Reply – Re: Re : Why Subathirai has not gone with Pandavas to Vanavasam
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: Re : Why Subathirai has not gone with Pandavas to Vanavasam
— by ஆர்.மாணிக்கவேல் ஆர்.மாணிக்கவேல்
ஓம் ஸ்ரீமுருகன் துணை

நண்பர் பாலகிருஷ்ணன் வினாவிற்கு நண்பர் திரு.அருட்செல்வபேரரசன் அளித்த பதில் ”ஐயோ, ஓ கிருஷ்ணா {திரௌபதி} என்னை ஏன் விட்டுச் செல்கிறாய்?// என்று குந்தி கேட்கும் வரிகள் வருவதால்,  திரௌபதி கூட சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்” என்பதும் நன்றாக உள்ளது.

நண்பர் ஜெயவேலன் அளித்த பதிலும் அருமையாக உள்ளது. இது நேரடியான சரியான பதிலும் கூட.
இருநண்பர்களும் பதில் அளித்தவிட்டபின்பு அதற்குமேல் பதில் இல்லை என்னிடம். இருந்தும் இந்த பதில் சற்று விளக்கம் மட்டுமே.

மானிடர் வாழ்க்கையை மூன்று நிலையாக பிரித்துக்கொண்டு உள்ளார்கள் நம் முன்னோர்கள்.

1) பிரமச்சரியம்-கல்வி கலையை குருகுலம் சேர்ந்து, குருவுக்கு பணிவிடை செய்து, பிச்சையேற்று உண்டு வாழ்வை கற்றுக்கொள்வது.
 
2) இல்லறம்-குருகுல கல்வியை நன்கு முடித்து குருவின், பெற்றோரின் ஆசியுடன், தனக்கான நல்லத்துணையை தேடி அன்பும் அறனும் கூடி அவளுடன் இன்பம் துய்த்து.
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை –(மூதாதையர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன்குடும்பம் என்ற ஐந்து நிலைகளில் தன் கடமையை செய்வனே செய்வது இல்லறத்தான் முக்கிய அறமாகும்) என்று வள்ளுவர் காட்டும் அறநெறியில் வாழ்வது.
 
3) வானப்பிரஸ்தம்-வாழ்வாங்கு வாழ்ந்து இல்லறக்கடமைகளை, அரசை மகனிடம் ஒப்படைத்து விட்டு ஒருவன் வனத்திற்கு சென்று புலன்இன்பங்களை துறந்து, வனத்தில் கிடைத்ததை உண்டு இறைவன்பால் சித்தத்தை நிறுத்தி வீடுபேற்றை அடைவது. வானப்பிரஸ்தம் செல்லும் ஒருவன் உடன் அவன் மனைவி (இருந்தாள்)  செல்லவிரும்பினால் செல்லலாம். வானப்பிரஸ்தம் மனைவியுடன் சேர்ந்து செய்யலாம். இவன் துறவி இல்ல. புலன்களின் ஆசையை குறைத்துக்கொண்டவன்.

ஏன் இதை இங்கு விவரித்தேன் என்றால். வானப்பிரஸ்தம் வேறு. வனவாசம் வேறு.

முன் பகுதியில் (ஆதிப்பர்வத்தில்) பாண்டு தனது மனைவி குந்தி மற்றும் மாத்திரியுடன் வனத்திற்கு சென்றது வானப்பிரஸ்தம்.

இந்த பகுதியில் (வனப்பர்வத்தில்) தருமன் தனது தம்பிகள் திரௌபதியுடன் வனத்திற்கு வந்திருப்பது வனவாசம்.

எதிரியை இரண்டு முறையில் அழிக்கலாம். ஒன்று உயிரை அழிப்பது. மற்றொன்று எண்ணத்தை அழிப்பது.

எண்ணத்தை அழிக்கும் வகையை சார்ந்ததுதான் வனவாசம். வென்றவனுக்கு எந்த இழப்பும் இல்லாமல் வெற்றி. தோற்றவனுக்கு மரணத்தைவிட கொடிய தண்டனை. (இலங்கை அரசு ஒருலட்சம் புத்தகங்கள் கொண்ட கொழும்பு நூலகத்தை அழித்தது எண்ணத்தை அழித்த போர்தான்)

போரில் உயிர் மட்டும்தான்போகும் வீரம் நிலைத்து நிற்கும். வனவாசத்தில் உயிர் இருந்தும் பயன் இல்லை. வீரமும் வெளித்தெறியப்போவதில்லை. மாபெரும் ராசதந்திரம் இது. நாட்டுமக்களின் மனதில் பச்சாதாபம் எழுமே அன்றி உணர்ச்சிகள் பற்றிக்கொள்ளாது. எனவே உள்நாட்டுக்கலகம் தோன்றாது. அப்படியே தோன்றினாலும் முதலில் கொளுத்தும் குச்சியை ஊதி அணைத்துவிடலாம்.

வனவாசம் என்பது பன்னிரண்டு ஆண்டுகள்  முழுவதும் முடிக்கப்படவேண்டும். பாண்டவர்களுக்கு பதிமூன்று ஆண்டுகள் என்பதை குறித்துக்கொள்ளவும். ராமனுக்கு பதிநான்கு ஆண்டுகள் கவனத்தில் கொள்ளவும்.
 
ஏன் இந்த பன்னிரண்டு ஆண்டுகள். உளவியல் சிந்தனைப்படி ஒருவன் பன்னிரண்டு ஆண்டுகள் ஒன்றை செய்தால் அதற்கு அவன் அடிமையாகிவிடுவான் அல்லது அந்த சொருபத்தை அடைந்துவிடுவான்.

சோதிட சாத்திரப்படி முதல் ராசியில்  இருக்கும் குருபகாவன் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த முதல்ராசியை வந்து அடைவார் இதற்கு ஒரு மாமாங்கம் என்பார்கள். குருப்பார்க்க கோடி நன்மை. அந்த நன்மைகள் கைக்கு எட்டாமல் தட்டி பிடுங்கப்பட்டு, பன்னிரண்டு ஆண்டுகள் கிரகங்களால்  அவன் அலைகழிக்கப்பட்டுவிடுவான்.

மழலையாக இருக்கும் ஒருவன் பன்னிரண்டாவது ஆண்டில் இளைஞனாக மாறிவிடுவான். பன்னிரண்டாவது ஆண்டின் முடிவில் ஒரு தலைமுறை அடையாளம் காணமுடியாத அளவுக்கு பெரியதாகி இருக்கும். நட்போ, உறவோ கொள்ளமுடியாத இடைவெளி வந்திருக்கும்-தலைமுறை இடைவெளி என்பது இதுதான்.

வனவாசம்  என்பது அறம் கடைப்பிடிப்பவனுக்கு, அறம் மீறுபவனால் வழங்கப்படுகிறது. கைகேயியால் ராமனுக்கு, துரியோதனால் தருமனக்கு. பன்னிரண்டு ஆண்டுகள் அறம் மறைக்கப்பட்டு, அறம்மீறல் வளர்க்கப்பட்டால் அந்த நாடு என்னவாக இருக்கும்.   அப்படியே பன்னிரண்டு ஆண்டு கழித்து அறம் அந்த நாட்டிற்கு வந்தால் மணலில் விழுந்த சக்கரைத்துகள்போல காணமல் போய்விடும்.

வனவாசம் என்பது ஆண்களுக்கே வகுக்கப்பட்டது. ராமன் மட்டுமே காட்டுக்கு செல்லவேண்டும் என்று கைகேயி கட்டளை இட்டால், சீதையும் இலக்குவனும் சென்றது அவர்கள் விருப்பம். கற்பனையாக நினைத்துப்பாருங்கள் ராமன் மட்டும் வனம் சென்று இருந்தால் ராமன் திரும்பி வந்திருப்பானா? துறவியாக ஆகி இருப்பான். வாழ்வதற்கு ஒரு பிடிப்பு வேண்டும். சண்டைப்போடவாவது ஒரு  துணை வேண்டும் இல்லை என்றால் என்ன வாழ்க்கை.  பாண்டவர்களுக்கு மட்டுமே வனவாசம் கட்டளை இடப்பட்டது. பாஞ்சாலி சென்றது அவள் விருப்பம். காரணம் பாஞ்சாலிப் பட்ட அவமானம் அத்தனைக்கொடியது. அவளின் அவிழ்ந்த கூந்தால் பாண்டவர்களை தூங்கவிடாது. அதை ஞாபகப்படுத்தவே பாஞ்சாலி வனவாசம் சென்றாள்.

பாஞ்சாலியின் துகில் உரிப்பின் மூலம் துரியோதனன் நாட்டு ஆசையால் சூதுவிளையாடவில்லை. பாஞ்சாலியை அவமானம் செய்யவேண்டும் என்ற பொறமை எண்ணத்தாலேயே சூதாடி உள்ளான் என்று தெரிகின்றது. அந்த எண்ணத்தை வேர் அறுக்க பாண்டவர்களை தூண்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று பாஞ்சாலி நினைத்து வனவாசம் சென்றாள்.

கண்ணனின் தங்கையாகிய சுமத்திரை அர்ஜூனன் காதல் மனைவி மட்டும். பட்டத்துராணி இல்லை. நாட்டோடு அவள் பிணைக்கப்படவில்லை, அர்ஜூனன் உடன் மட்டும் அவளுக்கு உரிமை. அவன் மறுத்து இருப்பான் காரணம், இளம் மகனாகிய அபிமன்யூவை நலமாக வளர்க்கவேண்டிய பொருப்பு அவளுக்கு உள்ளது.

எளிய குடிமகளாக வாழும் தாயிகும், ராஜமாதாவாக இருக்கும் தாயிக்கும் வித்தியாசம் உண்டு. எளித்தாய் மகனை வாழ்வதற்காக பெற்று எடுக்கிறாள். ராஜமாத மகனை போரில் இரத்தம் சிந்த பெற்ற எடுக்கிறாள்.

ஈன்று புறம்தருதல் தாயின் கடமை. சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை. இங்கு  தந்தை வனவாசத்தில் இருப்பதால் அந்த கடமையும் தாயாகிய சுமத்திரையையே சேர்கின்றது.

பாஞ்சாலிக்கு அந்த கடமை இல்லையா என்றால்? இருக்கு. பாஞ்சாலியின் புதல்வர்கள் ஐவரும் விவரம் தெரிந்து கல்வி கற்கும் நிலையை அடைந்துவிட்டார்கள். பாஞ்சாலி  பட்டத்து அரசியாக இருப்பதால் நேரடி குழந்தை வளர்ப்பு அவளுக்கு இருந்து இருக்காது. எனவே தனது தந்தை பாஞ்சாலன் வீட்டில் விட்டு, தனது அண்ணன் திருஷ்டத்யும்னன் மூலம் அவர்களை பேணி பராமறிக்க செய்துவிட்டாள்.   ஆனால் அபிமன்யு இன்னும் தாய்மடி நாடும் பாலகன்தான் இனிதான் கண்ணன் என்னும் கடவுளையே குருவாக பெறப்போகின்றான்.

நல்ல சிந்தனைக்கு வித்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

வாழ்க வளமுடன்.