Reply – Re: ஐவருக்கு ஒருத்தியா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: ஐவருக்கு ஒருத்தியா?
— by R.MANIKKAVEL R.MANIKKAVEL
ஓம் ஸ்ரீ முருகன் துணை

வணக்கம் ஐயா!

திரௌபதி தெய்வப் பெண் என்பது எனது கூற்று அல்ல.

ஞான சூரியனாகி இமயம் முதல் குமரி வரை சனாதன மதத்தை ஷட் மதமாக(ஆறுவகை மதம்) வரையரை செய்து அத்வைத நெறியை குறிக்கோளாக கொண்டாலும் பாமரனும் இறையனுபூதி பெறவேண்டும் என்ற கருணையால் பக்தியை தழைக்க வைத்த ஆதி சங்கர பகவத்பாதாள் உடன் காசியில் இரவு பகல் பாராமல் கருத்துரை வாதம் செய்த பகவான் ஸ்ரீ வியாசர் சொன்னது திரௌபதி தெய்வப் பெண் என்று.

வேதம் உண்மை, வேதத்தின் வழிவந்த மந்திரம் உண்மை, மந்திரத்தால் நடத்தப்படும் யாகங்கள் உண்மை. யாகங்களால் கிடைக்கும் விளைவு உண்மை. ஒழுங்கற்றவர்களால் நடத்தப்படும் யாகங்களால் கிடைக்கும் எதிர் விளைவும் உண்மை.

மழை வேண்டி யாகம் நடத்தும் ஒரு வேத விற்பனர் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும் என்பது நியமம்.  தெரிந்தோ தெரியாமலோ யாகாசரியன் உப்பிட்டு சாப்பிட்டால் மழைப் பெய்யாது. மந்திரத்தின் தப்பல்ல.

சரியாக புத்திரகாமேஷ்டி யாகம் செய்த போது யாகத்தில் கலந்து கொள்ள  சிறிது தாமதமகா வருகை செய்த துருபதன் மனைவியால் திரௌபதி நெருப்பில் இருந்து பிறந்தாள் இது உண்மை.

இந்த உண்மையை சொன்ன வியாசர் யார்? நான்கு வேதத்தை தொகுத்தவர். 18 புராணங்களை இயற்றியவர். ஐந்தாவது வேதமாகிய மகா பாரதத்தை சொன்னவர். பக்திக் காவியமாகிய ஸ்ரீமத் பாகவதம் பாடியவர்.

மகா பாரதத்திற்கு ஒரு பெருமை உண்டு. பிள்ளையார் பிள்ளையார் சுழிப் போட்டு(நன்றி கவிஞர் வாலி) எழுதிய காவியம்.  அந்த காவியத்தில் பொய் சொன்னால் பிள்ளையார் பிள்ளையாக இருப்பாரா?

அன்புக்கு விளக்கம் தரவந்த வள்ளுவர் -  உயிரையும் பிறருக்கு தரக் கூடியவர் என்கிறார் (அன்பிலார் )

அறிவுக்கு விளக்கம் தரவந்த வள்ளுவர்-நல்லதை நாடுவது அறிவு என்கிறார்(சென்றவிடத்து)

அறத்திற்கு விளக்கம் தரவந்த வள்ளுவர்- மனதில் மாசு இல்லது இருப்பது அறம் என்கிறார்- (மனத்துக்கண் )

ஒழுக்கத்திற்கு  விளக்கம் தரவந்த வள்ளுவர்-தீமையானதை தவறியும் பேசாதிருப்பது என்கிறார் (ஒழுக்கம் உடையார்க்கு)

வாய்மைக்கு விளக்கம் தரவந்த வள்ளுவர்-எந்த ஒரு தீமையையும் விளைவிக்காமல் பேசுவது என்கிறார் (வாய்மை எனப்படுவது)

ஆண்மைக்கு விளக்கம் தர வந்த வள்ளுவர்- பிற பெண்களை நோக்கதவன் என்கிறார்.

பெண்ணிற்கு விளக்கம் தரவந்த வள்ளுவர்
தற்காத்துத்  தற்கொண்டான்  பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் -என்கிறார்.

அந்த பெண்ணுக்கு எது காப்பு என்று கூறவரும் போது அவளிடம் உள்ள நிறையே காப்பு என்கிறார். (சிறைகாக்கும் காப்பு)

அந்த நிறையைத்தான் கற்பு என்கிறோம்.
திரௌபதி பதிவிரதை இல்லை என்று சொல்லும் நீங்கள் பதி விரதைக்கு உரிய இலக்கணம் என்ன என்று சொன்னால் நல்லா இருக்கும்.

எந்த இறைவன் மாயையை தோற்று வைக்கிறாரோ அந்த இறைவனே மனிதனாக பிறக்கும்போது மாயையின் பிடியில் சிக்கி தவிக்கிறார் என்றல். மாயையின் வலிமையை என்ன வென்று சொல்வது.
 
சீதையை பிரிந்த ஸ்ரீ ராமன், செடி கொடிகள் அனைத்திடமும் என் சீதையை கண்டீர்களா? என்று கேட்டு அழுதது.

யார் அழிவில்லாத பிரமமோ, யார் பிரமத்தைப் பற்றி விளக்க தகுதி உடையவரோ, யார் கருவில் உள்ள கருவையும் காக்க வல்லவரோ அவர் சால்வனுடன் நடந்த போரில் தனது தந்தை இறந்து விட்டதாக நினைத்து மூர்ச்சை அடைந்தார் என்றால் மாயையின் வல்லமையை என்ன சொல்வது.
ஒருவர்மீது ஒருவர் வைக்கும் அன்பு என்பதே மாயைதான். அன்பு வைத்ததாலே ஒருவர் இறந்து போகலாம். ஒருவர் மீது அதிக அன்பு வைத்ததாலே ஒருவர் பதிவிரதா தருமத்தில் இருந்து வழுக்கி விட்டவர் என்று எப்படி சொல்வது.

“அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை” என்று சத்திய ஞான சன்மார்க்க வழியை போதித்த வள்ளலார் சிதம்பரம் ராமலிங்க சுவாமிகளின் வாழ்வில் நடந்த கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். நல்லதை மீண்டும் ஒருமுறை சொல்வது நல்லதுதானே!

அண்ணனுக்கு பிடிக்காத தம்பி வள்ளலார். தந்தையின் திதி அன்று கூட தம்பிக்கு சோறுப் போடக்கூடாது என்று மனைவியை தடுத்தவர்.

தம்பியின் சொத்தை அபகரிக்கணும் என்று அப்படி சொல்லவில்லை. தம்பி படித்து தன்னைப் போல நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆதங்கத்தில் அப்படி சொன்னார். அதற்காக அண்ணி கொழுந்தனை அப்படியே விட்டு விட்டாரா? இல்லை. கணவனுக்கு தெரியாமல் வீட்டின் பின் பக்கம் வைத்து வள்ளலாருக்கு கண்ணீரோடு சோறுப் போட்டார். அந்த தாய் உள்ளத்தின் அன்பு சின்னதா? கணவன் பேச்சை மீறியதால் அவர் பதி பக்தி இல்லாதவரா?

சென்னையில்  இருந்து திருவொற்றியூருக்கு நடந்தே சென்று அருள்மிகு திருவடிவுடைய அம்மனை வணங்கிவர காலம் கடந்து விட்டதால், இரவு நேரத்தில் அண்ணியை  தொந்தரவு செய்யக் கூடாது என்று அமைதியாக திண்ணையில் படுத்து விட்ட வள்ளலாருக்கு அண்ணி எழுப்பி சோறு போட்டார். காலையில் எழுந்த போதுதான் அண்ணியாக வந்து சோறுப் போட்டது வடிவுடைய அம்மன் என்று வள்ளலாருக்கு தெரிந்தது. வள்ளலார் வரும் வரை தூங்காமல் காத்திருந்து காத்திருந்து தூங்கிய அண்ணியின் உள்ளம் தெரிந்துதான் அன்னை திருவடிவுடைய அம்மன் அண்ணியாக வந்தார்.  
ஒருவர் மீது அன்பு கொள்ளும் போதும், அன்பை வெளிப்படுத்தும் போதும் ஒரு வித தெய்வீக அனுபவமே நிலவுகிறது. காமம் நிலவுவதில்லை.

அன்பே சிவம்-திருமூலர் வாக்கு இங்கு நினைக்க.

அர்ஜுனன் மீது திரௌபதிக்கு ஏற்பட்ட அன்பு, தனது சுயம்வர மாலையை யாரை நினைத்து திரௌபதி எடுத்தாலோ அவன் கழுத்திலே விழுந்து விட்டது என்ற பூரிப்பில் எழுந்ததாக இருக்கலாம். யார் நாராயணனுக்கு நண்பனாக இருக்கானோ? யார் உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை என்று இறைவனால் சுட்டிக் காட்டப் படுகிறானோ? அவன் நீ  என்ற ஆனந்தத்தில் ஏற்பட்ட அன்பாக இருக்கலாம். கணவன் என்ற முறையில் ஏற்ப்பட்டதாக இருக்க முடியாது. கணவன் என்ற முறையில் ஏற்பட்டதாக இருந்தால் திரௌபதி அர்ஜுனனுக்கு நிறைய பிள்ளைகளையும் மற்றவர்களுக்கு குறைவான பிள்ளைகளையும் பெற்று தந்திருக்க வேண்டும்.

பஞ்ச பாண்டவர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட நியதிப்படி, தருமரும் பாஞ்சாலியும் தனித்து இருக்கும் பள்ளி அறையில் காண்டிபத்தை எடுக்க இரவில் நுழைந்த அர்ஜுனன் நியதிக்கு கட்டுப் பட்டு தீர்த்தடனம் செய்ய புறப்பட்டு விட்டான். நீ எனக்கு பிரியமான கணவன் என்று பாஞ்சாலி தடுக்கவில்லை.  நியதிப் படியே நடக்கட்டும் என்றுதான் இருக்கிறாள். இன்று போல் அல்ல அன்று தீர்த்தாடனம் செய்பவன் திரும்பி வந்தால்தான் உண்டு. அவன் திரும்பி வரும்வரை இறந்தவன் வரிசையில்தான் வைக்கப்படுவான். எனவே தனக்கு  பிரியமான கணவன் என்ற முறையில் அர்ஜுனன் மீது அவள் அன்பு வைக்கவில்லை.

அன்புக்கு எது இலக்கணமோ அதுவே திரௌபதியின் அன்பின் இலக்கணம்.
அன்பு வைத்ததாலேயே  திரௌபதி பதிவிரதா தருமத்தில் இருந்து வழுவிவிட்டால் என்றால் அன்பு மாசு பட்டுவிடும்.

மழை விழுந்து முளைக்காத விதைக் கூட அன்பு விழுந்தால் முளைத்துவிடும். மழையால் மண்ணில் மட்டும்தான் விழமுடியும் அன்பால் விண்ணிலும் விழமுடியும். மழை அமுதம் போல. அன்பு அமுதமேதான்.

நன்றி
வாழ்க வளமுடன்