அவள் கற்புக்கரசி.

கணவனிருக்க இன்னொருவனை மோகிப்பவளே தவறானவள். திரௌபதி அப்படி அல்லள்.

திரௌபதியின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் எந்த ஒரு நொடியிலும் அவளுக்கு ஒரு கணவன்தான். அதுமாதிரியான ஒரு அமைப்பைத்தான் வியாசர் அவளுக்கு உருவாக்கித் தருகிறார்.

சான்றோர் எதைப் பழித்தார்கள் என்பதை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். சான்றோர் என்பவர் யார் என்பதையும் காணவேண்டும்.

ஒழுக்கம் என்பது நெறியில் ஒழுகுவதாகும். வியாசர் வகுத்த நெறியில்தான் திரௌபதி ஒழுகினாள்.

ஒருவனுக்கொருத்தி என்பது பெண்களுக்கு மட்டும்தானா? தொல்காப்பியம் இன்னுமொன்றையும் சொல்கிறது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல
கால வகையினானே என்கிறது.

அன்னையின் ஆணை என்ற ஒற்றை நூலின் மேல் பின்னப்பட்டது திரௌபதியின் திருமணம்.

இதில் திரௌபதியின் தவறு எதுவுமே இல்லை.

அதுவும் வியாசர் தொகுத்த வேதத்தின்படி ஒழுகுவோர் குற்றம் சொல்ல முகாந்திரமே இல்லை.

வியாசரை விட உயர்ந்த சான்றோன் அக்காலத்தில் இல்லை, எனவே சான்றோர் பழிக்கும் செயலை அவள் செய்யவில்லை.

தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததா என்ற கேள்வி உங்களுடையது. தமிழர்களும் பல மனைவிகள் கொண்டவர்களாகத் திகழ்ந்தவர்கள் தானே? தமிழ்கடவுளான முருகனுக்கே இருமனைவிகள் அல்லவா?

திருமணம் என்பது விருத்திக்கானது. குலம், தர்மம், ஆயுள் என அனைத்தையும் விருத்தி செய்வதாகும்.

 நமது குழந்தைகளுக்கு நாம் இதை எப்படி நியாயப்படுத்துவது என்ற கண்ணோட்டத்தில்தான் இதை பார்க்கவேண்டும்.

அப்படியானால் முதலில்  நாம் தர்மம் அறியவேண்டும்.

தர்மத்தையே முழுதாக அறியாத நாம் இது தவறு என்று எதை வைத்துக் கூறுகிறோம்?

பாஞ்சாலியை பாஞ்சாலியாகவே காட்டுவதுதான் சரி. அவளைத் தெய்வமாக்கிப் புகழ வேண்டியதில்லை. பரத்தையாக்கி இகழ வேண்டியதில்லை.

இது இப்படியாக நடந்தது என்பதே இதிகாசத்தின் விரிவாகும்.

எந்த ஒன்றும் நல்லதும் அல்ல. கெட்டதும் அல்ல.

நல்லதும் கெட்டதும் பொருளில் இல்லை. அது நம் அறிவில் இருக்கிறது.

ஒரு விசயம் பற்றி நமக்கு நல்லது அதிகம் தெரிந்தால் அதை நல்லது என்கிறோம். கெட்டது அதிகம் தெரிந்தால் அதைக் கெட்டது என்கிறோம்.

நமக்குத் தெரிந்ததை மட்டுமே வைத்து முடிவு எடுக்கிறோம். ஆனால் கற்றது கைமண்ணளவு.

இறைவன் படைப்பில் நல்லது இல்லாத விஷயம் இல்லை. கெட்டது இல்லாத விஷயம் இல்லை.


ஒரு விஷயத்தில் இருக்கும் நல்லதை எடுத்துக் கொள்ளத் தெரிந்தவன் நல்லவனாகிறான்
கெட்டதை எடுக்கத் தெரிந்தவன் கெட்டவனாகிறான்

உலகில் இருளும் வெளிச்சமும் சம அளவே உள்ளன. எந்த ஒரு புள்ளியை எடுத்துக் கொண்டாலும் ஒரு வருடத்தில் பகல் 182.5125 நாட்கள்தான். இரவு 182.5125 நாட்கள்தான். அதே போல்தான் நல்லதும் கெட்டதும் சம அளவிலேயே உள்ளன.

ஒரு கையில் இருக்கும் ஐந்து விரல்களும் ஒன்றைப்போல் இல்லை என்பது ஒரு பார்வை.
ஒன்று போல் இல்லாத ஐந்து விரல்களுக்கும் ஒரே கைதான் என்பது இன்னொரு பார்வை.

இதற்கே இப்படி என்னும் பொழுது மகாபாரதத்தை நாம் எத்தனைக் கோணங்களில் பார்ப்பது?


அதாவது நமக்கு இருக்கும் கொஞ்சூண்டு அறிவை மட்டுமே கொண்டு ஒரு விஷயத்தை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்?

திரௌபதியின் மணம் பற்றியே பேசுகிறோம். அவளின் முழுவாழ்க்கையைப் பார்த்தோமா?

அவள் வாழ்க்கையை எப்படிக் கடைபிடித்தாள்? எதை உயர்வாகக் கொண்டாள் எனப்பார்த்தோமா?

இல்லையே.. ஐந்து மணம் செய்துகொண்டாள் தவறு என்று ஒரு புள்ளியில் உலகத்தை அடக்கலாமா?