பீஷ்மர் செய்தது நம்பிக்கை துரோகமா இல்லையா?

classic Classic list List threaded Threaded
10 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

பீஷ்மர் செய்தது நம்பிக்கை துரோகமா இல்லையா?

முத்தமிழ் வேந்தன்
ஐயா வணக்கம்.

உணவிட்ட துரியோதனனை ஆதரித்து போர்க்களம் போந்த பீஷ்மர், பின் தன்னை எப்படி வீழ்த்துவது எனக் கேட்டு வந்த பாண்டவரிடம் வழி உரைத்தது, துரியோதனனுக்கு செய்த துரோகம் இல்லையா?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீஷ்மர் செய்தது நம்பிக்கை துரோகமா இல்லையா?

Arul Selva Perarasan
Administrator
நண்பரே!

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

இட்ட உணவை உண்டது பீஷ்மரா? துரியோதனனா?

பீஷ்மரே சந்தனுவின் நேரடி வாரிசு? அரசுரிமைக்குத் தகுதியானவர் அவரே!

திருதராஷ்டிரனும் பாண்டுவும் சந்தனுவின் நேரடி வாரிசான விசித்திரவீரியனுக்குப் பிறக்கவில்லை. சத்தியவதியின் மற்றுமொரு மகனான முனிவர் வியாசருக்கே பிறந்தனர். ஆகையால், நேரடி வாரிசுப் போட்டியில் பீஷ்மருடன் யாராலும் மல்லுக்கு நிற்க முடியாது.

அரசைக் கொடுத்தது என்பது பீஷ்மரின் பெருந்தன்மை.

ஆகையால், பீஷ்மர் யாருக்கும் நன்றிக் கடன் பட்டவரல்ல. மகாபாரத மாந்தர்கள் அனைவரும் பீஷ்மருக்கே நன்றிக்கடன் பட்டவர்கள். மகாபாரதத்தின் மைய அச்சு பீஷ்மரே!

அன்புடன்,
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீஷ்மர் செய்தது நம்பிக்கை துரோகமா இல்லையா?

தமிழ் வள்ளுவர்
வீடுமருக்கு செஞ்சோற்றுக் கடன் இல்லையென்றால் அவர் பாண்டவர் சார்பாகவே போர் புரிந்திருக்கலாமே? ஆகவே அவர் புரிந்தது துரோகமே.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீஷ்மர் செய்தது நம்பிக்கை துரோகமா இல்லையா?

Arul Selva Perarasan
Administrator
திரு.தமிழ் வள்ளுவர் அவர்களுக்கு,

இரண்டே வரிகளில் பீஷ்மரைத் துரோகி என்று சொல்லிவிட்டீர்களே!

தம்பிக்கு நியாயமாக சேர வேண்டிய பாகத்தைத் தனது தம்பியின் கொடுக்க எண்ணாத திருதராஷ்டிரன் துரோகி இல்லையா?

ஏற்கனவே குடும்பத்தில் குழப்பம். அண்ணன் தம்பிகளின் பிள்ளைகள் அடித்துக் கொள்கிறார்கள். அதுவும் அண்ணன் பிள்ளைகள் தம்பிகளின் பிள்ளைகளை நேர்மையற்ற முறையில் வாட்டுகிறார்கள். அப்போது அதில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, பிரிவை அகலமாக்கிய கர்ணன் துரோகி இல்லையா?

சதா தனது அண்ணன் தம்பிகளான பாண்டவர்களைக் கொல்வதையும் ஏமாற்றுவதையும் மட்டுமே நினைத்திருந்த துரியோதனன் துரோகி இல்லையா?

தனது மகன் தவறு செய்கிறான் என்பதைத் தெளிவாக அறிந்த திருதராஷ்டிரனும் காந்தாரியும் அதைத் தடுக்க வழியறியாது அவன் செய்த செயலுக்கெல்லாம் உறுதுணையாக இருந்தது பெருத்த துரோகமில்லையா?

துரியோதனன் பாண்டவர்களை வஞ்சகமாக ஏமாற்றி வாரணாவதத்துக்கு அனுப்பி கொல்லப் பார்த்தது துரோகம் இல்லையா?

நாட்டை இரண்டு பிரிவாகக் கொடுக்கும்போது கௌரவர்கள் வளமற்ற வரண்ட நிலப்பகுதியை பாண்டவர்களுக்குக் கொடுத்தது துரோகம் இல்லையா?

வளமற்ற பகுதியை வளமாக்கியப் பாண்டவர்களைக் கண்டு பொறாமை கொண்டு சூதாடி நாட்டை அடைந்தது துரோகம் இல்லையா?இன்னும்... இன்னும்... எத்தனை துரோகங்கள்.

இரு தரப்பிடம் மாட்டிக் கொண்ட ஒரு பெரியவர் என்ன செய்யலாம் என்பதை அறியாது விழித்து, பாசப்போராட்டத்தில் சிக்குண்டு செத்துவிடலாம் என்று தனது சாவுக்கு ஒரு வழி சொன்னால் அது துரோகமா? வாழ்ந்த நாளெல்லாம் பிரிவினைக் காட்சிகளைக் கண்டு நொந்து, கர்ணன், துரியோதனன், சகுனி ஆகியோரின் வசைச் சொற்களைச் சுமந்து கடைசியில் அவர்களுக்கு போரில் பெருப் பங்குவரை உடன் இருந்து உழைத்தவர் செய்தது துரோகமா?

பீஷ்மர் என்ற ஒருவர் மட்டும் துரியோதனனின் பக்கத்தில் இல்லை என்றால், துரியோதனன் மஹாபாரதப் போருக்குத் துணிந்திருப்பானா?

துரியோதனனும் கௌரவர்களும் பாண்டவர்களுக்குத் துரோகம் செய்தனர் என்று யாரேனும் சொல்கிறார்களா?

சூழ்நிலைக் கைதிகள் துரோகம் செய்தவர்கள், விரும்பிப் போர் செய்தவர்கள் துரோகத்திற்கு உள்ளானவர்களா?

தகப்பனுக்காக திருமணம் செய்யாமல் இருந்து, தகப்பனின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் ஆட்சிகளுக்கெல்லாம் துணையாக இருந்து, ஹஸ்தினாபுரத்தை விழிதட்டாமல் காத்து ஹஸ்தினாபுரத்திற்காகவே, அதன் தீய மன்னன் துரியோதனனுக்காவே போரிட்டு உயிர் துறந்த ஒரு கிழவனுக்கு நாம் கொடுக்கும் பட்டம் துரோகி! நன்றாக இருக்கிறது.

திருதராஷ்டிரனின் அமைச்சரவையில் இருந்த ஒரே காரணத்திற்காக பீஷ்மர் கௌரவர்கள் தரப்பிலிருந்து போரைச் சந்தித்தார் என்பதே எனது கருத்து.

அவர் பாண்டவர்கள் தரப்பிலிருந்து போரிட்டிருந்தால் அவரது அறம் கெட்டிருக்கும்.

சரி அப்படியே பீஷ்மர் துரோகம் செய்ததாக அனைவரும் கருதினாலும், ஒரு துரோகிக்குத் துரோகம் செய்வது துரோகம் ஆகாது என்றே நான் நினைக்கிறேன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீஷ்மர் செய்தது நம்பிக்கை துரோகமா இல்லையா?

தமிழ் வள்ளுவர்
வணக்கம் ஐயா,

நீங்கள் கூறிய பதில் எனக்கு மனநிறைவளிக்கிறது. தனது வம்சமே தன்னால் பெருநாசம் அடைகிறதே, தன் அழிவுக்குப் பிறகாவது இரு தரப்பினரும் போரைக் கைவிட மாட்டார்களா என்ற ஆதங்கத்தில்தான் அவர் அவ்வாறு செய்திருக்கிறார்.

இதனின்று நம்மால் உணர முடியும் ஆணித்தரமான கருத்து என்னவென்றால், மாபாரதக் கதைமாந்தர்களை அவர்களது செயல்களை வைத்து மட்டும் எடை போட்டு விட முடியாது, சம்பவத்திற்கு முன் நடந்தவை, அவர்களின் மனோநிலை; குழப்பநிலை போன்றவற்றை வைத்துதான் ஆய்ந்து தெளிய முடியும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீஷ்மர் செய்தது நம்பிக்கை துரோகமா இல்லையா?

Rahul Kalyanaraman
In reply to this post by Arul Selva Perarasan
பலே பலே திரு. அருட்செல்வ பேரரசன் அவர்களே!

தாங்கள் பீஷ்மரை மிகவும் துல்லியமாக திறனாய்வு செய்துள்ளீர்கள்! இதன் மூலம் மகாபாரதத்தில் தங்களின் ஆழ்ந்த வாசிப்பை நான் நன்கு உணர்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் மகாபாரதத்தின் கதாபாத்திரங்களிலேயே மிகவும் உயர்ந்த கதாபாத்திரம் பீஷ்மரும் அவருக்கு அடுத்தபடியாக விதுரரும் ஆவார்கள்.

பீஷ்மரைப் பற்றி இரண்டே வார்த்தைகளில் கூற வேண்டுமெனில் அவர் ஒரு “சூழ்நிலை கைதி”.

மஹாபாரதப்போர் வேண்டாம் என்று துரியோதனனுக்கு எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் சுயநலம் கொண்ட துரியோதனனின் பிடிவாதமே போர் மூளக் காரணமாய் இருந்தது என்பதே உண்மை.

அவர் தன் தாய் நாட்டிற்காக மேற்கொண்ட சபதத்தால்தான் அதர்மம் என்று தெரிந்திருந்தும் துரியோதனன் பக்கம் நின்று போராடினார். படைத்தலைவன் என்ற முறையிலும் போர் வீரன் என்ற விதத்திலும் அவர் அதர்மமான விதத்தில் போர் செய்யவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவர் ஒரு சிறந்த தேச பக்தரும் கூட!
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீஷ்மர் செய்தது நம்பிக்கை துரோகமா இல்லையா?

R.MANIKKAVEL
In reply to this post by முத்தமிழ் வேந்தன்
ஓம் ஸ்ரீ முருகன் துணை

உண்மையான குரு! தனது எதிரிக்கும் போதிக்க வேண்டியாது கடமை. அதுவே குருவின் தருமமும் கூட.  தன்னை கொல்லவே பிறப்பு எடுத்த சிகண்டிக்கு போர்த்தொழில் கற்று கொடுத்தது பீஷ்மர். அதுவும் உங்களை வெல்ல வேண்டும் என்று கேட்ட பின்னும் கற்று கொடுத்தார். உன் எண்ணம் வெல்லும் என்றும் ஆசி  சொன்னார், சுத்த வீரனின் தருமம் இது.

பீஷ்மர் துரியோதனுக்காக போர் புரிய வில்லை. ஹஸ்தினாபுரதிர்க்காகவே  போர் புரிகிறார். அவர் ஹஸ்தினாபுர அரியாசனத்துடன் கட்டப்பட்ட கிழ சிங்கம் அவர். அவரை கொல்லாமல் யாரும்   ஹஸ்தினா புரம் சிம்மாசனத்தை அடைய முடியாது குரு வம்சத்தின் மாபெரும் மன்னர்கள் அமர்ந்த ஆசனத்தில் பொறாமை மட்டுமே உடைய துரியோதனன் அமர்வதை  பீஷ்மர் விரும்ப வில்லை .
நினைக்கும் போது மரணம் என்ற வரம் பெற்றவர் பிஷ்வர். வரமே சாபமாக உள்ளது இப்போது உணர்கிறார்.  தனது இறப்பை அவர் வரவேற்கிறார். அதுவும் தனக்கு பிடித்த பாண்டவர் கையால்.  

சுத்தமான வீரன் தன இறப்பின் வழியை சொல்லி போரிடுவதே உண்மையான வீரமாக நினைத்த காலம் அது.

உதாரணம்
சீதையை கவர்ந்து செல்லும் ராவணனை தடுக்கும் சடாயு என்னும் கழு அரசன் தன் உயிர் இறகில் இருப்பதை கூறி போரிடுகிறார்.

பீஷ்மர் தியாகத்தின் உருவம். தியாகம் ஒருபோதும் துரோகம் செய்யாது. தான் இறந்த பின்னாவது துரியோதனன் திருந்துவான் என்று அவர் நினைக்க வாய்ப்பு உண்டு. காரணம் அவர் ஒரு நல்ல தாத்தா.  
 நன்றி!

வாழ்க வளமுடன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீஷ்மர் செய்தது நம்பிக்கை துரோகமா இல்லையா?

Arul Selva Perarasan
Administrator
அருமை நண்பரே


2013/11/24 R.MANIKKAVEL [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>
ஓம் ஸ்ரீ முருகன் துணை

உண்மையான குரு! தனது எதிரிக்கும் போதிக்க வேண்டியாது கடமை. அதுவே குருவின் தருமமும் கூட.  தன்னை கொல்லவே பிறப்பு எடுத்த சிகண்டிக்கு போர்த்தொழில் கற்று கொடுத்தது பீஷ்மர். அதுவும் உங்களை வெல்ல வேண்டும் என்று கேட்ட பின்னும் கற்று கொடுத்தார். உன் எண்ணம் வெல்லும் என்றும் ஆசி  சொன்னார், சுத்த வீரனின் தருமம் இது.

பீஷ்மர் துரியோதனுக்காக போர் புரிய வில்லை. ஹஸ்தினாபுரதிர்க்காகவே  போர் புரிகிறார். அவர் ஹஸ்தினாபுர அரியாசனத்துடன் கட்டப்பட்ட கிழ சிங்கம் அவர். அவரை கொல்லாமல் யாரும்   ஹஸ்தினா புரம் சிம்மாசனத்தை அடைய முடியாது குரு வம்சத்தின் மாபெரும் மன்னர்கள் அமர்ந்த ஆசனத்தில் பொறாமை மட்டுமே உடைய துரியோதனன் அமர்வதை  பீஷ்மர் விரும்ப வில்லை .
நினைக்கும் போது மரணம் என்ற வரம் பெற்றவர் பிஷ்வர். வரமே சாபமாக உள்ளது இப்போது உணர்கிறார்.  தனது இறப்பை அவர் வரவேற்கிறார். அதுவும் தனக்கு பிடித்த பாண்டவர் கையால்.  

சுத்தமான வீரன் தன இறப்பின் வழியை சொல்லி போரிடுவதே உண்மையான வீரமாக நினைத்த காலம் அது.

உதாரணம்
சீதையை கவர்ந்து செல்லும் ராவணனை தடுக்கும் சடாயு என்னும் கழு அரசன் தன் உயிர் இறகில் இருப்பதை கூறி போரிடுகிறார்.

பீஷ்மர் தியாகத்தின் உருவம். தியாகம் ஒருபோதும் துரோகம் செய்யாது. தான் இறந்த பின்னாவது துரியோதனன் திருந்துவான் என்று அவர் நினைக்க வாய்ப்பு உண்டு. காரணம் அவர் ஒரு நல்ல தாத்தா.  
 நன்றி!

வாழ்க வளமுடன்If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp44p144.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீஷ்மர் செய்தது நம்பிக்கை துரோகமா இல்லையா?

தாமரை
Administrator
In reply to this post by முத்தமிழ் வேந்தன்
கர்ணன் கவச குண்டலங்களைத் தானம் அளித்தது துரோகமா இல்லையா?

அர்ச்சுனனின் சபதத்தை துரியோதனனுககு தர்மர் சொல்லச் சொன்னது துரோகமா இல்லையா?

அர்ச்சுனனை அழிக்கும் சக்தி வாய்ந்த அஸ்திரத்தை கர்ணனுக்கு இந்திரன் தந்தது துரோகமா இல்லையா?

இப்படி பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம்.

குருஷேத்திர யுத்தத்தை விட மிகப் பெரிய யுத்தம் பீஷ்மரின் மனதில் நடந்தது என்பதே உண்மை.

பீஷ்மரை பொறுத்தவரை அவர் அஸ்தினாபுரத்து அரசன் உத்தரவுக்கு அடிபணிய வேண்டும் . அந்த ஒரே காரணத்தினால் அவர் துரியோதனனுக்காக போரிட்டார்.

பீஷ்மரின் மரண இரகசியம் ஒன்றும் அவ்வளவு இரகசியமல்ல. சிகண்டிக்குத் தெரிந்ததுதான். கண்ணனுக்குத் தெரிந்ததுதான்.  சிகண்டி போருக்கு வருகிறான் என்று தெரிந்தவுடன் துரோணர் அசுவத்தாமன், கிருபர், சல்லியன், துச்சாதனன், துரியோதனன், பகதத்தன், கிருதவர்மன், பூரிசிரவசு, விகர்ணன், சுசர்மன இப்படி துரியோதனின் படையில் இருந்த எவரும் அர்ச்சுனன் பீஷ்மரை நெருங்குவதிலிருந்து தடுத்திருக்கலாம். தர்மனைச் சிறைபிடிக்க அர்ச்சுனனை விலக்கியது போல் பீஷ்மரின் மரணமான சிகண்டியையும், துரோணரின் மரணமான த்விட்டத்வீமனையும் குறிவைத்து யுத்தம் நடத்த ஆரம்பித்திருக்கலாம். அதனை துரியோதனன் செய்யவில்லை.

தர்ம சங்கடம் என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டால் இதை அழகாக உணர்ந்து கொள்ளலாம்.

இதற்கென ஒரு கிளைக்கதையுண்டு.. மகாபாரதப் போரின் முன்பு திரௌபதியை பீஷ்மர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார் கிருஷ்ணர். மழைபெய்திருக்கிறது. கிருஷ்ணன் திரௌபதியின் காலணிகளைக் கழட்டச் சொல்லி தன் மார்போடு அணைத்து வைத்துக் கொண்டு, உறங்க்கிக் கொண்டிருக்கும் பீஷ்மரின் கால்களைச் சிறிதும் சத்தம் செய்யாமல் தொட்டு வணங்கச் சொல்கிறார். திரௌபதியும் அதேபோல் செய்ய, திடுக்கிட்டு எழுந்த பீஷ்மர் தீர்க்கசுமங்கலி பவ என ஆசிர்வாதம் செய்கிறார். பின்னர்தான் அது திரௌபதி எனத் தெரிகிறது. பார்த்தால் மூலையில் சேறும் சகதியும் அப்பிய கிருஷ்ணன்.

கிருஷ்ணா, என் வாக்கு தர்மப்படி நான் துரியோதனனை வெல்ல வைக்க வேண்டும். இப்போது சொன்ன வாக்கின்படி பாண்டவர் அனைவரும் நெடு நாள் வாழ வைக்க வேண்டும். இரண்டில் நான் எந்த தர்மத்தைக் காப்பாற்றினாலும் இன்னொன்றை உடைத்தே ஆகவேண்டும். என்னை இப்படித் தர்ம சங்கடத்தில் மாட்டவிட்டு விட்டாயே... நீயும் இதே போல் உன் தர்மத்தை உடைக்க வேண்டியதாக ஆகட்டும் என்கிறார்.

9 ஆம் நாள் யுத்தத்தின் போது, அர்ச்சுனன் ஒரு தயக்கத்துடனேயே பீஷ்மருடன் போரிடுவதைப் பார்த்த பார்த்தசாரதி பார்த்தனிடம் உனக்குப் பதினெட்டு அத்தியாயமாக   நான் உபதேசித்த கீதை வீணானது. இனியும் பீஷ்மனை நான் விடப்போவதில்லை,  நானே அவரைக் கொல்கிறேன் என இறங்க்கி கையில் சுதர்சனமேந்திப் பாய்கிறார். ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற அவரது வாக்கை அவர் உடைக்கிறார். பீஷ்மரும் கைகளைக் கூப்பி யாரோ ஒரு பெண் / நபும்சகன் கையால் சாவதை விட உன் கையால் என்னக் கொன்று விடு கிருஷ்ணா எனக் கைகூப்புகிறார்.  அவருக்குச் சட்டென்று ஞானம் பிறக்கிறது. தர்மம்தான் முக்கியம். தன்னுடைய வாக்கு அல்ல. இறைவனான கிருஷ்ணனே தர்மத்திற்காக தன் சுய வாக்கை உடைக்கிறான். நான் என்பதைப் பெரியதாக நான் நினைப்பதால்தான் என் வாக்கு என்ற அகங்காரத்தினால்தான் இத்தனை மோசங்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார். என் வாக்கு என்பதை விட தர்மம்தான் முக்கியம் என்கிற ஞானம் வருகிறது. இரு தர்மங்கள் ஒன்றிற்கொன்று எதிராகும்பொழுது பலருக்கும் நன்மைதரும் பொதுதர்மத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஞானம் உண்டாகிறது..

இதற்குப் பின் தான் யுதிஷ்டிரனை பீஷ்மரிடம் அனுப்புகிறான் கண்ணன். பீஷ்மரின் மனது தெளிந்து நீரோடையாய் இருக்கிறது. உங்களை எப்படிச் சாய்ப்பது என்ற கேள்விக்குப் பதில் அளிக்கிறார்.

அவரது மனதில் அது துரோகமாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவருக்குத் தெளிவு பிறந்துவிட்டது.  தர்ம சங்கடம் உண்டாகவில்லை. அந்த இடத்தில் எது தர்மமோ அதைச் செய்தார்.

துரியோதனனுக்கு வேண்டுமானால் பீஷ்மர் செய்தது நம்பிக்கைத் துரோகமாகத் தோன்றலாம். ஆனால் தர்மத்தின் தெளிவு பெற்றதனால்தான் பீஷ்மர் தருமனுக்கு சிகண்டியுடன் போரிட மாட்டேன் என்பதைச் சொன்னார். போரில் மட்டும்தான் தர்மன் எதிரி, பாசறையில் பேரன்தான். அவனுக்கு எதையும் செய்யும் உரிமை பீஷ்மருக்கு உண்டு.

ஆனால் சிகண்டி அர்ச்சுனன் தேரில் உடன் வரவேண்டும் என பீஷ்மர் சொல்லவில்லை. அது கிருஷ்ணனின் திட்டம். சிகண்டியை அஸ்வத்தாமனோ, துரோணரோ, கிருபரோ சல்லியனோ மடக்கி விடாமல் இருக்க செய்த திட்டம் அது.

இதே போலவே துரோணரும் தன் மரணத்திற்கு தானே வழியமைத்துக் கொடுக்கிறார்.

பாலுண்டால் பசுவை இரட்சிக்கலாம். விஷமுண்டால் நாம் பாம்புக்கு அடிமையாகிவிட முடியாது. இது புரிந்த பீஷ்மர் தான் செய்த அத்தனைத் தவறுகளுக்கும் பிராயச்சித்தமாகவே அம்புப் படுக்கையில் படுத்து விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்கிறார் பீஷ்மர். சினிமாவில் வரும் துணை வில்லன் மாதிரி கடைசி நேரத்தில் அவர் கட்சி மாறாமல், தன் தவறுகளுக்கானத் தண்டனையை ஏற்றுக் கொள்கிறார்.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பீஷ்மர் செய்தது நம்பிக்கை துரோகமா இல்லையா?

R.MANIKKAVEL
நன்றி நண்பர் தாமரை!

 

உங்களின் இந்த பதிலால் ”என் வாக்கு என்பதை விட தர்மம்தான் முக்கியம் என்கிற ஞானம் வருகிறது. இரு தர்மங்கள் ஒன்றிற்கொன்று எதிராகும்பொழுது பலருக்கும் நன்மைதரும் பொதுதர்மத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஞானம் உண்டாகிறது” பீஷ்மரின் அகத்தை புரிந்துக்கொண்டேன் அதனுடன் தர்மச்சங்கம் எற்படும்போது எதன் பக்கம்  நிற்கவேண்டும் என்பதும் அழகாக புரிந்தது. ஒரு நீதியை இன்று கற்றுத்தந்துள்ளீர்கள் மீண்டும் நன்றி.