திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது கண்ணன் ஏன் வரவில்லை?

classic Classic list List threaded Threaded
8 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது கண்ணன் ஏன் வரவில்லை?

திருவாழ்மார்பன்
எல்லோருக்கும் வணக்கம்,

திரு. அருட்செல்வப்பேரரசு அவர்களின் அரிய பணி தொடர வாழ்த்துகிறேன். திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது கண்ணன் ஏன் அங்கு வரவில்லை? சால்வ தேசத்திற்கு சண்டையிடப்போனான் என்பது வெறும் கதைக்காக சொல்லப்பட்டது என்றே நினைக்கிறேன். துர்வாசருக்கு விருந்துஅளிக்க முடியாமல் போனபோது திரவுபதி கூப்பிட்ட குரலுக்கு கண்ணன் வந்தான் அல்லவா? ஏன் துகிலுரியப்படும் போது மட்டும் வரவில்லை? அவன் நினைத்திருந்தால் கண்டிப்பாக வந்திருக்கக்கூடும். சால்வ மன்னனை வெல்ல அவன் தேவை இல்லை. பலராமனோ அல்லது ப்ரத்யும்னனோ போதும். கண்ணன் சபைக்கு வராததற்கு தர்மரீதியாக ஏதாவது காரணம் இருக்கக்கூடுமா?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது கண்ணன் ஏன் வரவில்லை?

Arul Selva Perarasan
Administrator
அச்சமயத்தில் கால்நடையாக வந்து சபையில் மறைந்திருந்தான் என்று ஒரு குறிப்பு உள்ளது.

 அதேவேளை தான் சால்வ நாட்டில் போரில் இருந்ததாக கிருஷ்ணன் சொல்வதாகவும்  ஒரு குறிப்பும்உள்ளது.

திரௌபதி துகிலுரிப்பு அந்த இடத்தைத் தவிர மகாபாரத்தில் வேறு எங்குமே குறிப்பிடப்படவில்லை என்றே நினைக்கிறேன்.

இதில் தெளிவடைந்தால்தான். கிருஷ்ணன் ஏன் வரவில்லை என்பதற்குள் நுழையமுடியும்.
Sent via Micromax
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது கண்ணன் ஏன் வரவில்லை?

திருவாழ்மார்பன்
பதிலளித்தமைக்கு நன்றி சகோதரரே.

சமீபத்தில் ஒரு மஹாபாரத சொற்பொழிவில் இதன் காரணத்தை நான் கேட்க நேர்ந்தது. ஆன்மிக நோக்கில் இக்கருத்து சொல்லப்பட்டிருந்தாலும் இதில் சில உண்மைகள் இருப்பதாகவே கருதுகிறேன்.

“கண்ணன் சபைக்கு வந்திருந்தால் வேறு சில ஆபத்துகளும் ஏற்பட்டிருக்கும். முதல் ஆபத்து யுதிஷ்டிரனுக்கு உயிர் போயிருக்கும். எப்பொழுது திரௌபதி கண்ணனை சரணடைந்தாளோ, அப்பொழுதே அவள் அவன் சொத்தாகவே ஆகியிருப்பாள். எனவே அவனது சொத்தான திரௌபதியை இந்த நிலைக்கு ஆளாக்கிய யுதிஷ்டிரனுக்கு தான் முதல் ஆபத்து. எப்படி பீஷ்ம துரோண துரியோதனாதிகளுக்கு இந்த குற்றத்தில் பங்கு உண்டோ அதே போல் யுதிஷ்டிரனுக்கும் பாண்டவர்களுக்கும் பங்கு உண்டு. எனவே கண்ணன் சபைக்கு வந்திருந்தால், பாண்டவர்களுக்கும் சேர்த்து தண்டனை கிடைத்திருக்கும், பாரதப் போரே நடந்திருக்காது”

இவ்வாறு அவர் விளக்கமளித்தார். சிந்தித்துப் பார்க்கையில் அவர் அளித்த விளக்கம் ஓரளவு ஒப்புக்கொள்ள வேண்டியதாகவே இருந்தது. இது குறித்து மேலும் விவாதிக்கப்பட வேண்டும். மற்ற அன்பர்கள் இதைப் பற்றி தங்கள் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது கண்ணன் ஏன் வரவில்லை?

தாமரை
Administrator
In reply to this post by திருவாழ்மார்பன்
கண்ணன் சால்வ மன்னனுடன் போரில் இருந்தான் என்பது ஓரு பக்கத்தில் ஒதுக்கி வைக்க வேண்டிய செய்தி. காரணம் இருக்கிறது. திரௌபதி கண்ணனைச் சரணடைந்தவுடன் அவள் ஆடை வளர்ந்து மானங்காக்கப்பட்டதே. அப்படி இருந்தும் அவன் சால்வ மன்னனுடன் போரில் இருந்தது காரணம் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

கண்ணன் ஏன் பாண்டவர்களை காப்பாற்றவில்லை?
(கண்ணனின் அற்புத விளக்கம்)
***************************
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.

இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.

ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை’. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்'' என்றான் பரந்தாமன்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''

''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்

.
''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.

நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.

விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.

அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.

தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.

அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.

மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய்.

மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு,
எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?

ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். ''உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:

''துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.

அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே?

சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது
மன்னித்த விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

'ஐயோ... விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்;

என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.

யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.

பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.

அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..

. துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.

அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.

''அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.

''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?'' புன்னகைத்தான் கண்ணன்

. ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.

''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.

அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.

நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!

பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?

அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!

இந்த விளக்கம் பாகவத புராணத்தில் உள்ளது
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது கண்ணன் ஏன் வரவில்லை?

திருவாழ்மார்பன்
அருமையான விளக்கம் நண்பரே. நன்றி.

இங்கு தான் அர்ஜுனனும் சுக்ரீவனும் வேறுபடுகிறான் என்று நினைக்கிறேன். சுக்ரீவனுக்காக இராமபிரானே போரிட்டார். ஆனால் கண்ணன் அர்ஜுனனை வழி நடத்தினாரே தவிர அவனுக்காக போரிடவில்லை. சொல்லப்போனால் சுக்ரீவன் ஒரு வானரத்தலைவன் அவ்வளவே. அவனை எதிர்த்து வந்தவன் வாலி ஒருவன் தான். வேறு பெரிய சைனியங்கள் எதுவும் இல்லை. அவனுக்காக பகவானே போரிடத் தேவையில்லை. இருப்பினும் மறைந்திருந்து வாலியைக் கொன்று இன்று வரை பலரால் அவப்பெயருக்கு உள்ளாகிறான் இராமபிரான். ஏன்?

அர்ஜுனனுக்காக போர் புரிவதற்கு தான் பல காரணங்கள் உண்டு. சொந்த அத்தை பிள்ளை. மேலும் அவனை எதிர்த்து பதினோரு அக்ஷௌஹிணி சைனியம். பீஷ்மர், துரோணர் போன்ற பல மஹாரதிகள். இருப்பினும் அவனுக்காக போரிடவில்லை. இது ஏன்?

சுக்ரீவன் இராமனிடத்தில் முழுவதும் சரணாகதி செய்தான். சுக்ரீவனை இராமன் நண்பனாக அல்ல, சகோதரனாகவே ஏற்றுக்கொண்டான். குரங்காக இருப்பினும் அவன் செய்த சரணாகதியை முன்னிட்டு அவனை தன் சகோதரனாகவே பாவித்து ’நின்னொடு அறுவரானோம்’ என்றான் இராமன்.

ஆனால் அர்ஜுனனோ கண்ணனிடத்தில் முழுவதுமாக சரணடையாமல் தன்னையும் தன் விற்திறமையையும் தன் காண்டீபத்தையும் நம்பினான். ஒவ்வொரு இடத்திலும் அகந்தையோடே நடந்து கொண்டான். பாரதப் போர் முடிந்து வெற்றிக் களிப்பில் தன்னை தேரிலிருந்து இறக்கி விடுமாறு கண்ணனையே ஆணையிட்டான். இருப்பினும் கண்ணன் ஒவ்வொரு இடத்திலும் அவனைக் காத்துக் கொண்டே வந்தார். கண்ணன் போன் பிறகு அவன் மனைவியரை கொள்ளையரிடமிருந்து காப்பதற்காக தன் காண்டீபத்தை எடுத்த போது அதை அவனால் தூக்கக்கூல் முடியவில்லை. கடைசி வரை அர்ஜுனனுக்கு ஆணவமும் அகம்பாவமும் இருந்தது. எல்லாம் கண்ணனின் செயல் என்பது அவனுக்கு கடைசியில் தான் புரிந்தது.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது கண்ணன் ஏன் வரவில்லை?

தாமரை
Administrator
1. இராமாயணத்து நாயகர்களுக்கும் மஹாபாரத நாயகர்களுக்கும் தொடர்பு உண்டு. இராமாயணத்திம் கர்ம வினையின் பிற்பகுதி மஹாபாரதம் ஆகும்.

இராமாயணத்தின் வாலி இந்திர பிரசாதம். அவனிடம் ஒரு மாலை இருந்தது. அதை அணிந்த அவனுடன் யார் மோதினாலும் அவரின் பலத்தில் பாதியை அவன் பெறுவான். அதனால் வாலியை வெல்ல முடியாது.

சுக்ரீவன் சூரிய புத்திரன். சூரிய புத்திரனுடன் இராமன் சேர்கிறான். இந்திர புத்திரனைக் கொல்கிறான்.

மஹாபாரதத்தில் இந்திரன் மகனுடன் கிருஷ்ணன் சேருகிறான். சூரியன் மகனின் இறப்பிற்கு காரணமாகிறான். சூரியன் மகனிடம் இம்முறை உயிர்காக்கும் அதிசய கவச குண்டலம்.

ஒருவனைக் கொல்ல ஆயுதம் ஏந்தியவன், மிகப்பெரிய படையை வெறும் யுக்திகளால் மட்டுமே பிறரைக் கொண்டு வெல்லுகிறார்.  அங்கு தன் மனைவியின் மானத்திற்காக போராடினார். இங்கு தன் தோழன் மனைவியின் மானம் காக்க. இராமாயணத்தின் பல கணக்குகள் மகாபாரதத்தில் முடிகின்றன.

இராமனின் செயலில் பல கேள்விகள் எழக்கூடும். சுக்ரீவனை அழைத்து வாலியை துவந்த யுத்தத்திற்கு அழை எனச் சொல்லும் இராமன், இராவணனுக்கு ஒரு பொழுதும் துவந்த யுத்த அழைப்பு விடவில்லை. இராமனின் நோக்கம் இராவணனை மட்டும் அழிப்பதல்ல என்பது இதில் புரியும். மலிந்து விட்ட அரக்கர் இனத்தை அழிப்பதே பூரண நோக்கம்.  

வாலி வதையின்பொழுது தாரையும் வாலியும் இராமனுடன் விவாதம் செய்கின்றனர். இராமன் தன்னுடைய செயலுக்கு விளக்கம் அளிக்கிறான்.

இதே போல் துரியோதனன் வதத்தின் போதும் தர்மம் பற்றிய விவாதம் வர கிருஷ்ணன் விளக்கமளிக்கிறார்.

தர்மத்தை ஒரு தலைவனோ அரசனோ பரிபாலிக்கும்பொழுது அதை எவ்விதம் செய்ய வேண்டும் என்பதன் விளக்கங்கள் இவற்றில் சொல்லப்பட்டுள்ளன. உதாரணமாக "மரண தண்டனை" கூடாது என்று இன்று பலர் வாதாடுவர், ஆனால் மரண தண்டனை ஏன் தேவை என்பதன் காரணங்களை இந்த பகுதிகளைப் புரிந்து கொண்டால் வாதிட இயலும்.

அங்கொரு வாயுபுத்திரன் - இங்கொரு வாயு புத்திரன்,

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது கண்ணன் ஏன் வரவில்லை?

திருவாழ்மார்பன்
நண்பரே , தங்களின்  ஒவ்வொரு பதிவும் ஆன்மிக ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் மிக ஆழ்ந்த கருத்துகளை உடையதாக அமைந்துள்ளது. உண்மையில் இந்த விவாத மேடையில் மஹாபாரதத்தை விட பல அரிய தகவல்களும், கருத்துகளும் பல்வேறு கோணங்களில் பரிமாறப்படுகிறது. தொடர்ந்து பல அற்புதமான பதிவுகளையும்  கருத்துகளையும் வெளியிட்டு வரும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களின் பணி தொடரட்டும். அதே போல் இந்த விவாத மேடை பகுதியை தொடங்கி வைத்து இது போன்ற பல பயனுள்ள விவாதங்களுக்கு வழி வகுத்த திரு.அருட்செல்வப்பேரரசன் அவர்களுக்கும் நன்றிகள் பல.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது கண்ணன் ஏன் வரவில்லை?

Arul Selva Perarasan
Administrator
நன்றி நண்பர்களே! கேள்விகளும் பதில்களும் அருமை. நண்பர் தாமரை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி... அருமையான விளக்கங்கள்...


2015-06-23 22:05 GMT+05:30 திருவாழ்மார்பன் [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
நண்பரே , தங்களின்  ஒவ்வொரு பதிவும் ஆன்மிக ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் மிக ஆழ்ந்த கருத்துகளை உடையதாக அமைந்துள்ளது. உண்மையில் இந்த விவாத மேடையில் மஹாபாரதத்தை விட பல அரிய தகவல்களும், கருத்துகளும் பல்வேறு கோணங்களில் பரிமாறப்படுகிறது. தொடர்ந்து பல அற்புதமான பதிவுகளையும்  கருத்துகளையும் வெளியிட்டு வரும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களின் பணி தொடரட்டும். அதே போல் இந்த விவாத மேடை பகுதியை தொடங்கி வைத்து இது போன்ற பல பயனுள்ள விவாதங்களுக்கு வழி வகுத்த திரு.அருட்செல்வப்பேரரசன் அவர்களுக்கும் நன்றிகள் பல.


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp435p457.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML