தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

classic Classic list List threaded Threaded
53 messages Options
123
Reply | Threaded
Open this post in threaded view
|

தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

தமிழ் வள்ளுவர்
This post was updated on .
இது எனக்குள் இருக்கும் நீண்ட நாள் ஐயம்.

மாபாரத்தின் மூலக்கரு தருமம் அதருமத்தை வென்றே தீரும் என்பதுதான்.

கௌரவர்கள் பாண்டவர்களுக்கு அநீதி இழைத்தார்கள்.

ஆதலால் அவர்களைப் போர் தொடுத்து வென்றார்கள் பாண்டவர்கள். நீதியை நிலை நாட்டினார்கள்.

ஆயினும் பாண்டவர்கள் கௌரவர்களை அறத்தின் வழி நின்று வென்றிருந்தால்தானே அறத்திற்குப் பெருமை.

அதை விடுத்து கீழ் கண்டவாறு அதரும வழியலன்றோ வெற்றி கண்டனர்.

-வீடுமரை வெல்ல சிகண்டியை முன்னிறுத்திப் பேடியாய் போரிட்டான் பார்த்தனன்.
 ( தன்னை கொல்லும் வழியை வீடுமரே பாண்டவருக்குச் சொன்னாலும் கூட அதுவும் துரியோதனனுக்கு இழைத்த நம்பிக்கை துரோகம்தானே)

-துரோணரைப் பொய்யுரைத்துக் கொன்றான் தருமன்
(கண்ணன் பின்னிருந்து சங்கொலி எழுப்பியிருந்தாலும் தருமன் பொய்யுரைத்ததனால்தானே தரையைத் தொடாதிருந்த அவனின் தேர் மண்ணில் விழுந்தது.)

-கர்ணனை, மண்ணினின்று தேரை மேலெழுப்ப முயற்சிக்கும் சமயம் கொன்றான் அர்ச்சுனன்.

-பூரிசிரவஸை மாற்றானொடு போரிடும் பொழுது குறுக்கிட்டு அவனது கையைத் துண்டித்து வீழ்த்தினான் அர்ச்சுனன்.

-பகத்தனின் சிகையை அவிழ்த்து ; பார்வையை மறைத்து உயிரினை மாய்த்தான் அர்ச்சுனன்.

-கதைப் போரின் விதியை மீறி துரியோதனனின் தொடயைப் பிளந்து கொன்றான் வீமன்.

இதனின்று பாண்டவர்களுக்கு எவ்வாறு புகழ் சேரும்?

அறத்திற்குத்தான் எப்படி மதிப்புண்டாகும்?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

Arul Selva Perarasan
Administrator
நல்ல ஆழமான கேள்வி!

இதற்கு நன்கு ஆய்ந்துதான் பதில் சொல்ல வேண்டும்.

நான் இந்த ஆய்வில் ஈடுபட்டால் மொழிபெயர்ப்பணி தாமதமடையும்.

ஆகையால், வேறு யாராவது இதற்கு பதில் சொல்ல முயலலாமே

அதுதான் இந்தப் பகுதியின் விவாத மேடை என்ற தலைப்புக்குப் பொருத்தமாக இருக்கும்.

அனைத்திற்கும் நான் மட்டுமே பதில் சொல்வதற்கல்ல விவாதமேடை

விவாதத்தில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்ற நோக்கமே இந்தப் பக்கத்தின் சிறப்பு.

ஆகையால், வாசகர்கள் யாரேனும் பதிலளிக்க முன் வர வேண்டும்.

ஆழ்ந்த கேள்விகளைக் கேட்கும் தமிழ் வள்ளுவர் அவர்களுக்கு நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

ஜெயவேலன்
அய்யா தமிழ் வள்ளுவர் சொல்லியது நூற்றுக்கு நூறு உண்மையே.

பாண்டவர்களும், அவர்களுக்கு துணை நின்ற கிருஷ்ணனும் அதர்மத்தின் வழி நின்றே குருசேத்திரப் போரில் வென்றனரே அன்றி வேறேதுமில்லை.

கௌரவர்கள் அநீதி இளைத்தவர்கள்தாம். அந்த குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை அளிக்க அக்கால சட்டத்தில் இடமில்லை போலும். குற்றம் இழைத்தவர்களுக்கு போரில் ஒரு முடிவு ஏற்பட்டது. ஆனால் போர் குற்றம் இழைத்தவர்களான பாண்டவர்களுக்கு என்ன தண்டனை?
(வெற்றி பெற்றவன் வடித்ததே வரலாறு)

ஆனால் இன்று வரை நாம் ஒரு தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறோம். அது யாதெனின் கர்ணனென்ற ஒரு மாமனிதனுடன் பாண்டவர்கள் அனைவரையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு அவர்களை சிறுமைபடுத்தி வருவதே நாம் அவர்களுக்கு தரும் தண்டனையாகும்.

ஜெயவேலன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

தமிழ் வள்ளுவர்
வணக்கம் திரு.ஜெயவேலன்.

நீங்கள் கூறிய பதில் வாதத்திற்கு வேண்டுமென்றால் நன்றாயிருக்கும்.

சான்றோர்கள் ஒரு கதையை அல்லது ஓர் உண்மைச் சம்பவத்தை மக்களுக்கு உரைக்க விழைவாராயின் அதில் ஓர் நீதியின் வலிமையை உணர்த்தும் மூலக்கரு இருந்தே தீரும்.

எடுத்துக்காட்டுகள்:

-பெண் பித்தால் மதியிழந்த இராவணனை வானர உதவியோடு வெற்றி கொண்டான் இராமன்.(இராமாயணம்)

-கணவனுக்கிழைக்கப் பட்ட கீங்கினை அறிந்து மதுரையை எரித்தாள் கண்ணகி.
(சிலப்பதிகாரம்)

-தேவர்களை இம்சித்த சூரபத்மனை வதம் செய்தான் முருகன்.
(கந்த புராணம்)

-தந்தையைக் கொன்ற பாதகனை வென்றான் சீவகன்.
(சீவக சிந்தாமணி)

-வாய்மையை எத்துணை இன்னல்கள் வந்த போதிலும் காத்து அதன் வலிமையை உணர்த்தினான் அரிச்சந்திரன்.
(அரிச்சந்திர புராணம்)

-சனியின் பீடையால் நாடிழந்த நளன் மீண்டும் அதனை மீட்டெடுத்தான்.
(நள வெண்பா)

மேற்கண்ட அனைத்து நூல்களுமே நீதியின் வலிமையைத்தான் உணர்த்துகின்றன. அதுபோல் மாபாரதம் உணர்த்த வரும் கருத்துதான் என்ன?











Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

Arul Selva Perarasan
Administrator
In reply to this post by தமிழ் வள்ளுவர்
பாண்டவர்கள் மகாபாரதப் போரில் வென்ற முறையை பலர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். ஒரு முறைக்குப் பலமுறை பாண்டவர்கள் விதிமுறைகளை வளைத்து, ஏமாற்றியே தங்கள் எதிரிகளை  வீழ்த்தியிருக்கின்றனர். ஆகையால் யார் நல்லவர்கள் பாண்டவர்களா? கௌரவர்களா? என்ற கேள்வி பலரால் எழுப்பப்படுகிறது

இதில் நான், கௌரவர்களைவிட பாண்டவர்கள் நல்லவர்கள் என்ற முடிவுக்கே வருகிறேன்.

இந்த முடிவை நான் அடைவதற்கு கீழ்க்கண்ட விபரங்களை அடிப்படைகளாகக் கொள்கிறேன்.

1. இக்காப்பியம் முழுவதும் பாண்டவர்கள் குடும்ப ஒற்றுமைக்காகவே உழைத்தனர். தங்கள்

பங்காளிகளால் இழைக்கப்பட்ட அநீதிகளை யாரிடமும் பேசாமல், அதை மறைத்து ஒற்றுமைக்காகவே பல இடங்களில் உழைத்தனர். கௌரவர்கள் அவர்களுக்கு விஷம் கொடுத்தனர்,  எரிக்கப் பார்த்தனர், நாட்டை இரண்டாகப் பிரிக்கும் போதும்கூட வளமற்ற பகுதியையே கொடுத்தனர், திறந்த சபைகளில் எப்போதும் பாண்டவர்களை கௌரவர்கள் அவமதித்தே வந்தனர்.

பாண்டவர்களின் முன்னேற்றத்தில் எல்லாவகையிலும் கௌர்வர்கள் தடைக்கல்லைப் போட்டுக் கொண்டே வந்தனர். இருப்பினும் பாண்டவர்கள் அமைதிக்காகவும், குடும்ப ஒற்றுமைக்காகவுமே உழைத்தனர். உ-ம்: அரக்கு மாளிகை இவர்களைக் கொல்லவே உருவாக்கப்பட்டது. இதை ஓரளவுக்கு அனைவரும் அறிவர். இருந்தும் அது குறித்துப் பாண்டவர்கள் எங்கும் பேசவில்லை.

ஏன் இதற்கெல்லாம் பயமா காரணம்? வெளியே நின்று மக்களிடம் பேசியிருந்தால். ஒரு புரட்சியே ஏற்பட்டு,  மக்களே கௌரவர்களைக் கொன்று பாண்டவர்களை அரியணையில் அமர்த்தியிருப்பார்களே!

2. துரியோதனனுக்கு பாண்டவர்களின் உதவி தேவைப்படும்போதெல்லாம் எந்த நிபந்தனையும் இன்றி அதைப் பாண்டவர்கள் செய்தனர். கானகத்தில் கந்தர்வன் ஒருவன் துரியோதனனைக் கட்டிப் போட்டு, அவனது மனைவிகளைக் கடத்திச் சென்றபோது, பாண்டவர்களே வந்து அவனைக் காப்பாற்றினர். அந்த நேரத்திலும் கூட  துரியோதனன் நிமித்தமாகவே அவர்கள் கானகத்தில் வாழ நேர்ந்தது. அப்போதுகூட துரியோதனன் அக்கானகத்திற்கு வந்ததன் நோக்கம் பாண்டவர்களைக் கொல்லவே.

3. பாண்டவர்கள் கௌரவர்களால் பலமுறை அவமானப்படுத்தப்பட்டும், தங்கள் மனைவி அவமானப்படுத்தப்பட்டும், பாண்டவர்கள், கௌரவர்களைப் போல அவர்களுக்குத் தீங்கு நினைக்கவில்லை.

4. பாண்டவர்கள் நினைத்திருந்தால் நாடு கடத்தலுக்குச் சம்மதியாமல், தங்கள் பலத்தால் ஆட்சியைப் பெற்றிருக்க முடியும். ஆனால் தாங்கள் கொடுத்த வார்த்தைக்காக அவர்கள்  
சொன்னபடி நடந்தார்கள். கௌரவர்களும் கொடுத்த வார்த்தைக்கேற்ப நடக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது முட்டாள்களின் கனவானது. அவர்கள் எப்போதும் தங்கள் பங்காளிகளின் நன்மையையும், அவர்களிடம் தங்கள் ஒற்றுமையையும் விரும்பினார்கள். கடைசி நிமிடம் வரை போரைத் தவிர்க்கப் பார்த்தவர்கள் பாண்டவர்கள்தான். கௌரவர்கள் அல்ல.

கடைசியாக "இருக்க ஒரு வீடும், வாழ ஒரு பசுவும் கொடு" என்று கேட்டனர். அதற்குக்கூட துரியோதனன் சம்மதிக்கவில்லை. அவன் போரையே விரும்பினான். பாண்டவர்களின் அழிவே  
அவனது நோக்கமாக இருந்தது.

5. போர் முடிந்த பிறகு, கௌரவர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகும், பாண்டவர்கள், போருக்கான வேர்க்காரணமான திருதராஷ்டிரனைத் துரத்திவிட வில்லை. அவர்களுடனேயே வைத்துக் கொண்டனர் {36 வருடங்களுக்கு}. அதன்பின்புதான் திருதராஷ்டிரன் கானகம் சென்று தனது தவத்தால் தனது உடலை எரித்துக் கொண்டான். தங்கள் பங்காளிகளை நம்பியிருந்தவர்களையும், அவர்களது மனைவியரையும் பாண்டவர்கள் எந்தத் தொல்லையும் கொடுக்காமல் தாங்கள் வாழ்ந்த காலம் வரை அவர்களை ஆதரித்து வந்தார்கள்.

6. பாண்டவர்கள் மூத்தவர்கள் {கௌரவர்கள் பக்கத்திலிருந்த} மதித்தார்கள், தங்களுக்கு முழுவதும் சாதகமாக அவர்கள் நடந்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களைக் கடைசி வரை மதித்தார்கள்.

அந்தப் பெரியவர்கள் அனைவரும் முறையானவற்றையே சொன்னார்கள். முறையானதையே பரிந்துரைத்தார்கள். ஆனால் நேரம் வந்த போது அவர்கள் அனைவரும் பாண்டவர்களுக்கு
எதிராகவே இருந்தனர். (உ-ம்) வாராணவத சதித்திட்டத்தை திருதராஷ்டிரன் அறிந்திருந்தும் அதைத் தடுக்கவில்லை. பொறுப்பு நிறைந்த பீஷ்மரும் அது குறித்து பெரிதாக ஆய்வு செய்யவில்லை.

பாண்டவர்கள் திரும்பி வந்த பிறகும் அவர்கள் நேர்மையாக நாட்டைப் பிரித்துக் கொடுக்கவில்லை.

சூதாட்டத்தை கௌரவப் பெரியவர்கள் தடுக்கவில்லை. தங்கள் மருமகன் சபையின் முன்பு அவமானப்படுவதை அவர்கள் தடுக்க முனையவில்லை. பாண்டவர்களை வெளிப்படுத்த நினைத்த
விராடப் போரில் அவர்களும் துரியோதனன் பக்கம் நின்றனர். கடைசிப் போரிலும் அந்தப் பெரியவர்கள் துரியோதனன் பக்கம் நின்று போரிட்டது சோகத்தின் உச்சம்.

வெளிப்படையாக அருளும் நல்வாழ்த்தும் தெரிவித்தார்கள், "உண்மை உங்களுக்குத் துணை புரியட்டும்", "நீங்கள் தான் எங்களுக்குப் பிடித்தமானவர்கள்" என்று அந்தப் பெரியவர்கள்
சொன்னார்களே ஒழிய அவர்களது செயல்களால் அதைச் செய்யவில்லை. வார்த்தைகள் வயிறை நிரப்புமா? அல்லது ஆழமான காயங்களை அவர்களது வார்த்தைகள் ஆற்றுமா? துரியோதனன் வெளிப்படையாகப் பகை பேசினான், கௌரவப் பெரியவர்கள் வெளிப்படையாக பாண்டவர்களை வாழ்த்திய பெரியவர்கள்தான் போரில் பாண்டவர்களுக்கு மறைமுக எதிரிகளாக இருந்தார்கள்.

இதையெல்லாம் அறிந்தும் கூட பாண்டவர்கள் கடைசி வரை அப்பெரியவரை மதிக்கவே செய்தார்கள். மறந்தும் ஒரு அவமரியாதையான வார்த்தையைக் கூட உச்சரிக்கவில்லை. ஏன்
அவர்களிடம் நியாயம் கூட கேட்கவில்லை. அவர்களின் வாழ்த்துகளை நாடியே எப்போதும் இருந்தார்கள். போரில் அர்ஜுனன் பல கட்டங்களில் பெரியவர்களைத் தவிர்க்கவே எண்ணினான்.

அவர்களுடன் நேரிடையாகப் போர் புரிய சங்கடப்பட்டான். விராட நகரத்தில் நடந்த போரில் கூட அர்ஜுனன் கர்ணன் மற்றும் துரியோதனனின் உடைகளைக் களைந்தானே தவிர, பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியர், அஸ்வத்தாமன் ஆகிய மரியாதைக்குரியோரின் உடைகளைக் களையவில்லை.

ஆனால் இந்தக் கௌரவப் பெரிவர்கள்தான் கௌரவர்களைவிட பெரிய எதிரிகளாக இருந்தார்கள். இருப்பினும் அந்தச் சகோதரர்கள் வார்த்தைகளாலும், செயல்களாலும் தங்கள் நினைவுகளை அசுத்தப்படுத்திக் கொள்ளவில்லை.

உங்கள் சொந்தப் பெரியவர்களே உங்களை எதிர்த்து நிற்கும் போது, உங்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கும்?
கௌரவர்கள் மற்றும் கௌரவப் பெரியவர்களின் தோல்விக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் மேலான காரணம் என்னவென்றால், அவர்களது நினைவுகள், வார்த்தைகள், செயல்கள்
ஆகியன ஒரே மாதிரியாக இல்லை. ஒருவர் குழப்பமான மனநிலையில் இருக்கும்போது அவர்களின் தலைமை எந்த அளவுக்கு வெற்றிபெறும்?

7. 18வது நாள் போருக்குப் பிறகு, அன்று இரவு அஸ்வத்தாமனும் குலகுரு கிருபாச்சாரியரும் பாண்டவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது தாக்கி பெரும் குற்றமிழைத்தனர். உறங்கும்
வீரர்களைக் கொல்வது யாராலும் ஏற்கத்தகாதது. ஒருவரைப் போரில் எதிர் கொள்ள முடியவில்லை என்றால், இதுபோன்ற ஈனச்செயல்கள் புரிவதைவிட தான் கோழை என்றே ஏற்றுக்கொள்ளலாமே

அஸ்வத்தாமனின் வெறுப்பு எந்த அளவுக்கு கீழ்நிலைக்குச் செல்கிறது என்று பாருங்கள். உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவைக் கூட அவன் கொல்ல நினைக்கிறான்.

இவையெல்லாம் நடந்த பிறகும் பாண்டவர்கள் அஸ்வத்தாமனை மன்னித்து அவனை உயிருடன் விட்டனர். மேலும் இவ்வளவுக்குப் பிறகும் கிருபாச்சாரியாரைத் தொடர்ந்து குல குருவாக ஏற்று, தங்கள் ஒரே வாரிசான தங்கள் பேரன் பரீக்ஷித்தை அவரிடம் கல்வி பெற வைக்கின்றனர்.

8. பாண்டவர்கள் எப்போதும் அமைதிக்காகவே உழைத்தனர், ஆனால் கௌரவர்கள் எப்போதும் போரையே எதிர்பார்த்தனர். ஐந்து கிராமங்களைக் கொடுத்தால் கூட பாண்டவர்கள் அமைதி
காத்திருப்பார்கள். ஆனால் துரியோதனன் ஒரு பொருளைக் கூட கொடுக்க மாட்டேன் என்று சொல்லி, பல கோடி மக்களின் சாவுக்குக் காரணமானான்.


9.பாண்டவர்களின் முக்கியமான குற்றம் சூதாடியதே! தர்மன் சூதுக்கு அடிமையாக இருந்தான்.

அதைத் துரியோதனன் பயன்படுத்திக் கொண்டான். ஆனால் அதிலும் விளையாட்டுக்காக சூதாடாமல் வஞ்சனையுடன் சூதாடிய துரியோதனன் மற்றும் சகுனியின் எண்ணம் பாண்டவர்களை விட தீமையானதே.

10. பாண்டவர்கள் போர் விதிகளை மீறினார்கள் என்பது உண்மையே. ஆனால் ஒவ்வொரு முறையும் அது கௌரவர்களால் மீறப்பட்ட பிறகே, அவர்களும் மீறினார்கள். பதிலடி கொடுத்ததை நாம் எப்படி பழி சொல்ல முடியும்?

வருடக்கணக்கான தங்கள் அமைதியைப் பாண்டவர்கள் கடைசியாகத்தான் உடைத்தார்கள். அதுவும் அதில் கிருஷ்ணனின் பங்கு மகத்தானது. வெற்றிக்காக சில வரம்பு மீறுதல்களை அவர்களும் செய்ய வேண்டியிருந்தது.

வாழ்வில் மனிதன் வெள்ளையாகவோ கருப்பாகவோ இருக்க முடிவதில்லை. சாம்பல் நிறத்தில்தான் இருக்கிறான். ஆனால் எவ்வளவு கருப்பாக இருக்கிறான் என்பதே கேள்வி. அப்படிப் பார்க்கையில் கௌரவர்களின் சாம்பல் நிறத்தில் அதிக கறுப்பும், பாண்டவர்களிடத்தில் குறைவான கறுப்புமே இருந்தது.

தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காகவும், அதர்மன் தோற்க வேண்டும் என்பதற்காகவும், கலிகாலத்தில் அநீதியின் வழிகளையும் பின்பற்றத்தான் வேண்டியிருக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

பீஷ்மரை அர்ஜுனனால் எளிதாக வெல்ல முடியும். பலமுறை அவரை வென்றும் இருக்கிறான். ஆனால் அவனால் கண்டிப்பாகக் கொல்ல முடியாது. அவனுக்கு ஒரு கவசம் தேவைப்பட்டது. பாதுகாப்புக்காக அல்ல, ஒரு முகமூடிக்காக. சிகண்டியைக் கொண்டு தனது முகத்தை பீஷ்மருக்குக் காட்டாமல் பீஷ்மரைத் தனது கணைகளால் துளைத்தான்.

துரோணரைக் கொல்ல என்றே அவதரித்தவன் திருஷ்டத்யும்னன், அங்கும் பார்த்தன் நினைத்திருந்தால் துரோணரை எளிதில் வென்று விட முடியும். ஆனால் அதை அவன் செய்யத் துணியவில்லை. அது திருஷ்டத்யும்னனின் பொறுப்பு. அவனால் கொல்ல முடியாத போது அங்கே தருமனின் பொய் அவசியம் தேவைப்படுகிறது. அதற்கும் கிருஷ்ணன் தான் காரணமாக இருக்கிறான். அங்கேயும் பாண்டவர்களைக் குறை சொல்ல முடியாது.

அபிமன்யுவை யாரும் விதிமுறைக்குட்பட்டு கொல்லவில்லை. ஒருவனை பலபேர் சேர்ந்து கொன்றார்கள். அதில் கர்ணனுக்கும் பங்கு உண்டு. மகத்தான கர்ணன் அவ்விஷயத்தில் தலைகுணிந்தே நிற்கிறான். அவன் செய்த அநீதிக்கு பதில் அநீதிதான் கர்ணன் தேரை மேலெழுப்ப முயற்சிக்கும் சமயம் அவன் கொல்லப்பட்டது. அவன் அப்படிக் கொல்லப்படவில்லையெனில் அவனுக்கு மறுபிறப்பு அவசியமாகிறது. கர்ணனுக்கு தகன காரியங்களைச் செய்தவன் கிருஷ்ணன். கிருஷ்ணனால் தகனம் செய்யப்படுபவன் மறு பிறப்பு அடைய முடியாது. அப்படியென்றால் அவன் செய்த கர்மத்தை இங்கேயே தொலைத்துவிட்டு செல்லவேண்டும்.

திரௌபதி துயிலுரிப்பின் போது, துரியோதனன் தொடையைப் பிளந்து கொல்வேன் என்பது பீமனின் சபதமாகும். ஆகையால் இறுதியில் முற்றிலும் துரியோதனை வீழ்த்திய பிறகே. பீமன் அவனைத் தொடையில் அடித்துக் கொன்றான்.

பாண்டவர்களோ கிருஷ்ணனோ அதர்மத்தின் வழி நிற்கவில்லை. தர்மத்தின் வழி நின்று, தர்மத்தைக் காக்கவே சில கபட (ராஜதந்திர) வழிகளைக் கையாண்டனர்.

வெற்றிபெற்றவன் வடித்ததே வரலாறு என்பது ஆணித்தரமான உண்மை. ஆனால், உலக வரலாறுகளில் எடுத்துப் பாருங்கள். வென்றவன் முற்றிலுமான நல்லவன் என்றே காட்டப்பட்டிருக்கும். ஆனால், மாபாரதத்தில் அப்படி கிடையாது. நல்லவர்களின் முகத்திரையும் கிழித்துக் காட்டப்பட்டிருக்கும்.

கர்ணனைவிட பாண்டவர்கள் எந்த வகையிலும் தாழ்ந்தவர்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டும் கிடையாது. கர்ணனுடன் பாண்டவர்களை ஒப்பிட்டு சிறுமை படுத்துகிறோம் என்றால், துரியோதனை ஏன் சிறுமை படுத்தவில்லை? துரியோதனன் பாண்டவர்களை விட அவ்வளவு அறம்சார்ந்தவனா?

அறத்தின் விதிகள் மிக நுட்பமானவை. பல கோணங்களில் ஒரு சம்பவத்தைப் பார்க்க வேண்டும். நமக்கு அறம் எனப் பட்டது மற்றவருக்கு அறமில்லாமல் போகும். பொதுப்புத்திக்கு எது அறமோ அதுவே அறம். பிரபஞ்ச நன்மைக்கு எது அறமோ அதுவே அறம். கலிகாலத்தில் அறத்தை நிலைநாட்டக்கூட அநீதியை மேற்கொள்ள வேண்டியது விதியின் கட்டாயமாகும்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

தமிழ் வள்ளுவர்
தங்களின் நீண்ட பதிவுக்கு நன்றிகள் பல, நீங்கள் கூறியது போல் தருமத்தின் வழி வெகு சூட்சமமானதே. அதனை அறிந்து தெளிவது கடினம்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

மெய்யப்ப அருண்
In reply to this post by Arul Selva Perarasan
பாண்டவர்களை விட கர்ணன் உயர்வாகவே தெரிகின்றான். இதைப்பற்றி வீரம் குணம் தானம் என்று பகுதி பகுதியாக விவாதிப்போம்.
முதலில் வீரம்.

௧) கந்தர்வர்களுடனான மற்றும் விராடப்போரிலும் கர்ணன் தன்  தெய்வீக ஆயுதங்களையும்(பார்க்கவாஸ்த்திரம் போன்ற) தெயவீக வில்லையும் பயன்படுத்தவில்லை. முழு ஊக்கத்துடனும் போரிடவில்லை. இக்காரனத்தையே 16 ஆம் நாள் இரவில் துரியோதனனிடம் தனக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள வேறுபாடாக கூறி சல்லியனையுன் எண்ணிலங்கா ஆயுதத்தையும் கேட்கிறான்.
அனால் அர்ஜுனன் தெய்வீக ஆயுதங்களையும் தெயவீக வில்லையும், அள்ளக்குறையாத அம்பாரத்தூநியை மற்றும் அழிக்க முடியாத அக்னியின் தேர்க்குதிரைகளியும் பயன்படுத்தினான்.

௨)  கிருஷ்ணரின் உதவியுடனே பீமன் ஜராசந்தனை வீழ்த்தினான். ஆனால் கர்ணன் யாருடைய உதவியும் இல்லாமல் ஜராசந்தனை தோற்கடித்தான் . மேலும் ஜராசந்தனை அழிக்கும் இரகசியத்தையும் அறிந்து வைத்திருந்தான். கர்ணனின் வீரத்தை மெச்சியே ஜராசந்தன் கர்ணனுக்கு மாலினி என்ற நாட்டை பரிசாக வழங்கி தன் நண்பனாக்கினான்.

௪)  திரௌபதி அப்பொழுதே சூதப்புத்திரனை நான் மணக்கமாட்டேன் என்று வில்லெடுத்து இலக்கை தாக்க இருந்த கர்ணனை பார்த்து கூராவிட்டிருந்தால் ஐவருக்கும் மனைவியானவள் ஐவருக்கும் முதன்மையானவனுக்கு மனைவியாயிருப்பால்.  

௫) கர்ணன் எவ்வளவு வீரம் உள்ளதோ அந்தளவிற்கு அலட்ச்சிய குணமும் உள்ளது. அதனால்த்தான் சில இடங்களில் பின்வாங்கினான். கர்ணன் பின்னிருந்து அபிமன்யுவின் வில்லைத்தான் துண்டித்தான் அதுவும்கூட அப்போழுதிய தளபதி துரோணரின் அறிவுறுத்தலின் பேரில்.
அனால் அர்ஜுனன், ஒருத்தனை பலவீனப்படுத்த எவ்வளவோ வழிகள் இருக்கும் பொழுது பூரிசிரவசு மற்றொருவருடன் போரிடும் பொழுது அவனுடைய கையையே துண்டித்தான். ஒரு மாவீரனின் வீரம்.

௬) கர்ணன் தன் முழுஆற்றலை வெளிப்படுத்தும் பொழுது
   17 நாள் போரில் கர்ணன் தனி ஒருவனாக இருந்தே பீமன், தருமன், சாத்யகி, திருஷ்டதுய்ம்ன், மற்றும் நகுலசகாதேவ் துச்சமாக முறியடித்தான். இங்கு இன்னும் சொல்லப்போனால் அனைத்து பானடவர்களையும்(அர்ஜுனனையும் சேர்த்து) முறியடித்தான் என்றே வியாசர் குறிப்பிடுகிறார்.
பிறகு அர்ஜுனன் கர்ணன் தனிப்போர் தொடங்கிய பிறகு கர்ணனால் பலத்த அடிபெற்று மயக்க முற்றபோழுது கர்ணன் அர்ஜுனனை தாக்கவில்லை. அனால் மாவீர அர்ஜுனன் கர்ணன் தேரை தூக்கியபோழுது தாக்கினான். நீங்கள் கேட்கலாம் கர்ணன் செய்த தவறுகளுக்குதான் அர்ஜுனன் அப்படி கொன்றான்னு. அப்படின்னா தன்னுடைய வீரத்தால் கர்ணனை வெல்ல முடியாதா ? அப்படி வெல்ல முடியும்ன்னா தாராளாம பொருத்திருக்கலாமே , இன்னும் சூரியன் மறையல , மறுநாள் போர் இன்னும் இருக்கு. இவ்வளவு இருக்கும்பொழுது அர்ஜுனன் கர்ணனை போர் விதிகளை மீறி கொல்றான்ன கிருஷ்ணன் சொன்ன வார்த்தைகள் தப்பேஇல்லே!!!. கிருஷ்ணர் அர்ஜுனானிடத்தில் அர்ஜுனா நான் கர்ணனை உனக்கு சமமாகவும் கருதலாம் ஏன் உயர்வாகவும் கருதாலாம்.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

Arul Selva Perarasan
Administrator
நண்பர் மெய்யப்ப அருண் அவர்களே,

நல்ல பதில். கர்ணன் என்றால் யாராக இருந்தாலும் ஒரு Soft corner இருக்கும். அது அவனது இயல்புக்கே உரிய சிறப்பு. கீழே நான் கர்ணனை குறைத்துச் சொல்வதாக நினைக்க வேண்டாம்...

விராடப் போரில் கர்ணன் தெய்வீக வில்லைப் பயன்படுத்தவில்லையா? அல்லது அவனிடம் அந்த வில்லே அப்போது இல்லையா? பரசுராமரிடம் பெற்றதுதான் பார்க்கவ வில். கர்ணன் எப்போது பரசுராமரிடம் கல்வி பயில சென்றான்? அவன் அர்ஜுனனிடம் தோற்றுத் தோற்றே, எப்படியும் அர்ஜுனனை வீழ்த்த வேண்டும் என்ற முடிவில், பிறகே தெய்வீக ஆயுதங்களை அடைந்தான் என்றே படித்ததாக ஞாபகம்.

http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section192.html என்ற பகுதியில்

இதைக்கேட்ட பல்குணன் {அர்ஜுனன்}, "ஓ கர்ணா, நான் ஆயுத அறிவியலும் இல்லை, ஆதீத மனித சக்தி கொண்ட ராமனும் {பரசுராமனும்} இல்லை. நான், ஆயுதம் தாங்கிய வீரர்களில் முதன்மையான சாதாரண பிராமணன் மட்டுமே. எனது குருவின் அருளால், நான் பிரம்ம மற்றும் பௌரந்தர ஆயுதங்களைப் பெற்றிருக்கிறேன். உன்னைப் போரில் வெல்லவே நான் இங்கு இருக்கிறேன். அகையால், வீரனே சற்று பொறு!" என்றான்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "(அர்ஜுனனால்)இப்படிச்சொல்லப்பட்டதை கேட்ட ராதையால் சுவீகரிக்கப்பட்ட மகன் கர்ணன், பிரம்ம சக்தி வெல்ல முடியாதது என்று கருதினான். ஆகையால் அந்தபெரும் பலம் வாய்ந்த ரத வீரன் போரிலிருந்து விலகினான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section192.html#sthash.1K3Y3fGo.dpuf என்று வருகிறது.

மேலும், பல இடங்களில் அலட்சியத்தால் தோற்றான் என்பது ஏற்க இயலாததாக இருக்கிறது.

கர்ணன் ஜராசந்தனை விற்போரில் வீழ்த்தினான். ஆனால் கொல்லவில்லை. அவனால் கொல்லவும் முடியாது. உலகத்திலேயே மிகுந்த பலசாலி பீமனால் அவனைக் கொல்ல முடியும். ஆனால் அவனுக்கு சிறு சூட்சுமம்தான் தெரியவில்லை. அதைக் கிருஷ்ணன் சுட்டிக் காட்டியதும் ஜராசந்தனைக் கொன்றுவிட்டான். ஆனால் கர்ணன் நினைத்திருந்தாலும் ஜராசந்தனைக் கொன்றிருக்க முடியாது.

குருக்ஷேத்திரப்போரில் கர்ணனிடம் அனைத்து ஆயுதங்களும் இருக்கும் போதே, ஒரு முறை பீமன் கை ஓங்கி, கர்ணனைக் கொல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அர்ஜுனனின் பகையை நாம் முடிக்க வேண்டாம் என்று விட்டான். அதே போல பீமனையும் ஒரு சந்தர்ப்பத்தில் கர்ணன் விட்டான்.

பிடிக்காத ஆசாரியன் சொன்னதால் அபிமன்யுவின் வில்லை பின்னால் இருந்து அறுத்தால் அது தவறாகாதா?

கர்ணன் 17வது போரில் வீரச்சாகசம் செய்ய வேண்டும் என்பது விதி. அணையப் போகும் விளக்குப் பிரகாசமாக எரிவதைப்போல....

நாம் ஒவ்வொருவருக்கு ஒரு அளவு கோலை வைத்துப் பார்க்கிறோம்.

அழையாத களத்தில் தன் வீரத்தைக் காட்டுவதற்காக வந்ததைச் சொல்லி பாண்டவர்களை அவமானப் படுத்தத் துணிந்தது? சபை நடுவே திரௌபதியைக் குறித்து கர்ணன் பேசி வார்த்தைகள், அபிமன்யுவைக் கொன்ற சூழ்ச்சியில் பங்கேற்றது. மேலும் கர்ணன் பல இடங்களில் பாண்டவர்களின் பிறப்பைக் கொச்சைப் படுத்துவது. இதில் கௌரவர்கள் ஆகட்டும், பாண்டவர்கள் ஆகட்டும், அல்லது கர்ணன் தான் ஆகட்டும், யாரும் முறையான வழியில் பிறந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும் கர்ணனும் சரி கௌரவர்களும் சரி பாண்டவர்களை மட்டும் கொச்சைப் படுத்துவது. இன்னும் பல விஷயங்கள் ஞாபகத்தில் இல்லை.

பாண்டவர்களுக்கு வைக்கும் அதே அளவு கோலை கௌரவர்களுக்கும் கர்ணனுக்கும் வைத்துப் பார்க்க வேண்டும்.

நான் இவற்றைச் சொல்வதால் கர்ணனைக் குறைத்துச் சொல்லவில்லை. கர்ணனும் சரி துரியோதனனும் சரி மிக மிக நல்லவர்களே... திறமைசாலிகளே...

ஆனால், இருவரும் பொறாமை என்ற உணர்ச்சிக்குத் தங்களை அடமானம் வைத்திருந்தார்கள். அதுவே அவர்களது எல்லா வீழ்ச்சிக்கும் காரணம்.

கிருஷ்ணர் அர்ஜுனானிடத்தில் அர்ஜுனா நான் கர்ணனை உனக்கு சமமாகவும் கருதலாம் ஏன் உயர்வாகவும் கருதாலாம். என்று சொன்னது அர்ஜுனனின் கர்வத்தைப் பங்கப்படுத்தவே!

பூரிசிரவசு கதை நெடுநாளைக்கு முன்பு படித்தது நினைவில் இல்லை. படித்துவிட்டு, அதில் என்ன சமாதானம் சொல்லலாம் என்று பார்க்கிறேன். மேலும் தமிழ் வள்ளவர் அவர்கள் பகதத்தன் குறித்து கேட்டிருந்தார். அதுவும் எனக்கு நினைவில் இல்லை. படித்தபிறகு ஏதாவது சமாதானம் தோன்றினால் சொல்கிறேன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

தமிழ் வள்ளுவர்
ஐயா, வணக்கம்.

கர்ணன் என்றாலே யாவராலும் விரும்பப்படும் ஒரு கதாபாத்திரம்.

யாவராலும் என்றால் மாபாரதத்தை தமிழ் படுத்திய வில்லிப்புத்தூராரும் உட்பட.

கர்ணனின் கதாபாத்திரம் வில்லிப்புத்தூராரை வெகுவாக கவர்ந்த காரணத்தினால்தான் வியாச பாரதத்தில் கூறப்படாத பற்பல கதை நிகழ்வுகளை கர்ணனுக்காக கூடுதலாக உருவாக்கினார்;
அவனது பாத்திரத்திற்கு மேலும் மெருகேற்றினார்.

கர்ணனுக்காக தரும தேவதை வந்து கண்ணீர் வடிப்பதும், கண்ணன் புண்ணியத்தைத் தானமாக் கேட்டுப் பெறுவதும், கண்ணன் என்ன வரம் வேண்டும் எனும் கேட்கும் சமயம் மறுபிறப்பிலும் தான் இல்லையென்று சொல்லாத வள்ளலாகத் திகழ வேண்டுமெனக் கேட்பதும் வில்லிப்புத்தூரார்  கூடுதலாக உருவாக்கியவை.

மாபாரதத்துப் பெரும்புலவோர்  வில்லிப்புத்தூராரே கர்ணனால் ஈர்க்கப் படும்பொழுது, நம்மை கர்ணன் கவர்வதில் என்ன வியப்பு.

கீழ் கண்ட நிகழ்ச்சி வியாச பாரதத்தில் உள்ளதா அல்லது வில்லி பாரதத்து நிகழ்வா அல்லது செவிவழி நாட்டுப்புறக் கதையா என்று சற்று கூற முடியுமா?

"அர்ஜூனனுடன் கர்ணன் போர் புரியும்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. கர்ணனின் அம்புகளில் ஒன்று தாக்கியதால் அர்ஜூனனின் தேர் சில அங்குலம் பின் சென்றபோது, அர்ஜூனனின் சாரதியான (தேரோட்டி) கிருஷ்ணன் கர்ணனைப் பாராட்டினார். அவரது கருத்தில் அர்ஜூனன் வியப்படைந்து "நான் கர்ணனின் தேரை பல மைல்கள் பின்னுக்கு நகர்த்தியுள்ள போது, இதற்காக கர்ணனை பாராட்டுவதில் எந்த காரணமும் இல்லை" என்றார். பின்னர் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் விவரித்தது, "உனது தேரில் பகவான் விஷ்ணுவாக நான் இருக்கின்றேன். நான் முழு பிரபஞ்சத்தினை கொண்டுள்ளேன் மற்றும் உனது தேரில் கூடுதலாக அக்னி (நெருப்புக்கான தெய்வம்) இருக்கின்றார், மேலும் ஹனுமானின் ஆசீர்வாதங்கள் கொடி வடிவத்தில் உள்ளன. இந்த காரணிகளை உனது தேரிலிருந்து நீக்கப்பட்டால் அது பறந்திருக்கும், புவியின் மையத்தில் இருந்திருக்கும்" என்று கூறினார்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

Arul Selva Perarasan
Administrator
ஐயா,

இப்படி ஒரு சம்பவத்தை நான் படித்ததாக நினைவிருக்கிறது. ஆனால் மூலமா என்பது தெரியவில்லை. மீண்டும் படித்துப் பார்த்துவிட்டுத்தான் சொல்ல வேண்டும். முயற்சிக்கிறேன்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பபேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

மெய்யப்ப அருண்
// விராடப் போரில் கர்ணன் தெய்வீக வில்லைப் பயன்படுத்தவில்லையா? அல்லது அவனிடம் அந்த வில்லே அப்போது இல்லையா? பரசுராமரிடம் பெற்றதுதான் பார்க்கவ வில். கர்ணன் எப்போது பரசுராமரிடம் கல்வி பயில சென்றான்? அவன் அர்ஜுனனிடம் தோற்றுத் தோற்றே, எப்படியும் அர்ஜுனனை வீழ்த்த வேண்டும் என்ற முடிவில், பிறகே தெய்வீக ஆயுதங்களை அடைந்தான் என்றே படித்ததாக ஞாபகம்.//

இல்லை பயன்படுத்தவில்லை அப்படியிருந்திருந்தால் வியாசர் நிச்சயம் குரிப்பிட்டுருப்பர். விஜயா வில் உடைக்க முடியாதது.

சாந்தி பருவத்திற்கு பிறகு தருமனிடம் நாரதர் கூறுவது.

இல்லை நண்பரே தன்னுடைய பால்ய வயதிலேய கர்ணன் துரோனரிடமிருந்து சென்று பரசுராமரிடம் கல்வி கற்றான். அப்பொழுதே அவன் பிரம்மாஸ்த்திரத்தை ஏவவும் திரும்பப் பெறவும் முழுமையாக கற்றான்.

[Narada said, That tiger of Bhrigu's race viz, Rama, was well-pleased with the might of Karna's arms, his affection for him, his self-restraint, and the services he did unto his preceptor. Observant of ascetic penances, Rama cheerfully communicated, with due forms, unto his penance-observing disciple, everything about the Brahma weapon with the mantras for withdrawing it.]

http://ancientvoice.wikidot.com/src-mbh-12:section-3

கர்ணன் ஜராசந்தனை உடலை பிரித்து மாற்றிப்போட்டு வீழ்த்தும் இரகசியத்தையும் அறிந்துவைத்திருந்தான் என்பதை நாரதர் யுதிஷ்டிரனிடம் கர்ணனுக்கும் ஜரசந்தனுக்குமிடையே நடந்த போரை பற்றி கூறுவதிலிருந்து உணரலாம்.

[V Narada said, Hearing of the fame of Karna's might, the ruler of the Magadhas, king Jarasandha, challenged him to a single combat. Both conversant with the celestial weapons, a fierce battle took place between them in which they struck each other with diverse kinds of arms.
At last when their arrows were exhausted and bows and swords were broken and they both became carless, they began, possessed of might as they were, to fight with bare arms. While engaged with him in mortal combat with bare arms, Karna was about to sever the two portions of his antagonist's body that had been united together by Jara. The king of Magadha, then after feeling himself very much pained, cast off all desire of hostility and addressed Karna, saying, I am gratified' From friendship he then gave unto Karna the town Malini.]

http://ancientvoice.wikidot.com/src-mbh-12:section-5

கர்ணன் பொறாமை கொண்டதற்கும் அது வளரவதுர்க்கும் காரணம். அவனை சுற்றியிருந்தவர்கள் அவனை வேண்டுமென்றே எப்பொழுதும்  மட்டம் தட்டியதே. இங்கு நாம் உளவியல் ரீதியாகவும் பார்ப்பது சிறந்தது என்றே கருதுகின்றேன்.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. உங்களுடன் விவாதிப்பது சுவாரசியமாக உள்ளது.



Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

Arul Selva Perarasan
Administrator
நண்பர் மெய்யப்பன் அருண் அவர்களே!

மஹாபாரதக் கதையை இவ்வளவு அறிந்து வைத்திருப்பவர்களை, நான் சமீபத்தில் கண்டதோ கேட்டதோ கிடையாது!

தகவல்களுக்கு நன்றி. பதில் அருமை.

கங்குலியின் பாரதம் முழுவதும் நான் ஏற்கனவே படித்ததுதான். ஆனால், கர்ணனைக் குறித்து நாரதர் குறிப்பிடும் சம்பம் என் நினைவில் இல்லை.

//கர்ணன் பொறாமை கொண்டதற்கும் அது வளரவதுர்க்கும் காரணம். அவனை சுற்றியிருந்தவர்கள் அவனை வேண்டுமென்றே எப்பொழுதும்  மட்டம் தட்டியதே. இங்கு நாம் உளவியல் ரீதியாகவும் பார்ப்பது சிறந்தது என்றே கருதுகின்றேன்.// என்று சொல்லியிருக்கிறீர்கள்.

திரௌபதி சுயம்வரம் தவிர, சம்பந்தமே இல்லாமல் கர்ணன் எங்கும் நுழையாத வரை, அவனை யாரும் அவமதித்தாக எனக்குத் தெரியவில்லை.

மேலும் கர்ணன் தரப்பு வாதங்களை நீங்கள் முன்வைத்தீர்கள் ஆனால், வாசகர்களும் படித்துப் பயன்பெறுவார்கள். மேலும் புது விவாதங்களைத் துவக்குவதற்கும் நான் உங்களைத் தூண்டுகிறேன். புதிய விவாதங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இந்த விவாத மேடை பகுதியிலேயே, இந்தத் தலைப்பு அதிக செறிவுள்ளதாக வளர்ந்திருக்கிறது. தமிழ் வள்ளுவர் அவர்களுக்கும், ஜெயவேலன் அவர்களுக்கும், மெய்யப்பன் அருண் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

மெய்யப்ப அருண்
In reply to this post by மெய்யப்ப அருண்
வீரத்தில் கர்ணனும் அர்ஜுனனும்

ஆம் நண்பரே கர்ணன் விராடப்போரில் அர்ஜுனனிடம் தோற்றான். அவன் எப்படி தோற்றான் எத்தகைய நிலையில் தோற்றான் என்பதெல்லாம் அடுத்த கட்டத்திற்கு உரியவை. [நாகச்த்திரம், சக்தி அஸ்த்திரத்திலிந்து கிருஷ்ணரின் உதவியினாலேயே அர்ஜுனன் உயிர்பிழைத்தான் விராடபோரில் கிருஷ்ணன் இல்லை கர்ணனும் இத்தகைய ஆயுதங்களை விராடப்போரில் பயன்படுத்தவில்லை பயன்படுத்தியிருந்தால்..!!! ஏன் பயன்படுத்தவில்லை என்பதெல்லாம் தீவிர ஆய்வுக்கு உட்பட்டது.].

கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த இறுதி யுத்தத்தை சற்று நுணுக்கமாக ஆராய்வோம்.

கர்னனனால் அர்ஜுனன் நன்கு தாக்கப்பட்டு அர்ஜுனன் மயக்கமுற்ற பொழுது கர்ணன் தவறி கூட ஒரு கணையை அர்ஜுனனின் மீது பயன்படுத்தவில்லை. மாறாக தேரை தூக்கவே முயற்சி செய்யும் அம்மான்ஜ்சியாகவே இருந்தான்.

நிற்க இங்கு இந்த அர்ஜுனனின் பலவீனத்தை பயன்படுத்தி ஏற்கனேவே அர்ஜுனனனிடம் பெற்ற தோல்வியால் முறையற்ற போர்விதியில் அதை பழிதீர்க்க(இயல்பாக மிகப்பெருபாலோர்க்கு எழும் உணர்வு) நினைக்கவில்லை. மேலும் தன்னுடைய மரணம் உறுதி என்று உணர்தே இருந்தான். அத்தகைய கடுமையான  மனநிலையிலும் அர்ஜுனனின் அந்த பலவீன நிலையை பயன்படுத்தவில்லை. இது அவன் தன்னுடைய வீரத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையையே இது காட்டுகிறது.
 
சரி அர்ஜுனனனிடம் ஏற்கனவே தோல்வியடைந்த கர்ணனே இத்தகைய உயர்வான மனநிலையில் இருக்கும்பொழுது ஏற்கனவே வெற்றிபெற்ற அர்ஜூனன் எப்படி இருக்க வேண்டும்!!!! மயக்கம் தெளிந்து எழுந்த அர்ஜுனன் தான் மயங்கிய நிலையில் தன்னை தாக்காமல் விட்டு தேரை தூக்கிக் கொண்டிருக்கும் கர்ணனை போரின் விதிமுறைகளைமீறி தாக்கி அழித்தான்.

இங்கு
கர்ணன் ஏற்கணவே செய்த தவறுகளுக்கு தான் அவ்வாறு தாக்கி அழித்தான் என்றால்..??? போர் விதிமுறைகளுக்கு உட்பட்டு தாக்கி அழிக்க முடியாதா???

மேலும் வில்வித்தையில் முதன்மையான அர்ஜுனனுக்கு இந்த காரணங்கள் ஏற்ப்புப்டையதாக இருக்குமா????

மயங்கிய தன்னை தாக்காமல் விட்ட கர்ணனுக்கு அவன் தேரை தூக்கும் பொழுது அவனுக்கு காட்டும் வீரம் சரிதான????

கர்ணனுக்கு வேண்டுமானாலும் தன்னுடைய மரணம் உறுதி என்று உணர்ந்திருந்தான் மற்றும் இரு பிராமணர்களின் சாபம் என்று மிக தவிர்க்கமுடியாத கொடுமையான சூழ்நிலையில் இருந்தான் அப்படியிருந்தும் அவன்..!!!!!! இதைவிட அப்படியென்ன அர்ஜுனனுக்கு உயர்வான காரணங்கள் இருந்ததது போர் விதிமுறைகளை மீறி கர்ணனை கொல்ல?????

நன்றி.....
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

Arul Selva Perarasan
Administrator
நண்பரே!

தனது கையால் தகனம் செய்யப்படப் போகும் கர்ணன் இறப்பது நேர்மையான முறையில் இருக்கக்கூடாது என்று அந்தப் பரந்தாமனே நினைத்திருக்கும்போது வேறு என்ன நடக்க முடியும். அர்ஜுனன் நேர்மையானப் போரையே விரும்பினான். வழிகாட்டியது கிருஷ்ணனே!

நேர்மையான முறையில் கர்ணன் கொல்லப்பட்டிருந்தால், இன்று வரை கர்ணனின் புகழ் நிலைத்திருக்குமா? கர்ணனுக்கு பெருமை சேர்க்கவே, கர்ணனின் புகழ் உலகம் உள்ளளவும் நிலைக்கவே, கிருஷ்ணன் இந்த ஏற்பாட்டைச் செய்தான் என்று கூட நாம் நம்பலாமே.

கிருஷ்ணனின் தூண்டுதலால்தானே அர்ஜுனன் அந்தச் செயலைச் செய்தான். அப்படிப் பார்த்தால் கிருஷ்ணன்தானே குற்றவாளி.

கடமையைச் செய்வதில் தான் உனக்குப் பங்கிருக்கிறது. பலன் என்னுடையது என்கிறார் கிருஷ்ணன் பகவத் கீதையில். ஆகையால் இந்தப் பாவமும் போகட்டும் கண்ணனுக்கே.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

மெய்யப்ப அருண்
//தனது கையால் தகனம் செய்யப்படப் போகும் கர்ணன் இறப்பது நேர்மையான முறையில் இருக்கக்கூடாது என்று அந்தப் பரந்தாமனே நினைத்திருக்கும்போது வேறு என்ன நடக்க முடியும்.//

இப்படி வியாச பாரதத்தில் எங்குள்ளது எனபதை எனக்கு குறிப்பிட முடியுமா..??

ஒரு சிறு வேண்டுகோள் அண்ணா என் சாம்சங் திறன்பெசியில் இந்த விவாதப்ப்குதியை மட்டும் காணமுடிவதில்லை. மற்றவற்றிலும் சோதனை செய்து பார்த்துவிட்டேன் இதே நிலை தான். எனவே இந்த விவாதப்பகுதி பக்கத்தை மட்டும் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா என்று பாருங்கள். ஏனெனில் இப்பொழுது பெரும்பாலானோர் திறன்பேசி வழியாகவே இணையத்தை பயன்படுத்துகின்றனர்.

வாழ்த்துகள் மற்றும் நன்றியண்ணா.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

தமிழ் வள்ளுவர்
In reply to this post by Arul Selva Perarasan
ஐயா வணக்கம்,

எனது எண்ணம் யாதெனில் கர்ணனுக்கு நிகரான வீரன் வேறு யாருமில்லை.

கர்ணனின் பலவீனங்கள் மற்றும் சாபங்கள் பின்வருமாறு:-

1.கர்ணனின் சாவிற்கு முதல் மற்றும் முக்கிய காரணம் முனிவர் துர்வாசா ஆவார். அபர் குந்தியை ஆசீர்வதிக்கையில் மந்திரத்துடன் அவரது விருப்பத்திற்கு எந்த கடவுளையும் அழைக்கலாம் என்று ஆசீர்வதித்த அவர், அந்த மந்திரத்தின் பின்விளைவை அவரிடம் சொல்லவில்லை. எனவே, குந்தி அந்த மந்திரத்தின் பின்விளைவைப் பற்றிய விழிப்புணர்வின்றி தனது திருமணத்திற்கு முன்னதாக சூரியனை அழைத்தார். திடீர் பயத்தாலும் தொடர்ந்த தீய வழியினாலும் குழந்தை உருவானது. தேரோட்டி அதிரதாவினால் அவர் வளர்க்கப்பட்டதால் கர்ணனை க்ஷத்ரியராக ஏற்றுக்கொள்ளல் மறுக்கப்பட்டது. அஸ்தினாப்பூரின் சிம்மாசனத்திற்குரிய உண்மையான நபர் கர்ணன், யூதிஷ்திராவோ அல்லது துரியோதனனோ அல்ல, ஆனால் அவரது பிறப்பு ரகசியமாக வைக்கப்பட்டதால் இது அறியப்படவில்லை.

2.இராட்சத தேனீ வடிவத்தில் இருந்த பகவான் இந்திரன், கர்ணனின் தொடையைக் குடைந்தார். இது குரு பரசுராமரைக் கோபப்படுத்தியது, அவர் தொடர்ந்து கர்ணனை தனது சாதி பற்றி பொய்யுரைத்ததற்காக சாபமிட்டார். பின்னர் குருக்ஷேத்திராவில் நடக்கவிருந்த படுகொலைபற்றி பரசுராமருக்கு தெரியும் என்பது வெளியிடப்பட்டது. அர்ஜூனனுடன் போரிடும் முன்னர் இரவில் அவர் கர்ணனிடம் கனவில், உறுதியாக கௌரவர்களைத் தோற்கடிக்கவே கொடூரமான முறையில் அவரை நோக்கத்தோடு சாபமிட்டதாக விவரித்தார், கர்ணன் சாபத்தை பணிவுடன் ஏற்றுக்கொண்டதால், அவர் இறப்புக்குப் பின்னரும் எக்காலத்திற்கும் அழியாத புகழைக் கொண்டிருப்பார் என்று ஆசிர்வதித்தார்.

3.பசுவின் உரிமையாளரான பிராமணனின் சாபம்.

4.பூமாதேவியின் சாபம்.

5.பகவான் இந்திரனுக்கு தனது கவசம் மற்றும் குண்டலத்தை தன்னிடமிருந்து தானமாக அளித்தல், இந்த முறை அவர் பிச்சைக்காரராக மாறுவேடமிட்டிருந்தார், ஏனெனில் அவரது அதீத பெருந்தன்மைக் குணம்.

6.ஷக்தி ஆயுதத்தை கடோட்கச்சாவின் மீது செயல்படுத்தியது.

7.அவரது தாய் குந்திதேவிக்கு அளித்த அவரது இரண்டு சத்தியங்கள்.

8.அர்ஜூனனை கர்ணனின் நாகஸ்திரத்திலிருந்து காக்க கிருஷ்ணன் தேரை அழுத்தியது

9.குந்திக்கு தான் அளித்த இரண்டாவது சத்தியத்தின் பொருட்டு "நாகஸ்திரத்தை" இரண்டாவது முறை பயன்படுத்தாதது.

10.ஷால்யா, போர் மிகமுக்கியமான கட்டத்தில் இருந்த போது நடுவழியில் கர்ணனின் தேரை விட்டுச்சென்ற தேரோட்டி.

11.மகாபாரதப் போரின் ஆரம்பத்தில் கர்ணனுக்கு பாண்டவர்கள் தனது சகோதரர்கள் என்பது கிருஷ்ணர் மூலமாகத் தெரிந்தபோது, பாண்டவர்களின் மீதான கர்ணனின் பழிவாங்கும் எண்ணம் பயனற்றதானது. பாண்டவர்களின் மீதான கர்ணனின் பகைமை மறைந்தது. ஆனால், துரியோதனனின் மீதான விசுவாசத்தின் அடிப்படையில், கர்ணன் போரில் அர்ஜூனனுக்கு எதிராகப் போரிட முடிவுசெய்தார். மாறாக, பாண்டவர்கள் யாருக்கும் கர்ணன் அவர்களின் சகோதரர் என்பது கர்ணன் இறந்த பின்னர் வரையில் தெரியாது.

12.பகவான் கிருஷ்ணர், கர்ணன் தனது தேரை சேற்றிலிருந்து வெளியே கொண்டுவரும் போது அவரைக் கொல்லும்படி அர்ஜூனனை வற்புறுத்தினார்.

13.கர்ணன் ஆரம்பத்திலிருந்தே தனது தெய்வீக அம்பான விஜயாவை பயன்படுத்தவில்லை.

14.கிருஷ்ணர் அர்ஜூனனை கர்ணனிடமிருந்து மூன்று முறை ஷக்தி, பார்கவா அஸ்திரா மற்றும் நாகாஸ்திரா ஆகியவற்றிலிருந்து காப்பாற்றினார்.


கர்ணனின் பக்கம் இத்துணை பலவீனங்கள் இருந்தும், தருமனை கர்ணன் தன் பாணங்களால் வதைத்துப் பாசறைக்கு அனுப்பிய பின் அவர் மீண்டும் அருச்சுனனால் தேற்றப்பட்டு, அருச்சுனன் கர்ணனை எதிர்க்கக் கிளம்பும் சமயம் " அர்ச்சுனா, நீ போரிடப் போகும் கர்ணனுக்கு நிகரான வீரன் வேறு யாருமிலர். நீ சிறிது கவனக் குறைவாக இருந்தாலும் கர்ணனால் கொல்லப்படுவாய்" என கண்ணன் உரைத்த போது அருச்சுனனுக்குப் பயத்தால் முகம் வியர்த்தது என வியாசர் கூறுகின்றார். இதனின்று கர்ணன் அருச்சுனனுக்கே எவ்வளவு பயங்கரமான சிம்ம சொப்பனமாய் விளங்கியுள்ளான் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

தொடர்ந்து கர்ணன் தேரை மேலெழுப்ப முயற்சிக்கும் சமயம், ஒரு பாணத்தை அருச்சுனன் மேல் விடுவதும் அதனால் அவன் நிலை குலையும் போது "அர்ச்சுனா முதலில் போய் முறையாக போர் பயிற்சியைக் கற்றுக் கொண்டு வா" என ஏளனம் பேசுவதுமாக இருந்தான் என வியாச பாரதம் உரைக்கின்றது. இதனின்று கர்ணனின் பராக்கிரமத்தை உணரலாம்.

தொடர்ந்து பாண்டவ வீரர்களை வதம் செய்த எண்ணிக்கைப் பட்டியலில் வீடுமர் மற்றும் துரோணரைப்  போல் இரு மடங்கு சேனையை கர்ணன் கொன்று குவித்திருக்கிறான். அவனது பராக்கிரமத்துக்கு ஈடு இணையும் உள்ளதோ?

Bhishma killed nearly 1.27 Akshouhinis
Drona killed nearly 1.00 Akshouhinis
Karna killed nearly 2.37 Akshouhinis
Salya killed nearly 0.29 Akshouhinis
Ashwatthama killed nearly 0.09 Akshouhinis
Rest of the warriors 1.98 Akshouhinis

ஆக அவனோடு யார் அறவழி நின்று போர் புரிந்திருப்பினும் வெற்றி கொள்ள முடியாதவன் என்பது வெள்ளிடை மலை. அவனுக்கு நிகர் அவனே!

அடுத்து, திரு.அருட்செல்வ பேரரசன் அவர்களே,

சென்ற பதிவில் தாங்கள் அசுவத்தாமனின் இரவு நேரத் தாக்குதல் இகழத்தக்கது என கூறியிருந்தீர்கள். கருவினின்ற சிசுவைக் கொன்ற பாதகன் என உரைத்திருந்தீகள். அதைப் பற்றிய எனது கருத்து.

தொடக்கம் தொட்டே போரைத் தவிர்க்க போராடியவனும் பாண்டவருக்காக வாதாடியவனுமாகிய அசுவத்தாமன், துரியோதனன் காட்டு நரிகளுக்கு இரையாகிக் கொண்டிருப்பதைக் கண்டு எத்துணை மனம் வருந்தியிருந்தால்; பொங்கியிருந்தால் அவன் அத்துணை ஆவேசத் தாக்குதலை நடத்தியிருப்பான். உண்மையில் கூறப் போனால் துரியோதனனின் பால் கொண்ட விசுவாசத்தில் எள்ளளவேனும் குறையாதிருந்தவர்களுள் அசுவத்தாமனே முதலிடம் வகிக்கிறான்.

இரவு தாக்குதலுக்குச் சென்ற அசுவத்தாமனுக்குச் சக்தியும் வாளும் அளித்தது யார்? அந்த சர்வேசுவரனன்றோ? ஆக இக்குற்றத்தை அசுவத்தாமன் மேல் எவ்வாறு சொல்ல முடியம்?

அடுத்ததாக, அதரும வழியில் போர் புரிந்த பாண்டவருக்கு என்ன தண்டனை என்ற கேள்விக்கு எனக்கொரு பதில் கிடைத்தது. போருக்குப் பிறகு சொந்தங்களை இழந்து அனைத்துமிருந்தும் தனிமையில் வாழந்தனரே, அதுவே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்று நான் கருதுகிறேன். தனிமையின் இன்னலில் தருமர் எத்துணை துயருற்றிருந்தால் தவமியற்ற காடு செல்வோமென அவர் முடிவு கட்டியிருப்பார்? சுற்றம் அனைத்தையும் இழந்து வாழ்வதைக் காட்டிலும் பெரிய துன்பமும் உள்ளதோ?
 
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

Arul Selva Perarasan
Administrator
In reply to this post by மெய்யப்ப அருண்
சகோதரர் திரு.மெய்யபன் அருண் அவர்களே,

இந்த செய்தி நான் ஏற்கனவே படித்தது. ஞாபகத்தில் வைத்திருந்ததை நான் சொன்னேன்.
ஆனால், அது கங்குலியின் The Mahabharata புத்தகத்தில் இல்லை எனத் தெரிகிறது. அது பல சமஸ்கிருத மூலங்களில் இருப்பதாகவும், ஆனால் அது இடைச்செருகல் என்று கருதப்படுவதாகவும் அறிய முடிகிறது. ஆகையால் நாம் மொழிபெயர்க்கும் போதும் அந்தப் பகுதி வராது.

விக்கியின் இந்தப் பக்கத்தில்: http://en.wikipedia.org/wiki/Karna

According to Karna's dying wish, Karna's Antim Sanskar was performed by none other than Lord Krishna himself. This was the honour given to him by Lord Krishna. Karna is the only person in the Mahābhārata epic who receives this great honour. (This is not mentioned in the original, but is a popular addition made by later authors)[13-Sacred texts - Kisari Mohan Ganguli's "The Mahabharata]

என்று இருக்கிறது.

முழு மஹாபாரதத்தின் ஒரு பகுதியான விவாதமேடை, திறன்பேசியில் தெரியவில்லை என்று சொன்னீர்கள். அதுகுறித்து என்னவென்று பார்க்கிறேன். தொழில்நுட்பம் சம்பந்தமான தடை ஏதேனும் இருந்தால் அதை எனக்குச் சரி செய்யத் தெரியாது. முடிந்த வரை பார்க்கிறேன்.

நன்றி.

அன்புடன்,
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

Arul Selva Perarasan
Administrator
In reply to this post by தமிழ் வள்ளுவர்
நண்பர் திரு.தமிழ் வள்ளுவர் அவர்களே,

அருமையான நீண்ட பதிவு.  விவாத மேடையின் இந்தப் பதிவுகள் மட்டுமே பல ஆய்வுகளுக்குப் பயன்படும் வண்ணம் உள்ளது.

//அஸ்தினாப்பூரின் சிம்மாசனத்திற்குரிய உண்மையான நபர் கர்ணன், யூதிஷ்திராவோ அல்லது துரியோதனனோ அல்ல//

பாண்டுவுக்கு மணமுடித்துக்கொடுக்கப்பட்ட பிறகு கர்ணன் பிறந்திருந்தால் அது சரிதான். பாண்டுவுக்கு மணமுடிப்பதற்கு முன்னர் கர்ணன் பிறந்ததால் இதில் அறத்தின் விதி என்ன?

//கர்ணன் சாபத்தை பணிவுடன் ஏற்றுக்கொண்டதால், அவர் இறப்புக்குப் பின்னரும் எக்காலத்திற்கும் அழியாத புகழைக் கொண்டிருப்பார் என்று ஆசிர்வதித்தார். //

அதனால்தான் இன்னும் கர்ணனின் புகழ் மங்காமல் இருக்கிறது.

//கர்ணன் ஆரம்பத்திலிருந்தே தனது தெய்வீக அம்பான விஜயாவை பயன்படுத்தவில்லை. //

ஏன் பயன்படுத்தவில்லை என்பதற்கு ஏதாவது விளக்கம் இருக்கிறதா நண்பரே. இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

//போரைத் தவிர்க்க போராடியவனும் பாண்டவருக்காக வாதாடியவனுமாகிய அசுவத்தாமன், துரியோதனன் காட்டு நரிகளுக்கு இரையாகிக் கொண்டிருப்பதைக் கண்டு எத்துணை மனம் வருந்தியிருந்தால்; பொங்கியிருந்தால் அவன் அத்துணை ஆவேசத் தாக்குதலை நடத்தியிருப்பான். உண்மையில் கூறப் போனால் துரியோதனனின் பால் கொண்ட விசுவாசத்தில் எள்ளளவேனும் குறையாதிருந்தவர்களுள் அசுவத்தாமனே முதலிடம் வகிக்கிறான். //

நீங்கள் சொல்லும் சமாதானம் ஓரளவு சரிதான் என்றாலும், கருவில் இருக்கும் குழந்தையைக் கூட கொல்லுதலும், உறங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்லுதலும் எந்த அறத்திலும் சாராது என்றே கருதுகிறேன்.

//போருக்குப் பிறகு சொந்தங்களை இழந்து அனைத்துமிருந்தும் தனிமையில் வாழந்தனரே, அதுவே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்று நான் கருதுகிறேன். தனிமையின் இன்னலில் தருமர் எத்துணை துயருற்றிருந்தால் தவமியற்ற காடு செல்வோமென அவர் முடிவு கட்டியிருப்பார்? சுற்றம் அனைத்தையும் இழந்து வாழ்வதைக் காட்டிலும் பெரிய துன்பமும் உள்ளதோ? //

நன்று. சரிதான்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

தமிழ் வள்ளுவர்
This post was updated on .
ஐயா, வணக்கம்.

கர்ணன் தனது விஜயா அம்பினைப் பயன் படுத்தாததற்கு இறைவன் சித்தமே காரணம் என கூறுவதைக் காட்டிலும் வேறு என்ன சொல்ல முடியும்?

அடுத்து, அசுவத்தாமன் பாண்டவ வீரர்களைக் கொல்ல சென்ற சமயம், அக்கோட்டையைப் பாதுகாத்துக் கொண்டிருந்த பூதத்தை அவனால் கடக்க முடியவில்லை. உடனே அங்கு சிதை மூட்டி ஈசனுக்கு தன்னை அர்பணம் செய்ய விழையும் சமயம் ஈசன்தானே காட்சியளித்து அவ்வீரர்களைக் கொல்லும் சக்தி படைத்த வாளினை அசுவத்தாமனுக்கு வழங்கியது. ஆக அக்குற்றத்தில் பாதி பங்கு ஈசனுக்கும் உள்ளதல்லவா?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?

மெய்யப்ப அருண்
In reply to this post by Arul Selva Perarasan
இல்லையண்ணா..,மகாபாரதம் நிகழ்ந்த காலத்திலும், மற்றும் நிகழ்ந்த பகுதிகளான வடஇந்திய பகுதிகளில் கடைபிடித்த காலச்சார-சாஸ்த்திரங்களின்  படி ஒரு பெண் முதலில் தேவர்களுக்கு மனைவியான பின்பே ஒரு மனிதனுக்கு மனைவியாகின்றால். எனவே குழந்தை பெற்ற பிறகும் கன்னித்தன்மையை இழக்காததுனாலும், தேவர்களுக்கு பிறகே மனிதன் என்பதாலும் கர்ணன் அப்பொழுது கடைபிடித்த காலச்சார – சாஸ்த்திரங்களின் படி பாண்டுவின் மூத்த மகனாகின்றான். என்று கிருஷ்ணன் கர்ணனை தனிமையில் சந்தித்து அவனுடைய பிறப்பின் இரகசியத்தை சொல்லும் பொழுது இத்தகைய அரசாளும் வாய்ப்பையும் சேர்த்து சொல்கின்றான். மேலும் திரௌபதியை ஆறாம் காலத்தில் சேரலாம் என்றும் கூறுகின்றான். அனால் கர்ணன் எதற்கும் மயங்கவில்லை.
123