Reply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
— by R.Santhanakrihnan R.Santhanakrihnan
மேலே நான் குறிப்பிட்ட பதிவில் குரு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதைகுறித்து சில தகவல்களை பகிற்ந்து கொள்ள விழைகிறேன்.

கத்தரிக்காய் வாங்குவதும், குருவும் (போலிகளை கண்டு ஏமாறவேண்டாம்)

போலி குருக்களின் இன்றைய நிலை:
சந்தைப்படுத்தப்படும் பொருட்கள் முதல் சமீபத்திய அரசியல் வரை ஊடகங்களின் பங்களிப்பு அலாதியானதாக இருப்பதை நாம் காண்கிறோம். ஊடகங்கள் ஆன்மீகத்திலும் தன் ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கிய பின் இயற்கையாகவே ஆன்மீகத்தில் ஆர்வமுள்ள மக்களை அதன்பால் திருப்பிட ஊடகங்களுக்குள் மிகப்பெரிய போட்டியே நிலவுகிறது. சக்தி மிக்க ஊடகங்கள் சிறிய அளவில் பிரபலமாக உள்ள பெயரளவு ஆன்மீகிகளை தனது நிகழ்ச்சிகளின் வாயிலாக மேலும் பிரபலப்படுத்துகிறது. புகழின் உச்சானிக்கொம்புகளுக்கு சென்ற இதுபோன்ற ஆன்மீகிகள் ஊடகக்கண்கள் தங்களை தொடர்ந்து உற்றுநோக்குவதைக் கூட உணராது போகின்றனர்.
பெரிய முயற்சிகள் ஏதுமின்றி விளம்பரப்படுத்தும் உத்திகளின் மூலமாக பெரிய அளவில் பேசப்படும் இதுபோன்றவர்கள். வீழ்ச்சியடையும்போது அவர்கள் மட்டுமல்லாது தங்களின் சீடர்களையும், தங்களை பின்பற்றும் பொதுமக்களையும் (பக்தர்கள்) பெரிய அளவில் வருத்தப்பட வைக்கின்றனர். சிலர் இது போன்ற ஆன்மீகவாதிகளின் முழுஅளவிலான உருவப்படங்களை தங்களது அலுவலகங்கள், வீடுகள் என்று பெரிய அளவில் அலங்கார பொருளைபோல் வைத்துவிட்டு இவர்களின் தவறான நடவடிக்கைகள் ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்படும்போது சமுதாயத்தில் சிறிது காலத்திற்கு அவர்களைக்காட்டிலும் இவர்கள் குற்ற உணர்வுடன் திரிவதைப் பார்க்க முடிகிறது.
ஆனால் அதே நேரத்தில் ஊடகங்கள் முதலில் இதுபோன்ற போலி நபர்களை பெரிது படுத்தியபோது பார்த்த லாபத்தைவிட, அவர்கள் கையும் களவுமாக அகப்பட்டதை திரும்பத் திரும்ப காண்பிக்கும்போது அதிக லாபம் பார்ப்பதை மக்கள் உணர்வதில்லை. துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற போலி சந்நியாசிகளின் நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் இதே ஊடகங்கள் ஒளிபரப்புவது வெட்ககேடானது மட்டுமல்லாமல் கண்டிக்கத்தக்கதுமாகும். அதேநேரத்தில் கறிகாய் வாங்க கடைக்குச்சென்று கத்திரிக்காயை பார்த்துப்பார்த்து வாங்குவதில் காட்டப்படும் முனைப்பில் சிறிதளவுகூட ஆன்மீக குருவினை தேர்ந்தெடுப்பதில் நாம் காட்டுவதில்லை என்பதும் மறுப்பதற்கில்லை.
ஆசிரியருக்கும் ஆன்மீக குருவிற்கும் உள்ள வேறுபாடு:
ஒரு மாணவனின் வாழ்நாளில் ஆசிரியர் என்பவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உட்பட்டவராகவும். ஒரு குறிப்பிட்ட பாடத்தில், ஒரு குறிப்பிட்ட அளவில் நிபுணத்துவம் பெற்று தான் தெரிந்து வைத்துக்கொண்ட விஷயத்தில் சிறிய அளவில் தனது மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பவராக மட்டுமே இருக்கிறார். தான் குறிப்பிடும் வார்த்தைகளை சில நேரங்களில் பின்பற்றியும் பெரும்பாலன நேரங்களில் தானே பின்பற்ற  இயலாதவராகவும் இருக்கிறார். தனது மாணவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் தலையிட இயலாததோடன்றி ஒரு சில பாடங்களை மட்டும் தனது மாணவனுக்கு சொல்லிக்கொடுத்து ஏதாவது ஒரு பட்டம் மட்டுமே பெற அவனை தயார் செய்பவராக இருக்கிறார். அந்த பாடம் கடந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க தெரியாதவராவே ஆசிரியர் இருக்கிறார்.
ஆனால் ஆன்மீக குரு என்பவர், ஒரு சிஷ்யனின் ஒவ்வொரு பிறவியிலும் (ஜென்மே ஜென்மே பிரபு சே) வழிகாட்டுபவராக இருக்கிறார். வேத சாஸ்திரங்களில் நிபுணத்துவம் பெற்ற அவர், இந்த உலகிற்கு மட்டுமல்லாது மறுமைக்குமான கல்வியை அளிப்பவராகவும், தான் யார்? வாழ்வின் குறிக்கோள் என்ன? மரணத்திற்கு பின் என்ன நிகழப்போகிறது என்பது உள்ளிட்ட இம்மைக்கும் மறுமைக்குமான பூரண ஞானத்தை அளிப்பவராகவும், அறிந்தவராகவும் இருக்கிறார். தான் சொல்லிக்கொடுப்பதை, தானும் பின்பற்றுபவராகவும், அவர் வழங்கும் அறிவுரைகளின் மூலத்தை உணர்ந்தவராயும் இருக்கிறார். தனது மாணவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அனைத்தையும் அறிந்தவராகவும், அவற்றின் மீது அறிவுரை வழங்குபவராயும் இருக்கிறார். குரு ஆன்மீக அறிவை மாணவனுக்கு வழங்கியதன் மூலமாகவே அனைத்து ஞானத்தையும் வழங்கியவராக ஆகிறார்.

போலி குருக்களை நிராகரித்தல்  - சாஸ்திர உதாரணங்கள்:
ஸ்ரீல ரூப கோஸ்வாமி தனது பக்தி ரஸாம்ருத சிந்துவில் (1.2.101)
ஷ்ருதி-ஸ்ம்ருதி-புராணாதி-பாஞ்சராத்ர-விதிம் வினா
ஐகாந்திகீ ஹரேர் பக்திர் உத்பாதாயைவ கல்பதே
உபநிஷத்துகள், புராணங்கள், நாரத பஞ்சராத்ரம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட வேத சாஸ்திரங்களை அலட்சியப்படுத்திய நிலையில் செய்யப்படும் பக்தித்தொண்டு, சமுதாயத்தில் தேவையற்ற தொந்தரவே." என்று எழுதுகிறார்: பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட ஆலோசனைகளுக்குட்பட்ட நபர்களை தாங்கள் பின்பற்றுகிறோமா என எப்போதாவது ஆலோசனை செய்ததுன்டா. ஒருவேளை குருக்கள் போலியான நபர்கள்தான் என்பதை சாஸ்திர ஞானத்துடன் அறிந்துகொண்டால் அவர்களை துறப்பதற்கு யாரும் தயக்கம் காட்டத் தேவையில்லை தயங்கத்தேவையில்லை. ஆன்மீக குருக்களை விட்டு விலகுவதை சாஸ்திரங்கள் எதிர்த்தபோதிலும், போலி குருக்களை விட்டு நீங்குவதை சாஸ்திரங்கள் எதிர்ப்பதில்லை.
சாஸ்திரப்படி சீடனை பகவானின் லோகத்திற்கு அழைத்துச் செல்லவேண்டியது குருவின் கடைமையாகும். அதை அவரால் செய்ய இயலவில்லையென்றால், மாறாக பகவானிடம் திரும்பிச்செல்லும் சீடனைத் தடுப்பாரானால் அவர் ஒரு குருவாக இருக்கக்கூடாது. குருர் ந ஸ ஸ்யாத் -- தன்னைச் சார்ந்திருப்போரை பிறப்பு இறப்பு சுழற்சியில் மீண்டும் மீண்டும் சிக்கவைக்கும் பாதையிலிருந்து மீட்க முடியாதவன் ஓர் ஆன்மீக குருவாகவோ, ஒரு தந்தையாகவோ, ஒரு தாயாகவோ வணங்குவதற்குரியத் தேவனாகவோ ஆதல் கூடாது. என்று ரிஷபதேவர் தம் மைந்தர்களுக்கு உபதேசிக்கிறார். (ஸ்ரீமத் பாகவதம் 5.5.18) பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஒரு பக்தனாவதே வாழ்வின் நோக்கமாகும். இதனால் ஜட வாழ்வின் பந்தத்திலிருந்து ஒருவரால் விடுபட முடியும். கிருஷ்ண உணர்வை விருத்தியடைய செய்வதன் மூலமாக, சீடன் இந்நிலையை அடைவதற்கு ஆன்மீக குரு உதவுகிறார். வாமன தேவருக்குக் கொடுத்த வாக்குறுதியை மறுத்துவிடும்படி சுக்ராசாரியர் பலி மகாராஜனுக்கு அறிவுரை கூறினார். தன் ஆன்மீக குருவின் உத்தரவிற்கு உடனடியாக கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது பலி மகாராஜனைப் போன்ற நிதான புத்தியுடையவர்களின் கடமையாகும். ஆனால் பகவத் கீதை கூறுகிறது யத் கரோஷி யத் அஷ்நாஸி--எதை நீ செய்கிறாயோ, எதை நீ உண்கிறாயோ, எதை நீ அர்ப்பணிக்கிறாயோ, எதை நீ கொடுக்கிறாயோ, எந்த தவம் செய்யினும் அதனை எனக்கு அர்ப்பணமாக செய்வாயாக. (பகவத் கீதை-9.27) எனவே ஆன்மீக குருவின் கடமையிலிருந்து சுக்ராச்சாரியார் விலகிச் சென்றுவிட்டதால் சுக்ராச்சாரியரை இனிமேல் ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று பலி மகாராஜன் கருதினான். ஆகவே இத்தகைய சூழ்நிலையின் கீழ் ஒருவர் தனது ஆன்மீக குருவின் உத்தரவை மீறுவதில் தவறு இருக்காது; ஏனெனில் குருவாக இருக்க வேண்டிய ஒருவர் விஷ்ணு பக்திக் கொள்கைக்கு எதிராக நடந்தால் அவரை ஒரு குருவாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவ்வாறு தவறுதலாக ஏற்றுக்கொண்டிருந்தால் அத்தகைய ஒரு குருவை ஒருவன் துறந்து விட வேண்டும். அத்தகைய ஒரு குரு பின்வருமாறு விவரிக்கப்படுகிறார். (மஹாபாரதம், உத்யோக. 179.25)
குரோர் அபி அவலிப்தஸ்ய கார்யாகார்யம் அஜானத:
உத்பத  ப்ரதிபன்னஸ்ய பரித்யாகோ விதீயதே
அத்தகைய ஓர் உபயோகமற்ற குருவை, குருவைப் போல் செயல்படும் குடும்பப் புரோகிதரைத் துறந்து, உண்மையான குருவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆன்மீகம் என்பது ஏதோ நம் மனதில் தோன்றிய கற்பனைகளை வெளிக்காட்டும் மூட நம்பிக்கையாய் இல்லாமல் குரு, சாது, சாஸ்திரத்தை அடிப்படையாக ஏற்று அதனை பின்பற்றுவது மட்டுமே இதன் இறுதி தீர்வாக அமையும் என்பதை மக்கள் உணராத வரை ஏமாறுபவர்களும், ஏமாற்றப்படுபவர்களும் வையம் உள்ளவரை வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
குரு என்றால் யார்? அவரின் தகுதிகள் என்ன?
குரு, சாது, சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள் அப்படி என்னதான் கூறுகிறார்கள்:
ஸ்ரீ சம்ப்ரதாயத்தின் பெரும் ஆசார்யர்களில் ஒருவரான ஸ்ரீமணவாள மாமுனிகள் தனது உபதேச ரத்னமாலையில்
ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடைய
னான குருவை அடைந்தக்கால்  மாநிலத்தீர்
தேனார் கமலத் திருமாமகள் கொழுனன்
தானே வைகுந்தம் தரும்
ஞானம் (வேதஅறிவு), அனுஷ்டானம் (பின்பற்றுதல்) உடைய குருவை நாம் அடைந்த மாத்திரத்தில் திருமாமகள் கொழுனனான ஸ்ரீவைகுண்டநாதன், ஸ்ரீவைகுண்டத்தை தானாகவே தந்துவிடுகிறார் என்கிறார். தரும் என்கிற வார்த்தையை இங்கே கவனிக்க வேண்டும். தருவார் என்றல்ல தரும் என்பதை இங்கு உற்று நோக்க வேண்டும். அப்படியான குருவின் லக்ஷனம் தான் என்ன.
கல்வியறிவு, ஞானம், பெரும்பதவி, இவையெல்லாம் வாழ்வின் சிக்கலை தீர்க்க சற்றும் உபயோகமற்றவையே. ஆன்மீக குரு மட்டுமே இதில் உதவ முடியும். எனவே, 100 சதவீதம் கிருஷ்ண உணர்வில் இருக்கும் குருவே, அங்கீகாரம் பெற்ற ஆன்மீக குரு  ஏனெனில், அவரால் மட்டுமே வாழ்வின் சிக்கல்களைத் தீர்க்க முடியும். சமுதாய நிலைகள் எப்படி இருப்பினும், கிருஷ்ண உணர்வு பற்றிய விஞ்ஞானத்தில் வல்லுநராக இருப்பவர், அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குரு என்று பகவான் சைதன்யர் கூறியுள்ளார்.
கிபா விப்ர, கிபா ந்யாஸீ, ஷத்ர கேனே நய
யேய் க்ருஷ்ண-தத்த்வ-வேத்தா, ஸேய் குரு ஹய
ஒருவன் விப்ரனோ (வேத ஞானத்தைக் கற்றறிந்த பண்டிதர்), தாழ்ந்த குலத்தில் பிறந்தவனோ, துறவியோ  அது பொருட்டல்ல; கிருஷ்ணரைப் பற்றிய தத்துவத்தில் வல்லுநராக இருந்தால், அவரே பக்குவமும், தகுதியும் பெற்ற ஆன்மீக குரு ஆவார். (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை, 8,128) எனவே, கிருஷ்ணரைப் பற்றிய விஞ்ஞானத்தில் வல்லுநராக ஆகாமல், எவரும் அங்கீகாரம் பெற்ற ஆன்மீக குருவாக இருக்க முடியாது. வேத இலக்கியங்களில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ஷத் கர்ம-நிபுணோ விப்ரோ   மந்த்ர-தந்த்ர-விஷாரத:
அவைஷ்ணவோ குரூர் ந ஸ்யாத்  வைஷ்ணவ: ஷ்வ-பசோ குரு:
வேத ஞானத்தின் அனைத்து விஷயங்களில் நிபுணனாகத் திகழும் கற்றறிந்த பிராமணன், வைஷ்ணவனாக இல்லாவிடில் (கிருஷ்ண உணர்வு பற்றிய தத்துவத்தை அறியாவிடில்), அவன் குருவாகத் தகுதியற்றவன். கிருஷ்ண உணர்வுடன் வைஷ்ணவனாக இருப்பவன், இழி குலத்தில் பிறந்திருந்தாலும் ஆன்மீக குருவாகலாம்.
பொருளாதார முன்னேற்றத்தாலும் செல்வத்தைச் சேர்த்து வைப்பதாலும், பௌதிக உலகின் சிக்கல்களான, பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றை முறியடிக்க முடியாது. உலகின் பல பாகங்களில் செல்வம் நிறைந்த, பொருளாதார முன்னேற்றமடைந்த, வாழ்க்கை பௌதிக வாழ்வின் பிரச்சனைகள் அங்கும் காணப்படுகின்றன. மக்கள் பல்வேறு வழிகளில் அமைதியைத் தேடுகின்றனர். ஆனால் கிருஷ்ண உணர்விலுள்ள, கிருஷ்ணரால் அங்கீகரிக்கப்பட்ட நேரடிப் பிரதிநிதியின் மூலமாக, கிருஷ்ணரையோ, பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதத்தையோ (கிருஷ்ணரைப் பற்றிய விஞ்ஞானம் அடங்கிய நூல்களையோ), அணுகினால் மட்டுமே, உண்மையான இன்பத்தை அவர்களால் அடைய முடியும்.
ஓம் அக்ஞான திமிராந்தஸ்ய க்ஞானாஞ்ஜன ஷலாகயா
சக்ஷுர் உன்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீகுரவே நம:
நான் அறியாமையின் இருளில் பிறந்தவன், எனது கண்களை ஞான ஒளியால் திறந்த எனது ஆன்மீக குருவிற்கு எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
முகம் கரோதி வாசாலம் பங்கும்லாங்க யதேகிரிம்
யத்க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீகுரும் தீனதாரினம்

ஸ்ரீல ரூப கோஸ்வாமி குருவின் தகுதிகளாக தனது உபதேசாமிர்தத்தில் பின்வருபவனவற்றை கூறுகிறார்.
வாசோ-வேகம் மனஸ: க்ரோத-வேகம்
  ஜிஹ்வா-வேகம் உதரோபஸ்த-வேகம்
ஏதான் வேகான் யோ விஷஹேத தீர
  ஸர்வாம் அபீமாம் ப்ருதிவீம் ஸ சிஷ்யாத்
பேச்சின் தூண்டுதல், மனதின் தேவைகள், கோபத்தின் செயல்கள் மற்றும் நாக்கு, வயிறு, பாலுறுப்புகள் ஆகியவற்றின் தூண்டுதல்களை பொறுத்துக் கொள்ளக்கூடிய நிதான புத்தியுள்ள ஒருவர் உலகம் முழுவதிலும் சீடர்களை ஏற்கும் தகுதி வாய்ந்தவராவார்.
ஏதோ ஒரு குறிப்பிட்ட கோயிலுக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் சென்று வந்தால் அவர் குரு என்றோ, சாமி என்றோ ஆவதில்லை என்பதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
முடிவு என்னவெனில், பேச்சு, மனம், கோபம், நாக்கு, வயிறு மற்றும் பாலுறுப்பு ஆகிய இந்த ஆறு விஷயங்களை கட்டுப்படுத்தக் கூடியவர் கோஸ்வாமி என்று அழைக்கப்பட வேண்டியவராவார். சுவாமி என்றால் எஜமானர், கோஸ்வாமி என்பது கோ அல்லது புலன்களின் எஜமானர் என்பதாககும். ஒருவர் துறவு வாழ்வை மேற்கொள்ளும்போது, தானாகவே சுவாமி எனும் பட்டத்தை பெறுகிறார். அவர் தனது குடும்பம், சமூகம் அல்லது சமுதாயத்திற்கு எஜமானர் என்பதை இது குறிப்பதாகாது; அவர்களது புலன்களுக்கு எஜமானாராக இருக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள சாஸ்திர மேற்கோள்களின்படி குருவானவர், பின்வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
1. ஒரு சீடனின் அறியாமையை அழிப்பவராகவும், ஆன்மீக ஞானத்தை அளிப்பவராகவும் இருக்க வேண்டும்.
2. அவரின் கருணையால் சீடனானவன் செயற்கரிய பல செயல்களை செய்வதற்கு சக்தி அளிக்க வல்லவராக இருக்கவேண்டும்.
3. பேச்சு, மனம், கோபம், நாக்கு, வயிறு மற்றும் பாலுறுப்பு ஆகிய இந்த ஆறு விஷயங்களை கட்டுப்படுத்தக் கூடியவராக இருக்கவேண்டும்.
4. ஒரு சிஷ்யனின் ஒவ்வொரு பிறவியிலும்  வழிகாட்டுபவராக இருக்கவேண்டும்,
5. தான் சொல்லிக்கொடுப்பதை, தானும் பின்பற்றுபவராக இருக்கவேண்டும்.
6. சீடனின் புலனின்பத்தை திருப்திப்படுத்துபவராக இல்லாமல் அவனின் இறுதியான நன்மைக்காக கனமான பலகருத்துக்களை வழங்க வலிமைப்படைத்தவராக இருக்கவேண்டும்.
7. அவர் எந்த சமூக பிரிவை சார்ந்தவராக இருந்தாலும் அவர் சீடனுக்கு கிருஷ்ணரைப் பற்றிய விஞ்ஞானத்தை அளிப்பவராக இருக்கவேண்டும்.
சில நேரங்களில் மக்கள் பௌதிகக் கல்வியளிக்கும் ஆசிரியரையும் குரு என்றே கருதுகின்றனர் இதற்கும் ஒருபடி மேலே சென்ற உடற்கருத்தாளர்கள் தங்களுக்கு யோகா என்ற பெயரில் உடற்பயிற்சிகளை கற்றுத்தருகிற ஆசிரியரையும் குரு என்றழைப்பதை காண முடிகிறது.
இதைத்தவிர தன்னுடைய குரு என்பவர் பெரிய தாடி வைத்தவராகவும், தன்னை விட வயதில் மூத்தவராகவும் இருக்கவேண்டும் என்றும் மக்கள் விரும்புவதை நாம் கண்கூடாக காணமுடிகிறது. ஆனால், இவற்றை முறியடிக்கும் விதமாக வேதகாலத்திலும் பிற்காலத்திலும் அவதரித்த ஆச்சார்யர்களின் வாழ்க்கை வரலாறு அமைந்துள்ளது. இதற்கு சில உதாரணங்கள் பின்வருமாறு,
சுகதேவ கோஸ்வாமி, தன்னுடைய சீடனான பரிடசித்து மஹாராஜரை விட வயதில் இளையவர்.
ஆழ்வாரான மதுரகவியாழ்வார் தன்னுடைய குருவான நம்மாழ்வாரைவிட வயதில் மூத்தவர்.
பணிவுக்கு பெயர்போன கூரத்தாழ்வார் தன்னுடைய குருவான ராமானுஜாச்சார்யரைவிட வயதில் மூத்தவர்.
சூதகோஸ்வாமி பிராமண குடும்பத்தில் பிறக்கவில்லை, அவர் ஜாதிக் கலப்படமுள்ள அல்லது பண்படாத ஒரு குடும்பத்தில் பிறந்தவராவர். ஆனால் ஸ்ரீசுகதேவகோஸ்வாமி மற்றும் மகான்களான நைமிஷாரண்ய முனிவர்கள் போன்றவர்களுடன் கொண்ட உயர்ந்த சகவாசத்தின் காரணத்தால், இழிகுலத்தால் ஏற்பட்ட இழுக்கு கழுவப்பட்டு உள்ளது.
வேத வழக்கமான இக்கொள்கையைத்தான் பகவான் ஸ்ரீசைதன்ய மஹாபிரபு பின்பற்றினார். ஸ்ரீசைதன்யர் தமது உன்னதமான சகவாசத்தினால், இழிகுலத்தில் பிறந்த பலரை பக்திதொண்டு செய்யும் நிலைக்கு உயர்த்தி, அவர்களை ஆச்சார்யர்கள் ஆக்கினார். பிறப்பால் ஒருவர் பிராமணராகவோ, அல்லது சூத்திரராகவோ, குடும்பஸ்தராகவோ அல்லது துறவியாகவோ இருந்தாலும், கிருஷ்ண விஞ்ஞானத்தில் அவர் தேர்ச்சியுடையவராக இருந்தால், அவரை ஓர் ஆச்சார்யராக அல்லது குருவாக ஏற்றுக் கொள்ளலாம்.
அதாவது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ண விஞ்ஞானத்தைப் பயில்வதற்கோ, பிரச்சாரம் செய்வதற்கோ இழிபிறப்பு காரணமாக இருக்கவில்லை. இந்து சமூகத்திலிலுள்ள பெயரளவேயான ஜாதி முறையில் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்குள்ளாகத்தான், உயர் பிரிவினருக்கிடையில் தகுதியின்மை அதிகரித்தபோது கண்டிப்பு பிரபலமடைந்தது. ஸ்ரீல ஹரிதாஸ் தாகுரர் தமது விருப்பப்படி ஒரு முகம்மதிய குடும்பத்தில் தோன்றியிருந்தபோதிலும், மூல வேதப் பண்பாட்டை மறுபடியும் உபயோகத்திற்குக் கொண்டுவரும் வகையில், ஸ்ரீசைதன்ய மஹாபிரபு அவரை நாமாசார்யரின் நிலைக்கு, அதாவது பகவானின் புனித நாமத்தின் பெருமைகளைப் பரப்பும் அதிகாரியின் நிலைக்கு உயர்த்தினார்.
இக்கொள்கைகளை பின்பற்றியே ஸ்ரீலபிரபுபாதரும் தனது சீடர்களை ஐரோப்பியா, அமேரிக்கா மற்றும் இதர மேற்கத்திய நாடுகளில்லிருந்து எதிர்கால சமுதாயத்தை வழிநடத்தக்கூடிய மாபெரும் ஆன்மீக தலைவாகளாக உருவாக்கினார்.
ஆக வயது பிறப்பு என்பது குரு-சிஸ்யர்களுக்கு இடையில் தடையை ஏற்படுத்துவதில்லை.
குருவின் நிலைகள்:
மேலும் சாஸ்திரங்கள் குரு என்பவரை நான்கு விதங்களில் இருப்பதையும் நமக்கு உணர்த்துவதையும் நாம் காணலாம். அவை 1. சைத்ய குரு, 2. வர்தமபிரதர்ஷக குரு, 3. தீக்ஷா குரு, 4. சிக்ஷாகுரு
சைத்ய குரு என்பவர் பரமாத்மா. அவர் ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருந்து எல்லோருடைய ஆன்மீகத் தேடல்களுக்கான தூண்டுதலைக் கொடுக்கிறார்.
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர் க்ஞானம் அபோஹனம் ச (பகவத் கீதை 15.15)
இரண்டாவதாக வர்தமபிரதர்ஷக குரு, யார் ஒருவர் ஜிவன் ஒருவனுக்கு பக்தி பாதையை முதன் முதலில் காட்டினாரோ அந்த நபர் வர்தமபிரதர்ஷக குரு என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக அவர் ஆன்மீக வாழ்க்கையின் ஆசை உள்ளவனை தீக்ஷை அளிக்கும் தகுதியுள்ள குருவிடம் அழைத்துச் சென்று வழிநடத்துவார். பெரும்பாலான பொதுமக்கள் இந்த நிலையை ஏற்றாலும் அவர்கள் நம்மை சரியான முறையில் வழிநடத்துகிறார்களா? அவர்கள் காட்டும் ஆன்மீக பாதை சரியானதா, மற்றும் ஆன்மீக நபர்கள் சரியான குருசீட பரம்பரையில் வருபவர்களா, அவர்கள் கூறுகின்ற வார்த்தைகள் சாஸ்திரக்கண்ணோட்டத்துடன் இருக்கின்றனவா என்பதை எல்லாம் மனஎழுச்சியில் அல்லாமல் குரு, சாது, சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மூன்றாவது வகையான குருவானவர் தீக்ஷா குரு அல்லது மந்திர-குரு எனப்படுகிறார். இவர் சீடனுக்கு ஆன்மீக தீக்ஷை அளிப்பவர். தீக்ஷை வழங்கும்பொழுது குருவானவர் சீடனுக்கு புனிதமான மற்றும் இரகசியமான மந்திரங்களை அளிப்பார். சீடன் அவற்றை தினமும் நம்பிக்கையுடன் பயிற்சி செய்கிறான். ப்ருஹன்-நாரதீய புராணத்தில், ஆன்மீகத்தை உணர்வதற்கான ஒரே வழி இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதே என்று கூறப்பட்டுள்ளது.
ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம்
கலௌ நாஸ்த்-யேவ நாஸ்த்-யேவ  நாஸ்த்-யேவ கதிர் அன்யதா
போலித்தனமும், சச்சரவும் நிறைந்த இக்கலி யுகத்தில், விடுதலைக்கான ஒரே வழி இறைவனின் திருநாமத்தை உச்சரிப்தே. இதை தவிர வேறு கதியில்லை, வேறு கதியில்லை, வேறு கதியில்லை.
இதையே பெரியாழ்வாரும், தனது திருமொழியில்
துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே
ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே
என்று கூறியுள்ளார்.
வாமன கல்பத்தின்படி, குருவிடமிருந்து பெறப்பட்ட மந்திரமானது பரம புருஷ பகவானிடமிருந்து பெற்றதாகவே கருதப்படுகிறது.
நான்காவது வகையான குருவானவர் சீக்ஷா குரு (அ) போதனைகளை கொடுக்கும் ஆன்மீக குரு. இந்த குரு பக்தி பாதையில் மேலும் விரிவான மற்றும் இரகசியமான வழிநடத்துதலை கொடுப்பார். சில நேரங்களில் தீக்ஷா மற்றும் சிக்ஷா குரு என்பவர் ஒரே வைஷ்ணவராகவும் இருக்கலாம். அல்லது தீக்ஷா குரு சிஷ்யனை ஒரு உயர்ந்த வைஷ்ணவரை வழிக்காட்டுதலுக்காக பின்பற்ற செய்யலாம்.
நாம் செய்யவேண்டியது என்ன?
தங்கம் வாங்க கடைத்தெருவுக்கு செல்பவன் தங்கம் என்பதை பற்றி அரியாதவனாக இருந்தானானால் அவன் வாங்குவது அசலா, போலியா என்பதை எவ்வாறு அறிய முடியும், எனவே, கவலைகளை நாம் நன்முறையில் களைய விரும்பினால் (அர்ஜனனைப் போல்) நாமும் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும் அர்ஜனன் தனது பிரச்சனைக்கு நிச்சமாக தீர்வினை அடைவதற்காக கிருஷ்ணரை அணுகினான். இதுவே கிருஷ்ண உணர்வின் வழியாகும்.
சூத கோஸ்வாமி, சுகதேவரையும் வியாஸரையும் போன்ற சிறந்த முனிவர்களிடமிருந்து கிருஷ்ண விஞ்ஞானத்தைக் கற்றார். அவரது உயர்ந்த தகுதியைக் கண்ட நைமிஷாரண்ய முனிவர்களும் கூட, ஸ்ரீமத் பாகவதத்தின் உருவில் கிருஷ்ண விஞ்ஞானத்தை அவரிடமிருந்து கேட்க விரும்பினர். உன்னதமான கிருஷ்ண விஞ்ஞானத்தை அவரிடமிருந்து கேட்க விரும்பினார். உன்னதமான கிருஷ்ண விஞ்ஞானத்தை அதிகாரிகளிடமிருந்து கற்றறிய வேண்டும். பிறகு அதைப் பிரச்சாரம் செய்யும்பொழுது ஒருவர் அதிக தகுதியுடையவராகிறார். எனவே சூதகோஸ்வாமி இவ்விரு அனுகூலங்களையும் பெற்றிருந்தால், இழிபிறப்பில் தகுதியின்மையிலிருந்தும், அதனால் உண்டாகும் மனக்கஷ்டத்திலிருந்தும் முற்றிலும் விடுபட்டிருந்தார். சூதகோஸ்வாமி இழிகுலத்தில் பிறந்தவர் என்றபோதிலும், அவருக்கு ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி உபதேசிக்க மறுக்கவில்லை, நைமிஷாரண்ய முனிவர்களும் ஸ்ரீமத் பாகவதத்தை அவரிடமிருந்து கேட்கத் தயங்கவில்லை என்பதை சாஸ்திரங்கள் நிரூபிக்கிறது.
இதுவே பகவானின் தூய பக்தர்களுக்குள்ள சக்தியாகும். கங்கை நீர் புனிதமானதென ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதில் நீராடுவதால் ஒருவர் தூய்மையடைகிறார். ஆனால் பகவானின் சிறந்த பக்தர்களைக் காண்பதாலேயே இழிபிறப்பாளர்கள் தூய்மையடைகின்றனர் என்றால், அவர்களுடைய சகவாசத்தினால் அடையக்கூடிய தன்மையைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
வீட்டு உபயோக பொருட்களில் ஐ.எஸ்.ஐ., அக்மார்க் முத்திரைகள் உள்ளனவா என பார்த்து வாங்கும் நாம், ஆன்மீக குரு, ஆன்மீக விஷயங்களில் சாஸ்திரங்கள் அங்கீகாரத்தை நாம் எதிர்பார்பதில்லை.
ஒரு உயாந்த கட்டிடத்தினை தாங்கும் தூண்கள் மிகவும் வலுவுள்ளதாகவும். நேரானதாகவும் இருக்கவேண்டும், அவை பலமிழந்தோ, வளைந்தோ இருப்பின் கட்டிடம் வீழ்ச்சியடையும். அதுபோல ஆன்மீகம் என்பது மிகவும் பரமான, பாரமான விஷயம், எனவே அதை தாங்கக்கூடிய நபர் மிகவும் சக்தி மிக்கவராகவும், நேர்மையானவராகவும் இருக்கவேண்டும்.
தகுதியுள்ள பிரச்சாரகர்களை உலகம் முழுவதிலும் அனுப்பி, கெட்டுப்போயுள்ள உலகச் சூழ்நிலையை பகவான் ஸ்ரீசைதன்ய மகாபிரபு சீர்ப்படுத்த விரும்பினார். இப்பணியை ஏற்று, மிகச்சிறந்த மனிதாபிமானச் செயலை நிறைவேற்றுவது இந்தியர்களின் முக்கிய கடமையாகும். இன்று உடல் நோயை விட மனநோய் தீவிரம் அடைந்துள்ளது; எனவே உலகம் முழுவதிலும் தாமதமின்றி ஸ்ரீமத் பாகவத பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு இதுதான் தகுந்த நேரம் இது கலியுகம் என்பதால் போலிகள் அதிகமாகவும் உண்மையான சாதுக்கள் குறைந்த அளவிலும் உள்ள காலம், எனவே போலிகளை கண்டு ஏமாறவேண்டாம்.